பயனீட்டாளர் மானியத் திட்டத்துக்குத் தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்

பயனீட்டாளர் மானியத் திட்டத்துக்குத் தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்

2 mins read
243f6656-246e-44cd-903c-9b0c00006bbd
குறிப்பிட்ட சில பொருள்களின் விலையில் 60 விழுக்காட்டை அரசாங்கமே மானியமாக வழங்கும் எனத் தாய்லாந்தின் நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 19) தெரிவித்துள்ளது. - படம்: இபிஏ

பேங்காக்: மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏறத்தாழ 43 மில்லியன் பேருக்குப் பயனளிக்கும் பயனீட்டாளர் மானியத் திட்டத்துக்குத் தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், குறிப்பிட்ட சில பொருள்களின் விலையில் 60 விழுக்காட்டை அரசாங்கமே மானியமாக வழங்கும் என அந்நாட்டின் நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 19) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளுக்கு வழங்கப்படும் மானியத்தின் அதிகபட்சத் தொகை 220 பாட்.

தாய்லாந்து அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் புதிய கடனுயர்வு, ஒரே தவணையாகப் பெறப்படாமல், பயனீட்டாளர் மானியத் திட்டத்தின் செலவினங்களுக்கு ஏற்ப படிப்படியாகத் திரட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சந்தையில் போதிய பணப்புழக்கம் இருப்பதால், இந்த 200 பில்லியன் பாட் நிதியானது 1.5 விழுக்காட்டுக்கும் குறைவான வட்டி விகிதத்தில் தவணைக் கடன்கள் மற்றும் உறுதிமொழிச் சீட்டுகள் மூலம் திரட்டப்படும் என்று தாய்லாந்தின் பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் தலைவர் திருமதி ஜிந்தாரத் விரியாதவீகுல் கூறினார்.

இக்கடன் காரணமாக, வரும் செப்டம்பர் மாத இறுதியில் நாட்டின் பொதுக் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 68 விழுக்காடாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வரம்பான 70 விழுக்காட்டுக்குள் கட்டுப்பட்டே இருக்கும்.

இந்தப் புதிய கடனுயர்வு, தற்போது சட்ட ரீதியான சவாலை எதிர்கொண்டுள்ள 400 பில்லியன் பாட் கடன் ஆணைச் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.

“இந்தப் பொருளியல் நெருக்கடியை அப்படியே நீடிக்கவிட்டால், வணிகங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் வேலைகளை இழக்க நேரிடும். இதனால் நாட்டின் பொருளியல் நீண்ட காலத்துக்கு வீழ்ச்சியடைந்துவிடும் என்பதால் இந்தத் தற்காப்பு நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது,” என்று நிதி அமைச்சர் ஏக்நிதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்