நிலத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளச் சிங்கப்பூர், நில மீட்பு என்னும் முறையைப் பயன்படுத்தி வருகிறது.
கடல் உள்ள பகுதிகளில் மண்ணை நிரப்பிப் புதிய நிலங்களை உருவாக்கும் உத்தியாக இது திகழ்கிறது.
மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிக்க மக்கள் அஞ்சிய காலம் மலையேறிப்போய், இப்போது பலர் விரும்பி நாடும் இடமாக லாங் ஐலண்ட் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நில மீட்பு வழியாக உருவாக்கப்பட்ட ஜூரோங் தீவு போன்ற திட்டங்கள் இனிவரும் ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய தமது தேசிய தினப் பேரணி உரையின்போது குறிப்பிட்டார்.
ஜூரோங் தீவின் தெற்குப் பகுதியில் உள்ள தீவுக்கூட்டத்தையும் நில மீட்பு மூலம் ஒன்றிணைக்க அரசாங்கம் எண்ணுவதாகத் திரு வோங் கூறினார்.
செமக்காவ் என்ற தீவில், நிலத்திற்குள் எரிக்கப்பட்ட சாம்பல் நிரப்பப்படுகிறது. அத்துடன், புக்கோம், புலாவ் சுடோங் உள்ளிட்ட சிறு தீவுகள் இதில் இணைக்கப்படும்.
உருமாறும் செந்தோசா
தற்போது தனித்தனியாகத் திகழும் செந்தோசா, பிரானி ஆகிய தீவுகள், நில மீட்பு வழியாக ஒன்றிணைக்கப்படும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.
செழுமைமிக்க கடல்வாழ் உயிரினங்களும் அரியவகை நில அமைப்புகளும் செந்தோசாவின் மேற்குக் கரையில் அமைந்திருப்பதையும் அவர் சுட்டினார்.
லாங் தீவுக்கான தேவை
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் (East Coast Park) கடற்கரைக்கு அப்பால், கிட்டத்தட்ட 1,100 காற்பந்துத் திடல்களின் பரப்பளவைக் கொண்டு (கிட்டத்தட்ட 800 ஹெக்டேர்) புதிதாக உருவாக்கப்படவிருக்கும் நிலப்பகுதியே லாங் தீவு (Long Island) ஆகும்.
கடல் நீர்மட்ட உயர்விலிருந்து பாதுகாப்பு, புதிய நன்னீர் தேக்கத்தை உருவாக்குவது, எதிர்காலச் சமூகங்களுக்கான நிலத் தேவையை நிறைவுசெய்வது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
உலகளாவிய பருவநிலை மாற்றம் காரணமாக, கடல் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் தாழ்வான நிலப்பரப்பைக் கொண்ட தீவு என்பதால், கடல் அலைகளின் சீற்றமும் கனமழையும் இணைந்து கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும். லாங் தீவு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு, வலுவான அலைகளைத் தாங்கி, கடல் நீர் முதன்மை நிலப்பகுதிக்குள் புகாமல் தடுக்கும்.
ஒரு நாள், லாங் ஐலண்ட் எதிர்காலத் தலைமுறையினருக்கு மற்றொரு புதிய கடலோரப் பகுதியாக மாறும் என்றார் பிரதமர்.
“அவர்கள் அங்கே வாழ்வார்கள்; தங்கள் குடும்பங்களை வளர்ப்பார்கள். ஒருவேளை தங்கள் சொந்தப் பிள்ளைகளிடம், ‘இந்தப் பகுதியும்கூட ஒரு காலத்தில் கடலின் ஒரு பகுதியாக இருந்தது’ என்று கூறுவார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.


