லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் புதியதோர் ஊழியர் அண்மையில் பணியாற்றியதை நீங்கள் கண்டீர்களா?
அவர்தான் ‘ஆலி’ எனும் இயந்திர மனிதன்! ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11 வரை இரண்டு வார சோதனைக்காக ‘ஆலி’யை நிலப் போக்குவரத்து ஆணையம் களமிறக்கியது.
‘வட்ட ரயில் பாதையில் எத்தனை நிலையங்கள் உள்ளன? தேக்கா நிலையத்துக்குச் செல்வது எப்படி?’ என உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க ‘ஆலி’ ஒருவரே போதும்!
1.27 மீட்டர் உயரத்தில் உள்ள ‘ஆலி’யிடம் நீங்கள் எளிதாகப் பேசலாம். பேசுவதற்குமுன் ‘ஹாய் ஆலி’ என்று சொல்லவேண்டும். அதன்பின் நீங்கள் ஆங்கிலத்தில் அதனுடன் உரையாடலாம்.
இரட்டையர்கள் முஹைமின், முஹாபிஸ் இருவரும் ‘ஆலி’யைப் பார்ப்பதற்காகவே தங்கள் தாயாருடன் லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்தனர். ‘ஆலி’யைப் பார்த்ததும் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
“‘கே கே’ மகளிர், சிறார் மருத்துவமனைக்குச் செல்வது எப்படி?” என அவர்கள் கேட்ட கேள்விக்கு ‘ஆலி’ பதில் சொல்வதோடு நிறுத்தாமல், தாமே நடந்து சென்று வழியைக் காட்டியது. அந்த இயந்திர மனிதனைச் சிறார் ஆர்வத்துடன் பின்தொடர்ந்தனர்.
நண்பகல் 12 மணிக்கு ‘ஆலி’ அதன் இல்லத்துக்குத் திரும்புமுன் “சென்றுவா ஆலி!” என இரட்டையர்கள் வழியனுப்பினர்.
அடுத்தமுறை ‘ஆலி’ சோதிக்கப்படும்போது தவறாமல் அதைக் காண வாருங்கள்!
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் உலகிற்கு நீங்கள் தயாரா?
