பிரபல கேலிச் சித்திரத்தில் (comic) இடம்பெறும் கதாபாத்திரம்தான் ‘ஸ்னூப்பி’ என்ற நாய்க்குட்டி. இது சிறார்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
வெள்ளை முடி, கறுப்புக் காதுகள், சிவப்பு மணி ஆகியவற்றுடன் காணப்படும் இந்த நாய்க்குட்டிக் கதாபாத்திரம், 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பிள்ளைகளைக் கவர்ந்து வருகிறது.
‘ஸ்னூப்பி’ அன்புள்ள நாய்க்குட்டி; கற்பனை வளம் கொண்டது. உரிமையாளர் சார்லி பிரவுனை நன்கு பார்த்துக்கொள்பவன். சுவையான உணவை விரும்பிச் சாப்பிடும் ‘ஸ்னூப்பி’ கெட்டிக்காரனாக இருந்தாலும் சில நேரங்களில் சோம்பேறி.
இதற்கிடையே, பிள்ளைகளின் வாசிப்புப் பயணத்திற்குச் சுவையூட்ட, தேசிய நூலக வாரியம் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. வண்ணமயமான படங்களைப் பார்த்துக்கொண்டே கதை வாசிப்பது இன்பமான அனுபவமாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சிறுவர்களை ஈர்க்கும் வகையில் ‘ஸ்னூப்பி’ வடிவிலான சிறப்பு நாற்காலிகள் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
‘ஆஃபீஸ் பிளானர்’ என்ற நிறுவனம் இந்த நாற்காலிகளைச் செய்தது. மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டவும் வேலை இடங்களிலும் வீடுகளிலும் உற்சாகம் நிறைந்த சூழலை உருவாக்கவும் இத்தகைய அறைகலன்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்தச் சிறப்பு அறைகலன்கள், பொங்கோல் நூலகத்தில் மே 15 முதல் ஆறு மாதங்களுக்கு அங்கு இருக்கும். அந்த நாற்காலிகளில் அமர்ந்து உங்களுக்குப் பிடித்தமான ‘ஸ்னூப்பி’ கதைப் புத்தகங்களை நீங்கள் வாசித்து நேரத்தைக் கழிக்கலாம்!
சிறார்கள் மட்டுமன்றி 77 வயது வழக்கறிஞர் ஹேமா சம்பத் போன்ற பெரியவர்களும் இந்த ஏற்பாட்டினால் மகிழ்கின்றனர். சிறு வயது முதல் ‘ஸ்னூப்பி’ ரசிகராக இருந்துவரும் திருவாட்டி ஹேமாவுக்கு இந்த அறைகலன்கள் இன்ப அதிர்ச்சியைத் தந்தன.
“இன்பத்தையும் இதத்தையும் உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விடுமுறையில், உங்கள் குடும்பத்துடன் பொங்கோல் நூலகத்திற்குச் செல்லுங்கள். ‘ஸ்னூப்பி’ கதைகளையும் உங்களுக்குப் பிடித்தமான பல்வேறு நூல்களையும் படித்து மகிழுங்கள்!

