சூச்சின் தொடக்கப்பள்ளியில் தாய்மொழி இருவார நடவடிக்கை

சூச்சின் தொடக்கப்பள்ளியில் தாய்மொழி இருவார நடவடிக்கை

2 mins read
4d86528f-ec89-450b-94da-a9495e323d81
சூச்சின் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தாய்மொழிகளுக்கான இருவார நடவடிக்கைகளில் உற்சாகமாகக் கலந்துகொண்ட மாணவர்கள். - படங்கள்: சூச்சின் தொடக்கப்பள்ளி

சூச்சின் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தாய்மொழிக்கான இருவார நடவடிக்கைகளின்போது, சீனாவிலிருந்து கற்றல் பயணமாக 40 மாணவர்களும் பத்து ஆசிரியர்களும் வந்தனர்.

பன்னாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், சீனாவில் உள்ள உக்சி நகரிலிருந்து வந்த அவர்களுக்குப் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘பண்பாட்டின் அழகும் அடையாளமும்’ என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆண்டின் தாய்மொழி இருவார நடவடிக்கைகள் கொண்டாடப்பட்டன.

கற்றல் பயணத்தின் அங்கமாகச் சீன மாணவர்கள் கைகளில் அழகிய மருதாணியிட்டு மகிழ்ந்ததோடு, பூக்களைத் தொடுக்கும் முறையையும் ஆர்வத்துடன் செய்து பார்த்தனர்.

“எங்கள் பள்ளியில் மூன்று தாய்மொழிகளும் இணைந்து பண்பாட்டின் அடையாளத்தையும் அழகையும் வெளிப்படுத்தும் நோக்கில் தாய்மொழி இருவார நடவடிக்கைகளை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பூத்தொடுத்தல், கோலம் போடுதல், மூலிகை சிகிச்சை போன்ற தமிழ்மொழி நடவடிக்கைகளும் இடம் பெற்றன,” என அப்பள்ளியில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் கஷிகாவும் தேஜாவும் தெரிவித்தனர்.

“நாங்கள் முதல் முறையாகப் பூத்தொடுத்தோம். அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தபோதிலும், ஆசிரியரின் உதவியோடு கட்டினோம். பூக்களைக் கடையில் வாங்கி தலையில் சூடிய நாங்கள், பூக்களைக் கட்டி நண்பர்களுக்குக் கொடுத்தோம். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது,” எனத் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் ஆயிஷாவும் கஷிகாவும் கூறினர்.

-

“எங்களுக்குக் கோலம் போடத் தெரியாது. நாங்கள் கோல மாவைக்கொண்டு கோலம் போடக் கற்றுக்கொண்டோம். எங்கள் ஆசிரியர் எங்களுக்குச் சிக்குகோலம், பூக்கோலம் என இரண்டு வகையான கோலத்தை அறிமுகப்படுத்தினார். நாங்கள் கற்றுக்கொண்டதோடு எங்கள் நண்பர்களுக்கும் பள்ளி இடைவேளை நேர நடவடிக்கையின்போது கற்றுக்கொடுத்தோம்,” எனத் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் பிரிந்தா, தேவஸ்ரீ, விசாலாட்சி ஆகியோர் கூறி மகிழந்தனர்.

“தாய்மொழி இருவார நடவடிக்கையின்போது நாங்கள் மூன்று மொழிகளுக்கிடையிலான பண்பாட்டுக் கூறுகளின் ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்துகொண்டோம். இதன்மூலம் மற்றவர்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி அறிந்துகொண்டு அர்த்தமுள்ள நடவடிக்கைகளிலும் ஈடுபட முடிந்தது,” எனத் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் வேதா, சய்லேஷ் கூறினர்.

“நாங்கள் மருதாணி, புதினா, கறிவேப்பிலை, வெற்றிலை ஆகிய மூலிகைகளின் பயன்பாட்டைக் கற்றோம். அதன்பின், மூலிகைகள் நம் அன்றாட வாழ்வில் உணவிலும் உடல்நலத்திலும் பயன்படுத்துவது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்,” என ஜிப்ரான், ஹாசிக், இர்ஷாத், ஹேமந்திரன் தெரிவித்தனர்.

-
-
-
-

தகவல்: சூச்சின் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்