ஏவுகணை ஒப்பந்தம்: மலேசியா - நார்வே இடையே பதற்றம் அதிகரிப்பு

ஏவுகணை ஒப்பந்தம்: மலேசியா - நார்வே இடையே பதற்றம் அதிகரிப்பு

2 mins read
fcb1bc64-4d9b-49ec-a559-58f8deb78e58
இவ்வாண்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட நார்வே கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: நார்வே, அதன் கடற்படைத் தாக்குதல் ஏவுகணை தொடர்பான உரிமங்களை ரத்து செய்துள்ளது.

இதையடுத்து மலேசியாவுக்கான ஆயுத ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இதனால் நார்வேக்கும் மலேசியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

நார்வே தனது நவீன தற்காப்பு தொழில்நுட்பங்களை நட்பு நாடுகளுக்கும் நெருங்கிய பங்காளிக்கும் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தி வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு புளூம்பெர்க்குக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தது.

இதன் காரணமாக, மலேசியாவுக்குக் குறிப்பிட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான சில உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன என்று அது விளக்கியது.

“இது முற்றிலும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை நார்வே பின்பற்றுவதால் ஏற்பட்டது. இதில் மலேசியா பாதிக்கப்பட்டது வருத்தத்துக்குரியது,” என்று நார்வே அமைச்சு தெரிவித்தது.

ஆனால் நார்வேயின் நடவடிக்கையை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடுமையாகச் சாடினார்.

ஐரோப்பியத் தற்காப்பு ஆயுத விநியோகிப்பாளர் மீதுள்ள நம்பிக்கையை இது சீர்குலைத்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

மலேசியா தனது போர்க்கப்பல் திட்டத்திற்காக நார்வேயிடமிருந்து கடற்படை ஏவுகணை அமைப்பு, ஏவுதளச் சாதனங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த நிலையில், ஏற்றுமதிக்கான விதிமுறைகளை நார்வே மாற்றியதால் ஒப்பந்தம் ரத்தானது.

நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் தொலைபேசியில் பேசியபோது தமது நாட்டின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாக திரு அன்வார் குறிப்பிட்டார்.

அண்மை ஆண்டுகளாக ஐரோப்பாவிலும் உலக அளவிலும் பாதுகாப்புக் கொள்கைகள் குறிப்பிடும்படியாக மாறி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நார்வேயும் முக்கிய ஆயுதங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மலேசியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒப்பந்தம் 2011ல் கையெழுத்தானது. அதன்படி முதல் போர்க் கப்பல் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விநியோகிக்கப்படவிருந்தது. ஆறு போர்க் கப்பல்களிலிருந்து ஐந்து போர்க் கப்பல்களாகக் குறைக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் இருந்த அதற்கான செலவு 9 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 11.2 பில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்