இளையர்கள் அவசியம் காண வேண்டிய ‘ஆல்பட்ரோஸ்’ வரலாற்றுக் கண்காட்சி

இளையர்கள் அவசியம் காண வேண்டிய ‘ஆல்பட்ரோஸ்’ வரலாற்றுக் கண்காட்சி

3 mins read
2a399841-d470-468f-8aff-3c6f91cd42e7
‘ஆல்பட்ரோஸ்’ கண்காட்சியைக் காண வந்தோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

வரலாறு என்றாலே வெறும் பாடப்புத்தகங்களும் ஆவணப்படத் தொடர்களும்தானா? இந்தக் கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுவரும் ‘ஆல்பட்ரோஸ்’ (The Albatross) கண்காட்சி.

ஆங்கில மரபுத்தொடரில் ‘ஆல்பட்ரோஸ்’ என்பது ‘கழுத்தைச் சுற்றிய பெருஞ்சுமை’ என்பதைக் குறிக்கும்.

1960களில் மலேசியாவுடனான இணைப்பு சிங்கப்பூருக்கு ஒரு பெருஞ்சவாலாகவும் சுமையாகவும் மாறியபோது, அது தொடர்பான ரகசியப் பேச்சுவார்த்தைகள் அடங்கிய கோப்பிற்கு ‘ஆல்பட்ரோஸ்’ என்று பெயரிடப்பட்டது.

இது வழக்கமான கண்காட்சி என்று நினைத்துவிட வேண்டாம். இளையர்களைக் கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம், இருவழித்தொடர்பு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியன மூலம் வரலாற்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு புதிய அனுபவம்.

கண்காட்சி நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது. உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பது ‘அட்லஸ்’. சிங்கப்பூர் பிரிவினைக்கு முந்தைய 23 மாதங்களில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளை மையமாக வைத்து அந்தப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறையின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்ட வடிவத் திரை உள்ளது. ‘அட்லஸ் ஸ்பேஸ்-டைம் கிளாக்’ என்று அழைக்கப்படும் இத்திரை, இணைப்பு, பிரிவினைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் அந்தக் காலகட்டத்தில் எங்குச் சென்றார்கள், எங்கு இருந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

‘ரூம்’ பகுதியில் 22 நிமிடக் காணொளி ஒன்று திரையிடப்படுகிறது. பிரிவினைக்கு முந்தைய இறுதிக்கட்ட நிகழ்வுகள் இதில் அதே தோற்றத்துடன் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன், திரு லீ குவான் யூ கண்ணீர் சிந்திய அந்த உண்மையான காட்சிகளும் இணைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களைக் கண்கலங்க வைக்கிறது.

அடுத்ததாக நம்மை வரவேற்கிறது ‘ரெக்கார்ட்ஸ்’ பகுதி. இங்குதான் ‘ஆல்பட்ரோஸ்’ கோப்பின் பல ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. ரகசியக் காப்பு நீக்கப்பட்ட அதிகாரபூர்வ ஆவணங்கள், கையெழுத்துப் படிகளை இங்குக் காணலாம்.

அவற்றில் மிகவும் முக்கியமானது, 1965ல் அப்போதைய துணைப் பிரதமர் டாக்டர் டோ சின் சாய், மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு கைப்பட எழுதிய கடிதம்.

டாக்டர் டோ, எஸ். ராஜரத்தினம் ஆகியோர் தொடக்கத்தில் சிங்கப்பூர் பிரிவினைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயங்கினார்கள் என்பதையும் இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

துங்கு அப்துல் ரஹ்மானிடமிருந்து, ‘பிரிவினை அவசியமானது’ என்ற விளக்கக் கடிதம் வந்த பிறகே அவர்கள் மனம் மாறினர்.

கண்காட்சியின் நிறைவுப் பகுதியாக அமைந்திருப்பது ‘சாட்புக்’. இளையர்கள் மிகவும் ரசித்த, அதிகம் பொழுதுபோக்கும் பகுதி இதுதான்.

எதிர்காலத் தோற்றத்தைக் கொண்ட இந்த அறையில், பார்வையாளர்கள் பயன்படுத்துவதற்காகப் பல செயற்கை நுண்ணறிவுக் கணினிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள செயற்கை நுண்ணறிவு ‘சாட்பாட்’ உடன் உரையாடவும் வரலாறு குறித்த கேள்விகளைக் கேட்டு, உடனடி பதில்களைப் பெறவும் இளையர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

வழக்கமான ஏஐ போல பொதுவான இணையத் தகவல்களைக் கொண்டு இயங்காமல், தேசிய நூலக வாரியம், மீடியாகார்ப் ஆகியவற்றின் அதிகாரபூர்வத் தகவல்களை மட்டுமே கொண்டு இது இயங்குகிறது. எனவே, இளையர்கள் பாதுகாப்பான முறையில் துல்லியமான வரலாற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது.

இன்றைய நவீன சிங்கப்பூரை அனுபவிக்கும் இளையர்கள், அதன் உருவாக்கம் எவ்வளவு சவாலானது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பு.

வரலாற்றை வெறும் பாடமாகப் படிக்காமல், தொழில்நுட்பத்தின் உதவியோடு ஓர் உணர்வுபூர்வமான அனுபவமாகப் பெற இக்கண்காட்சி வழிவகுக்கிறது. அனுமதி இலவசம்.

நண்பர்களுடன் சென்று, சிங்கப்பூரின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

குறிப்புச் சொற்கள்