சீஃபா தொடக்கப்பள்ளியில் தாய்மொழிக்கான வார நடவடிக்கை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில், அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.
அந்நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் பல்வேறு தாய்மொழிகளின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியக் கலை வடிவங்களை அனுபவத்தின் வழி அறிந்துகொண்டு, அவற்றின் சிறப்பையும் மதிப்பையும் உணர்ந்தனர்.
தொடக்கநிலை 1, 2ல் பயிலும் மாணவர்கள் வண்ணக் கற்களைக் கொண்டு அழகான, நுணுக்கமான கோலங்களை வடிவமைத்தனர். தமிழ்ப் பண்பாட்டில் கோலத்தின் முக்கியத்துவத்தை அறிந்ததுடன், கைவினைத் திறனையும் வளர்த்துக் கொண்டனர்.
தொடக்கநிலை 3ல் பயிலும் மாணவர்கள் குடைக்கு வண்ணம் தீட்டும் நடவடிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சீனப் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்றான குடை ஓவியக் கலையையும் அதன் பயன்பாட்டையும் அவர்கள் அறிந்தனர்.
தங்களின் கற்பனைக்கேற்ப பல்வேறு ஓவியங்களைக் குடையில் வரைந்து, வண்ணமயமாக அவற்றை மாணவர்கள் அலங்கரித்தனர். அவர்களின் படைப்பாற்றல், அழகுணர்வு, கவனம், பொறுமை ஆகிய திறன்கள் அதில் மேம்பட்டன.
தொடக்கநிலை 4ல் பயிலும் மாணவர்கள் தென்னை ஓலையைப் பயன்படுத்திப் பாரம்பரிய தோரணம் தயாரிக்கக் கற்றுக்கொண்டனர். அதோடு, தென்னை ஓலையைக் கொண்டு சிறிய பெட்டிகளையும் அவர்கள் உருவாக்கினர்.
அச்செயல்பாட்டின் மூலம், இயற்கையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி அழகிய கைவினைப் பொருள்களை உருவாக்கும் திறனை அவர்கள் கற்றுக்கொண்டனர். மேலும், தமிழ் பாரம்பரிய விழாக்களிலும் குடும்ப நிகழ்வுகளிலும் தோரணத்தின் பயன்பாடு குறித்தும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
அடுத்ததாக, தொடக்கநிலை 5ல் பயிலும் மாணவர்கள் புடைப்போவியங்களை (Embossed Art) உருவாக்கினர். தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அருமையான வாய்ப்பை அதன்மூலம் அவர்கள் பெற்றனர். ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான ஓவியங்களை உருவாக்கி தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
இறுதியாக, தொடக்கநிலை 6ல் பயிலும் மாணவர்கள் பூக்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் மலர் மாலைகளைக் கட்டும் முறைகளைக் கற்றுக்கொண்டதுடன், அவை தமிழ் பாரம்பரிய விழாக்களிலும் அன்றாட வாழ்விலும் பயன்படும் விதத்தையும் அறிந்துகொண்டனர்.
இந்த முழு அனுபவமும் மாணவர்களுக்குத் தாய்மொழிகளின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதான புரிதலை விரிவுபடுத்தியது. அத்துடன், பொறுமை, ஒத்துழைப்பு, படைப்பாற்றல், தன்னம்பிக்கை போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களையும் வளர்த்தது.


