படிக்க, சிறக்க: சிந்திக்கத் தூண்டும் சதுரங்கம்

படிக்க, சிறக்க: சிந்திக்கத் தூண்டும் சதுரங்கம்

2 mins read
ada764ce-d2b0-4fc4-937f-72a51a25ef7c
சதுரங்க விளையாட்டு. - படம்: பிக்சாபே
multi-img1 of 2
Google News Preferred Icon

எட்டு வயது எழிலன் வகுப்பில் கெட்டிக்கார மாணவர். பள்ளியில் கணக்குப் பாடத்தை விரும்பிப் படிப்பார். வகுப்புகளில் பாடங்களைக் கூர்ந்து கவனிப்பதால் கணக்கு முறைகளை அவர் எளிதில் புரிந்துகொள்கிறார்.

வீட்டுப்பாடங்களுக்கு மேலாகப் பாடப்புத்தகங்களை வாங்கி எழிலன் பயிற்சி செய்தார்.

ஒருமுறை, சதுரங்க ஆட்டம் ஒன்றைத் தொலைக்காட்சியில் எழிலன் கண்டார்.

“நானும் சதுரங்கம் விளையாட ஆசைப்படுகிறேன். அப்பா, எனக்கு நீங்கள் கற்றுத் தருகிறீர்களா?” என்று எழிலன் தம் தந்தையிடம் கேட்டார்.

எழிலனின் உற்சாகத்தைக் கண்டு அவரின் தந்தை மகிழ்ந்தார்.

“எனக்குச் சதுரங்கம் விளையாடத் தெரியும். ஆனால், என்னைவிட வல்லவர் உன் மாமா நவின். அவர் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றவர்,” என்று எழிலனின் தந்தை கூறினார்.

எழிலனின் தாயாரின் தம்பியான நவின் பல்கலைக்கழக மாணவர்.

அதனால், சதுரங்கம் கற்பிக்க நவினுக்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழிலனின் தந்தைக்கு இருந்தது.

கேட்டுத்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் அந்தத் தந்தை, நவினை அணுகினார். எழிலனின் மீது பாசமுள்ள மாமா நவின், அவருக்குக் கற்பிக்க ஒப்புக்கொண்டார்.

வாரத்திற்கு இருமுறை எழிலனின் வீட்டுக்கு நவின் சென்று கற்றுத்தந்தார்.

காலாள் (Pawn), குதிரை, அமைச்சர், கோட்டை, அரசி, அரசன் ஆகிய ஆறு வகையான காய்களைப் பற்றி எழிலன் கற்றுக்கொண்டார்.

சதுரங்கப் போட்டிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஓர் அரசன், ஓர் அரசி, இரண்டு அமைச்சர்கள், இரண்டு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டுப் படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

விளையாட்டின் நுணுக்கங்களை எழிலன் மெல்லக் கற்றார். விதிமுறைகளில் சிலவற்றைப் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டாலும் மாமா தந்த ஊக்குவிப்பால் எழிலன் விடாமுயற்சியுடன் பயின்றார்.

இந்த முயற்சியால் எழிலன், தம் வாழ்க்கை முழுவதற்கும் பயன்படுத்தக்கூடிய நுட்பமான திறனை வெற்றிகரமாகக் கற்றார்.

குறிப்புச் சொற்கள்