2007ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் புதிய ஏழு அதிசயங்கள் குறித்து அறிந்துகொள்வோமா!! இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சின்னங்கள், பழங்கால மக்களின் கட்டடக்கலைத் திறமை, கலாசாரத்தைப் பறைசாற்றுகின்றன.
ஆசிய அதிசயங்கள்
1. சீனப் பெருஞ்சுவர்
சீனாவைப் பாதுகாக்கக் கட்டப்பட்ட 21,196 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய சுவர். கிட்டத்தட்ட 25,000 கண்காணிப்புக் கோபுரங்கள் சுவர் முழுவதிலும் உள்ளன. 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இது கட்டப்பட்டது. 200க்கும் மேற்பட்ட ரகசியக் கதவுகள் இந்த அமைப்பில் உள்ளன.
2. தாஜ்மஹால்
17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளைப் பளிங்கு நினைவிடம் தான் தாஜ்மஹால். இந்தியாவில் 1632ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹான், தமது மனைவி மும்தாஜ் பேகத்தின் நினைவாக இதைக் கட்டினார். வெள்ளை பளிங்கு, பச்சை மணிக்கல், நீலக் கல் உள்ளிட்ட பொருள்கள் ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டன.
3. பெட்ரா
பெட்ரா என்பது ஜோர்தான் நாட்டின் பாலைவனத்தில் சிவப்பு நிறப் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்ட ஒரு பழமையான நகரம். 1985ஆம் ஆண்டில் இந்த நகரத்தை உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ (UNESCO) அறிவித்தது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள அதிசயங்கள்
4. கொலோசியம்
ஆயிரக்கணக்கான ரோமானியர்கள் அமரக்கூடிய ஒரு பொது விளையாட்டு அரங்கை உருவாக்க விரும்பிய முன்னாள் ரோமானிய பேரரசர் வெஸ்பாசியனால் கோலோசியம் கட்டப்பட்டது. இத்தாலியில் இருக்கும் அந்த விளையாட்டு அரங்கின் கட்டுமானம் கி.பி. 72ல் தொடங்கியது.
5. மீட்பர் கிறிஸ்து சிலை
இயேசு கிறிஸ்துவின் இந்தப் பிரம்மாண்டமான சிலை, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கார்கோவாடோ மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் பிரேசிலின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
6. மச்சு பிச்சு
பெருவில் இருக்கும் மச்சு பிச்சு,15ஆம் நூற்றாண்டில் இன்கா நாகரிக மக்களால் கட்டப்பட்டது. மெருகூட்டப்பட்ட கற்களைத் துல்லியமாக வெட்டி, ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தும்படி இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
7. சின்சென் இட்சா
மாயன் இன மக்களால் மெக்சிகோவில் கட்டப்பட்ட ஒரு பழங்கால நகரம், சின்சென் இட்சா. அங்குள்ள குகுல்கான் கோயில் என அழைக்கப்படும் எல் காஸ்டிலோ, 365 நாள்கள் கொண்ட நாள்காட்டியாக வடிவமைக்கப்பட்டது.
