ஒன்பது வயது ஆரவ், சுறுசுறுப்பு மிகுந்த சிறுவன். வீட்டுப் பாடங்களைக் கடகடவென முடிப்பவன். ஆனால், வினாத்தாளின் விடைகளைச் சரிபார்க்கும் பொறுமையும் அக்கறையும் இல்லாததால் அவன் மதிப்பெண்களை இழக்கிறான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது தன் அண்டை வீட்டாரான திருவாட்டி சலீமா, தமது பூச்செடிகளைப் பராமரித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.
அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் திருவாட்டி சலீமா, வாசலுக்கு வெளியில் இருக்கும் நடைபாதை ஓரமாகச் செடிகளை வைத்து வளர்க்கிறார்.
செடிகள் பல வண்ணங்களில் பூத்திருப்பதைக் கண்ட ஆரவ், “இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. நானும் மலர்ச்செடி ஒன்றை வளர்க்க ஆசைப்படுகிறேன்,” என்று கூறினான்.
சிரித்தவாறு கூறிய திருவாட்டி சலீமா, “ஆரவ், செடியைப் பராமரிப்பது என்பது ஒரு பொறுப்பு. வளர்த்துப் பராமரிப்பதற்குப் பொறுமை தேவை,” என்றார்.
ஆரவ் சிறுவன் என்பதால், எந்தப் பொறுப்பையும் ஏற்பதற்கு முன்னர் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்கவேண்டும் எனத் திருவாட்டி சலீமா கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஒப்புக்கொண்ட ஆரவ், தாயாரிடம் செடி வளர்ப்பதற்கான அனுமதியைப் பெற்றான்.
திருவாட்டி சலீமா, மண் நிரம்பிய தொட்டி ஒன்றையும் சூரியகாந்திப் பூ விதையையும் ஆரவ்விற்குத் தந்தார்.
சூரியகாந்தி பெரிய மலர் என்பதால் அது உடனடியாக வளராது எனத் திருவாட்டி சலீமா கூறினார். “உனது அவசரத்தை இதில் காட்டவேண்டாம். பொறுமையுடன் செயல்படு,” என்று அவர் அறிவுரை கூறினார்.
பூச்செடி நன்கு வளர்வதற்காக ஆரவ் ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றினான்.
ஏழு நாட்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. மண் நிறைந்த தொட்டியில் எந்த மாற்றமும் தென்படவில்லை.
ஆனால், எட்டாவது நாள் அன்று ஆரவ்விற்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. கரிய மண்ணை முட்டிக்கொண்டு சிறிய பச்சை இலை ஒன்று வெளிவந்தது.
ஆரவ் குனிந்துகொண்டு அந்தச் செடியை உற்றுப் பார்த்து வியந்தான். செடியைத் தொடர்ந்து பராமரித்து வந்த ஆரவ்வின் பழக்கங்களும் நல்லவிதமாக மாறின. செடியைப் பொறுமையாகப் பராமரித்து அதிலுள்ள மாற்றங்களைக் கவனித்து வந்தான். கால் தவறி செடியின் மீது இடறி விழக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தான்.
ஒன்பது வாரங்களுக்குப் பிறகு சூரியகாந்தி மலர்ந்தது. ஆரவ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

