உக்ரேன் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ரஷ்யாவில் நால்வர் உயிரிழப்பு

உக்ரேன் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ரஷ்யாவில் நால்வர் உயிரிழப்பு

1 mins read
682d4ce3-ba3f-470d-bfb8-7708de831aab
மே 17ஆம் தேதி, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள நாரோ-ஃபோமின்ஸ்க் மாவட்டத்தின் சுபோட்டினோ கிராமத்தில் உக்ரேன் நடத்திய வான்வழித் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீடு. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்ய வட்டாரங்களைக் குறிவைத்து உக்ரேன் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலான காலத்தில் ரஷ்யா எதிர்கொண்ட ஆகப் பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.

உயிரிழந்தோரில் மூவர் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பெல்கோரோட் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) தெரிவித்தனர்.

மாஸ்கோவுக்கு வடக்கே உள்ள கிம்கி பகுதியில் வீடு ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக மாஸ்கோ வட்டார ஆளுநர் ஆண்ட்ரே வோரோபியோவ் தெரிவித்தார்.

அங்குள்ள இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடிய மற்றொரு நபரை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், மிதிஷ்சி மாவட்டத்தின் பொகோரெல்கி கிராமத்தில் ஆடவர் இருவர் கொல்லப்பட்டனர் என்றும் அத்தாக்குதலில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்தன என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மாஸ்கோவை நோக்கி வந்த 81 ஆளில்லா வானூர்திகளை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நகர மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமான ‘டாஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்