கலாசார விழிப்புணர்வைப் புகட்டிய பயிலரங்கு

கலாசார விழிப்புணர்வைப் புகட்டிய பயிலரங்கு

2 mins read
9a5116d2-1cd7-4ec2-961b-79c090d8d619
கலாசாரங்கள் குறித்த மூன்று நாள் பயிலரங்கில் ஈடுபட்ட சிங்கப்பூர் இளையர்கள். - படம்: யூத் சர்க்கிள்ஸ்

யுனெஸ்கோ அமைப்பு முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘அமைதிக்கான இளையர்கள்’ பன்னாட்டுக் கலாசாரத் தலைமைத்துவத் திட்டத்தின் ஓர் அங்கமாக, சிங்கப்பூரில் ‘யூத் சர்க்கிள்ஸ்’ எனும் நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.

‘கலாசாரங்களைக் கடந்த கதைகள்’ என்ற கருப்பொருளைக் கொண்ட அம்முயற்சியில் 23 இளையர்கள் பங்கேற்றனர்.

மூன்று நாள் பயிலரங்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கைப்பேசிவழி புகைப்படம் எடுத்தல், கலாசாரம், தலைமைத்துவம் ஆகிய தலைப்புகளிலான கலந்துரையாடல்களில் இளையர்கள் ஈடுபட்டனர்.

பயிலரங்கின் இறுதிக் கட்டமாக இளையர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும், ‘படா காப்ரா’ அமைப்பும் ‘ஸ்கேப்’ அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த ‘ஹைப்பனேட்டட்’ நிகழ்ச்சியில் கண்காட்சியாகப் படைக்கப்பட்டன.

‘ஸ்கேப்’ வளாகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற அந்தக் கண்காட்சி மே 15ஆம் தேதிவரை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான கட்கர் தோஷாஜா சந்தோஷ், 19, “எங்களது கலாசாரங்களின் சாராம்சத்தை முழுமையாக வெளிக்கொணர்வதே இந்தப் புகைப்படங்களின் முக்கிய நோக்கம்,” என்று கூறினார்.

“பிற கலாசார விழாக்களைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

தமது புகைப்படம் குறித்து மற்றப் பங்கேற்பாளர்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொண்ட கட்கர் தோஷாஜா சந்தோஷ்.
தமது புகைப்படம் குறித்து மற்றப் பங்கேற்பாளர்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொண்ட கட்கர் தோஷாஜா சந்தோஷ். - படம்: யூத் சர்க்கிள்ஸ்

மற்றொரு பங்கேற்பாளரான சமதி ராஜபக்சே, 18, “நான் இந்தக் கண்காட்சிக்காக எனது இலங்கைக் கலாசாரத்தில் உற்றார் உறவினரின் நினைவுநாளின்போது செய்யும் சடங்கைப் பதிவுசெய்தேன்,” என்று கூறினார்.

“பொதுவாக, இறப்பு சார்ந்த சடங்குகள் மனத்திற்குப் பாரமாக அமைந்தாலும், ‘தானா’ என்ற அந்தச் சடங்கு மனத்திற்கு ஆறுதல் அளிக்கும் நோக்குடன் செய்யப்படுகிறது,” என்றும் அவர் சொன்னார்.

தமது புகைப்படம்வழி ‘தானா’ என்ற கலாசாரச் சடங்கைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார் சமதி ராஜபக்சே (நடுவில்).
தமது புகைப்படம்வழி ‘தானா’ என்ற கலாசாரச் சடங்கைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார் சமதி ராஜபக்சே (நடுவில்). - படம்: யூத் சர்க்கிள்ஸ்

கலாசாரம் கடந்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 18 வயது மாணவர் கண்ணன் ஆதித்யா, தமது சீன நண்பருடன் உணவு உண்ணும் புகைப்படத்தைக் கண்காட்சிக்காக வழங்கினார்.

“சீனப் புத்தாண்டின்போது சீனர்கள் தங்கள் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதை முதன்மையாகக் கொண்டு செயல்படுவர் என்பதை என் நண்பரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

“சீனப் புத்தாண்டு என்பது வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டுமன்று, நெடுநாள்கள் பிரிந்திருந்த உறவுகளை இணைப்பதற்குமானது என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார் அவர்.

தமது சீன நண்பரின் உதவியால், சீனக் கலாசாரத்தை ஆழமாகப் புரிந்துகொண்டார் கண்ணன் ஆதித்யா.
தமது சீன நண்பரின் உதவியால், சீனக் கலாசாரத்தை ஆழமாகப் புரிந்துகொண்டார் கண்ணன் ஆதித்யா. - படம்: யூத் சர்க்கிள்ஸ்

கைத்தொலைபேசிவழி புகைப்படங்கள் எடுக்கும் அனுபவம், வாழ்வில் பொதுவாக கவனிக்கத் தவறும் சிறு தொடர்புகள், பழக்கங்கள், செயல்கள் போன்றவற்றைக் கவனிக்கத் தூண்டியதாகக் கூறினார் 18 வயது மாணவி சஹானா சர்மா.

“கலாசாரம் என்பது விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் மட்டும் உட்பட்டது அல்ல. நமது தினசரி நடவடிக்கைகளிலும் அது அடங்கியுள்ளது என்பதை இந்த அனுபவம்வழி கற்றேன்,” என்று அவர் கூறினார்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் ‘குரோத்பீன்ஸ்’ அமைப்பு நடத்திய கலந்துரையாடல்கள்வழி பிற கலாசாரங்கள் குறித்தும் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆழமாகப் புரிந்துகொண்டதாகக் கூறினர்.

வரும் மாதங்களில் அந்தப் புகைப்படக் கண்காட்சி இணையக் கண்காட்சியாக மாற்றம் காணும் என்றும் ஜூலை மாதம் பிரேடல் ஹைட்ஸ் சமூக மன்றத்தில் அக்கண்காட்சி இடம்பெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்