லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஒளியூட்டு

லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஒளியூட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 6:30 am

2 mins read

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் லிட்டில் இந்தியாவில் கண்கவர் அலங்காரங்கள், வண்ணமயமான விளக்குகள், அழகிய ஆடைகள், அறுசுவைத் தின்பண்டங்கள் எனப் பலவற்றைக் காணலாம்.

அவற்றில் மக்கள் முக்கியமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீபாவளி ஒளியூட்டு விழா இவ்வாண்டு ‘தீபாவளித் திருவிழா’ என்ற பெயருடன் சனிக்கிழமை (அக்டோபர் 3) பர்ச் ரோட்டில் கோலாகலமாக நடந்தேறியது.

சீதையை ராமர் இலங்கையிலிருந்து மீட்டுவந்த வெற்றியைக் கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டிற்கான ஒளி அலங்காரங்கள் அமைந்துள்ளன.

அலங்காரங்களையும் கடந்து இவ்வாண்டு லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் மக்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது.

அந்நிகழ்ச்சிகளில் முக்கியமாக விளங்குகிறது மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மரபுடைமை நடைப்பயணம்.

மெய்நிகர் கண்ணாடிகள்வழி 1800களில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், லிட்டில் இந்தியா ஆர்க்கேட், தேக்கா சந்தை ஆகியவை எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை மக்கள் கண்டுகளிக்க இந்த அனுபவம் வழிவகுக்கிறது.

அக்டோபர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதிவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய மரபுடைமை நிலையத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.

அதில் கலந்துகொள்ள நுழைவுச்சீட்டு அவசியம். மூத்த குடிமக்களுக்கு அனுமதி இலவசம். மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகள் உண்டு.

இவ்வாண்டு புதிதாக ‘லிட்டில் இந்தியா நிழற்படச் சவால்’ என்ற அங்கமும் அறிமுகமாகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அந்த அங்கத்தில், லிட்டில் இந்தியாவில் உள்ள 10 இடங்கள் ஒவ்வொரு வாரமும் மக்களுக்குச் சமூக ஊடகம்வழி தெரிவிக்கப்படும்.

அவ்விடங்களுக்குச் சென்று சிறந்த நிழற்படங்களை எடுக்கும் பங்கேற்பாளர்கள் குலுக்கல் முறையில் $150 வரையிலான பற்றுச்சீட்டுகளை வெல்லலாம். நிழற்படச் சவாலுக்கு அனுமதி இலவசம்.

இந்தப் புதிய அம்சங்களுடன் மக்கள் குடும்பமாகப் பங்கேற்கப் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பித்தளை விளக்குகளைச் செதுக்குதல், களிமண் விளக்குகளுக்குச் சாயம் தீட்டுதல், மசாலா கலவைப் பயிலரங்கு முதலியவை அவற்றுள் சில.

மேலும் இசை நிகழ்ச்சிகள், ‘பிக் பஸ்’ தீபாவளிச் சுற்றுலாக்கள், சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ நடவடிக்கைகள் முதலியவற்றுடன் வழக்கம்போல் தீபாவளிச் சந்தையும் உண்டு.

அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை நீடிக்கும் நிகழ்ச்சிகளில் இளையர் முதல் மூத்தோர் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

சனிக்கிழமை (அக்டோபர் 3) பர்ச் ரோட்டில் கோலாகலமாக நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு விழா.
சனிக்கிழமை (அக்டோபர் 3) பர்ச் ரோட்டில் கோலாகலமாக நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு விழா. - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்