விறுவிறுப்பான விளையாட்டுகளின் வழி பாலர் பள்ளி மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை வளர்க்க ‘பயில் 2026’ நிகழ்ச்சி முற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
30 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சி தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றது.
பாடல்கள், வண்ணம்தீட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றின்மூலம் மாணவர்கள் தமிழ் எழுத்துகளைப் பற்றிக் கற்றுக்கொண்டனர்.
‘ஈடுபாடு’ என்னும் இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளுக்கு ஏற்ற விதமாக மாணவர்களுடன் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பெற்றோர் இத்தகைய நிகழ்ச்சிகளில் தங்கள் குழந்தைகளுடன் ஈடுபடும்போது தமிழை எளிமையான முறையில் எப்படிக் கொண்டு சேர்க்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வார்கள் என்ற நோக்கத்துடன் திருவாட்டி சுடர்மொழி முதலியப்பன் இப்பயிலரங்கை வழிநடத்தினார். 34 வயதான அவர் திட்டப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
நிகழ்ச்சியில் தமது பிள்ளையுடன் ஈடுபட்ட 30 வயது இல்லத்தரசி சரண்யா பாபு, இத்தகைய நிகழ்ச்சிகளின்வழி மாணவர்களுக்குத் தமிழில் அதிகம் பேசவும் புதிய வார்த்தைகளைக் கற்கவும் வாய்ப்பு கிடைப்பதாகப் பாராட்டினார்.

