பக்திமணம் கமழ்ந்த தைப்பூசக் கொண்டாட்டங்கள் 2026

பக்திமணம் கமழ்ந்த தைப்பூசக் கொண்டாட்டங்கள் 2026

2 mins read
11733be6-1088-4f09-983e-486db4b987bb
கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசத் திருவிழா 2026. - படம்: சுந்தர நடராஜ்

முருகப் பெருமானின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றான தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தைப்பூசத் திருநாளான ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 1) ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளையும் பால்குடங்களையும் சுமந்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

தமிழ் மாதங்களில் பத்தாவதாக வரும் தை மாதத்தில், பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவடி, பால்குடம் ஏந்தி வேண்டிக்கொண்டால் அவற்றுக்கு முருகக் கடவுள் செவிசாய்ப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சனிக்கிழமை இரவு பால்குடங்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி வரிசையாகப் புறப்பட்டன. பின்னர், அதிகாலையில் காவடிகள் புறப்பட்டன.

பதிவுசெய்திருந்த பக்தர்கள் அனைவரும் நாள் முழுவதும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் காவடியேந்தி 3.2 கிலோமீட்டர் தொலைவுப் பதையில் நடந்தனர்.

காவடியெடுத்த தந்தையுடன் வந்திருந்த மாணவி லட்சுமி ஜேன் சுரேந்திரன்.
காவடியெடுத்த தந்தையுடன் வந்திருந்த மாணவி லட்சுமி ஜேன் சுரேந்திரன். - படம்: சுந்தர நடராஜ்

பல குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக காவடியேந்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.

காவடி சுமந்தபடி கோவிலுக்குள் வரும் மாணவர் ஒருவர்.
காவடி சுமந்தபடி கோவிலுக்குள் வரும் மாணவர் ஒருவர். - படம்: சுந்தர நடராஜ்

தம் தந்தை சுரேந்திரன் காவடிஎடுப்பதைக் காண வந்திருந்த பாலர் பள்ளி மாணவி லட்சுமி ஜேன் சுரேந்திரன், “அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன்,” என்றார்.

காவடியேந்தி ஆடியபடி ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை வந்தடைந்த மாணவர் யுகன்.
காவடியேந்தி ஆடியபடி ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை வந்தடைந்த மாணவர் யுகன். - படம்: சுந்தர நடராஜ்

தொடக்கநிலை இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு காவடி எடுத்தார் மாணவர் யுகன்.

தம் தாத்தா, உறவினர் வீட்டிலுள்ள மூத்தோர் காவடி எடுப்பதைப் பார்த்துள்ளதாகக் கூறிய யுகன், “வீட்டிலுள்ள பெரியோர் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் நடக்கும் என்றனர். நன்கு படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும், வாழ்வில் சிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். நான் நடனமாடவில்லை. ஆனாலும், பிறர் ஆடியபடியும் பாடியபடியும் வந்தது மகிழ்ச்சியான அனுபவம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்