சீனப் பயணிகளும் சிங்கப்பூரின் விவேகமிக்க அணுகுமுறையும்

முரசொலி

கொவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை உலக நிலவரங்களில் இருந்து சீனா வேறுபட்டு நிற்கிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் தொற்று ஒடுங்கிவிட்ட நிலையில், சீன நிலவரம் உலகையே பயமுறுத்தும் அளவுக்கு இருக்கிறது.

கொரோனா தோன்றிய இடம் சீனாதான். அந்தத் தொற்றைத் துடைத்து ஒழிக்க உலகமே சேர்ந்து செயல்பட்டு, முழு வெற்றி இல்லை என்றாலும் அச்சம் அகலும் அளவுக்கு சூழ்நிலை மேம்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமியை அறவே ஒழிக்க முடியாது. அதோடு சேர்ந்து வாழவேண்டியதுதான் என்று முடிவாகிவிட்ட நிலையில், அதற்கு ஏற்ப உலக நாடுகள் ஆயத்தமாயின.

ஆனால், சீனா மட்டும் கொரோனா கிருமியை அறவே துடைத்து ஒழித்து அதன் சுவடுகூட இல்லாத நிலையைச் சாதிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு 'பூஜ்ஜிய கொரோனா' என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. கடுமையான கட்டுப்பாடுகள், பரிசோதனைகன் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனிடையே, உலக நிலவரம் மேம்பட்டதால் நாடுகள் எல்லைகளைக் திறந்துவிட்டன. பழையபடி உலகம் சுறுசுறுப்பு அடைய தொடங்கியது.

அதைப் பார்த்த சீனாவில் பிரச்சினை மூண்டது. எவ்வளவு நாட்களுக்குத்தான் கடுமையான கட்டுப்பாடுகளுடன் காலம் தள்ளுவது என்று மக்கள் சலித்துப் போய் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

முடிவாக, சீனா திடீரென்று தன் கொள்கையை மாற்றிக்கொண்டது. பூஜ்ஜிய கொரோனா கொள்கையைக் கைவிட்டு எல்லைகளைத் திறந்துவிட்டது. மக்கள் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

சீனாவில் பிறந்த கொரோனா கிருமியால் இதுவரை பட்ட பாட்டை நினைத்து நினைத்து அஞ்சும் உலக நாடுகள், மீண்டும் அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று தங்கள் நாட்டில் தரையிறங்கும் சீனப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தொடங்கின.

சீனாவில் கொரோனா சூழல் எப்படி இருக்கிறது என்பது தொடக்கம் முதலே துல்லியமாகத் தெரியவில்லை. 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் அந்த நாட்டில், கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்போல் தெரிகிறது.

சுகாதார வசதிகளும் போதிய அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதோடு மட்டு மன்றி, கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி என்று வரும்போது மேற்கத்திய உதவியை ஏற்க மறுத்து தன் கையே தனக்கு உதவி என்ற அணுகுமுறையை சீனா கடைப்பிடித்து வருகிறது.

சொந்த தடுப்பூசியையே பயன்படுத்தி வருகிறது. இது எந்த அளவுக்கு ஆற்றலுடன் இருக்கிறது என்பதும் விளங்கவில்லை.

கிடைக்கும் நிலவரங்களை எல்லாம் வைத்துப் பார்க்கையில், அந்த நாட்டில் இந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொரோனா கொன்றுவிடக்கூடும் என்றும் இதனால் உலக அளவில் சுகாதாரத்திற்குப் பெரும் மிரட்டல் ஏற்பட்டுவிடக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அனைத்துலக வல்லுநர்களும் சுகாதாரத் துறை வல்லுநர்களும் அஞ்சுகிறார்கள், கவலைப்படுகிறார்கள்.

இத்தகைய ஒரு சூழலில் சீனா எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது. சீன மக்களும் வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். சீனப் புத்தாண்டும் நெருங்கிவிட்டது. இந்நிலையில், சிங்கப்பூர் எத்தகைய அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.

இதனால்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை சிங்கப்பூரர்களிடம் ஓர் உத்தரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது என்று தாராளமாகக் கூறலாம். கொவிட்-19 கிருமியைப் பொறுத்தவரை அனைத்துலக கவலை எல்லாம் இப்போது சீனாவையே மையம் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் இதற்கு ஒரு படி மேலாக உலகம் முழுவதையும் கருத்தில் கொண்டு முழு விழிப்பு நிலையில் இருந்துவரும் அணுகுமுறையைக் கைகொண்டுள்ளது.

சீனாவில் இருந்து வருவோருக்கு சிங்கப்பூரும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா அல்லது எல்லா வருகையாளர்களையும் அனுமதிப்பதைப்போல் அதே கொள்கையை சீனாவில் இருந்து வருவோருக்கும் நடைமுறைப்படுத்துவதா என்ற நிலையில் சிங்கப்பூர் எடுத்துள்ள முடிவு விவேக மிக்கதாக இருக்கிறது.

அதாவது, சீனாவில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உலக நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

கவலை அளிக்கக்கூடிய அளவுக்கு உலகில் எந்த மூலையிலும் உருமாறிய கிருமி ஏதாவது தலைகாட்டுகிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்ற அணுகுமுறையை சிங்கப்பூர் கைகொண்டுள்ளது.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சீனப் பயணிகள் வருகையால் இங்கு தொற்று கூடியதாகத் தெரியவில்லை. சீனாவில் புதிய உருமாறிய கிருமி தலை எடுத்துள்ளதாகவும் தெரியவில்லை.

சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மக்களிடம் கொவிட்-19 எதிர்ப்பு ஆற்றல் வலுவாக உருவாகி இருக்கிறது.

இத்தகைய ஒரு நிலையில், சீனப் பயணிகளுக்குத் தேவையின்றி கட்டுப்பாடுகள் விதிப்பது சரியான ஒன்றாக இருக்காது. அதற்குப் பதிலாக எந்த அளவுக்குக் கடுமையான தொற்று அதிகரித்தாலும் அதை வெற்றிகரமான முறையில் சமாளிக்கும் அளவுக்குச் சுகாதாரப் பராமரிப்பு முறை பாதிக்கப்படாமல் இருந்துவர வேண்டும்.

அதைவேளையில், மக்கள் கூடுமானவரை இயல்பு வாழ்க்கையைத் தொடர வேண்டும். இதை உறுதிப்படுத்துவதே விவேகமானதாக இருக்கும். இனி கொரோனாவுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலையில் இதுதான் வழி.

கிருமியுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் என்றாலும், கொரோனா எந்த வடிவிலும் வந்தாலும் அதனால் வழக்கமான வாழ்க்கை பாதித்துவிடக்கூடாது. இதை மக்களும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசியைத் தவிர்க்காமல், சுகாதாரமிக்க பழக்கவழக்கங்களுடன் பொறுப்புடன் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூரும் பாதுகாப்புமிக்க சூழலில் உலகிற்குத் தன் கதவுகளைத் திறந்து வைத்திருக்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!