சிங்கப்பூர் இரவுத் திருவிழா 17வது ஆண்டாக மீண்டும் வண்ணமயமாகத் திரும்புகிறது.
இவ்வாண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பிராஸ் பாசா, பூகிஸ் பகுதிகளில் நடக்கும் அத்திருவிழா, ‘புராணங்களும் கட்டுக்கதைகளும்’ என்ற கருப்பொருளையொட்டி நடைபெறவுள்ளது.
அதில், சிங்கப்பூர், தென்கிழக்காசியாவின் பழங்காலக் கதைகளையும் கலைகளையும் விளக்கொளிகளுக்கு நடுவே நாம் கண்டு மகிழலாம்.
இம்முறை முதல் முறையாக ஒரு புதிய அரும்பொருளக அங்கம் அறிமுகமாகிறது. சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம், சிறுவர் அரும்பொருளகத்தை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான அங்கங்கள் வழங்கப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய அரும்பொருளகக் கட்டடத்தின் சுவர்களில் வண்ண விளக்குகளால் ஒளிபரப்பப்படும் ‘பூமி, கடலின் கதைகள்’ என்ற ஒளிக்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் உருவாக்கப்பட்ட ‘லவ்பக்’ என்ற வெளிப்புற விளையாட்டு அனுபவத்தைக் குழந்தைகள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
அழிவின் விளிம்பில் உள்ள ராஃபிள்ஸ் பட்டைக் குரங்கினம், புகழ்பெற்ற சிவப்பு சாகா விதை ஆகியவற்றை மையமாகக் கொண்டு அந்தப் படைப்பு, சிங்கப்பூரைச் சார்ந்த சின்னங்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் மறுவடிவமைக்கிறது.
அத்துடன், நூலகத்தின் சேகரிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 புத்தகங்கள் கொண்ட ஒரு புத்தகச் சாவடியிலிருந்து குழந்தைகள் சிங்கப்பூரின் வளமான வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.
அத்துடன், மூன்று வாரங்களுக்குப் பல கண்கவர் இரவு ஒளி அமைப்புகளும் இடம்பெறும்.
பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.heritage.sg/sgnightfest என்ற இணையத்தளத்தைப் பொதுமக்கள் நாடலாம்.

