சிங்கப்பூர் சிறந்தோங்க சீரிய பணி தொடர வேண்டும்

பிரதமர் என்ற முறையில் தமது இறுதிப் பேருரையை மே தினத்தன்று ஊழியரணியின் முன்னிலையில் ஆற்றினார் பிரதமர் லீ சியன் லூங்.

தமது தலைமைத்துவக் காலத்திலேயே சிங்கப்பூர் கடந்து வந்த பல இடர்கள், நெருக்கடியான காலகட்டங்கள், சவால்கள், நிறைவேற்றிய வாக்குறுதிகள் போன்றவற்றைப் பட்டியலிட்டதோடு, சிங்கப்பூர் தொடர்ந்து உலக அரங்கில் மிளிரவும் வியப்பூட்டும் வகையில் செயல்படவும் என்ன தேவை என்பதையும் அவர் கோடிகாட்டினார்.

மக்கள் செயல் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே ஊழியரணியின் ஆதரவும் ஊழியரணிக்கு மக்கள் செயல் கட்சியின் ஆதரவும் பின்னிப்பிணைந்த உறவுப் பாலம் என்பதை மே தினப் பேரணி காட்டியது.

உணர்வுபூர்வமான உரை, அரங்கத்தில் இருந்தவர்களைப் பல தருணங்களில் நெகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக அமைந்தது. ஊழியரணியைக் குறிப்பிட்டு நன்றி நல்கியதோடு, இன்னும் இரண்டு வாரத்தில் தலைமைத்துவப் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கவிருக்கும் பிரதமர், சிங்கப்பூரர்களுக்குக் கூற விரும்பிய முக்கியக் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்

சமூகக் கட்டிறுக்கம், நீண்டகாலத் திட்டமிடல், அரசியல் நிலைத்தன்மையும் நம்பகத்தன்மையும் என முக்கியமாக மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டார் பிரதமர் லீ.

பல இன, பல கலாசார சமூகம் ஒருபுறமும் வெளிநாட்டுத் திறனாளர்களின் தொடர்வருகை மறுபுறமும் சிங்கப்பூரை என்றும் மாறிக்கொண்டே இருக்கும் சமுதாயமாக விளங்கச் செய்துள்ளது. அப்படிப்பட்ட சூழலில் சமூகங்களுக்கிடையேயான வேறுபாடுகள், பிளவுகளாக மாறிவிடாமல், ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்கும் தனித்தனிப் பகுதிகளாக சகிப்புத்தன்மையைத் தாண்டி ஒருவரையொருவர் அரவணைத்து வாழும் சமூகமாகக் கட்டிறுக்கத்தோடு வாழவேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலான நவீன சிங்கப்பூரின் வரலாற்றில் சமூக நல்லிணக்கம் வளர்ந்தே வந்துள்ளது. அதற்கு, தொடர்ச்சியான பல முயற்சிகளை அரசாங்கமும் சமூக அமைப்புகளும் அடித்தளத்தில் குழுக்களும் செய்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்கம் நிலைத்துவந்தாலும் எதிர்காலத்திலும் சிங்கப்பூர் நிலைபெற முக்கிய அம்சங்களில் ஒன்றாக பிரதமர் சமூகக் கட்டிறுக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது அதற்கு அரசாங்கம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் அக்கறையையும் கோடிகாட்டுகிறது.

சிங்கப்பூரை வழிநடத்தி வந்துள்ள தலைவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடனும் எதிர்காலத்திற்கான திட்டமிடலுடனும் செயல்பட்டு வந்துள்ளனர். நாட்டின் முதன்மையான உள்கட்டமைப்புகள், கண்கவர் கட்டடங்கள், செழித்தோங்கும் பூங்காக்கள், உயிரோட்டமிக்க வீடமைப்புப் பேட்டைகள், நிலையான கொள்கைகள், திடமான முயற்சிகள் என பார்க்கக்கூடிய, உணரக்கூடிய அனைத்திலும் நம் தலைவர்களின் தொலைநோக்குச் சிந்தனை வெளிப்படுவதைக் காணலாம்; உணரலாம்.

மக்களின் குடியிருப்புத் தேவைகளுக்கான பத்தாண்டுத் திட்டங்கள், மக்கள், சரக்குப் போக்குவரத்துத் தேவைகள் அறிந்து அடுத்த இருபதாண்டுத் திட்டங்கள், பருவநிலை மாற்றத்தை சமாளித்து நீடித்த நிலைத்தன்மைமிக்க நாட்டை அடுத்தடுத்த தலைமுறைக்கு அமைத்துத் தர அடுத்த ஐம்பதாண்டுகளுக்கான திட்டங்கள் எனப் பலவற்றையும் பிரதமர் லீயின் தலைமையிலான அரசாங்கம் அமைத்துள்ளது.

தொலைநோக்குத் திட்டங்களை உறுதியுடன் வகுக்க அத்தியாவசிமாக அமைந்துள்ள அம்சம் நிலையான அரசியல் சூழல். அதையே பிரதமர் மூன்றாவது முக்கிய அம்சமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

உலக அரங்கில் சிங்கப்பூரின் நன்மதிப்புக்கும் நற்பெயருக்கும் ஒரே சமூகமாக நாம் ஆற்றியுள்ள பங்களிப்பும் நாட்டுத் தலைவர்களின் ஆற்றல்மிகு தலைமைத்துவமும் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

அண்டை நாடுகளைப் போலவோ வேறு எந்த ஒரு நாட்டையும் போலவோ எவ்வித இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூரில் மனிதவளமே தலையாய வளம். அதன்பொருட்டு நான்காம் தலைமுறைத் தலைமைத்துவக் குழுவுக்கு ஊழியரணியின் முழு ஆதரவு தேவை. ஊழியரணிக்கும் அரசியல் தலைவர்கள் தோள்கொடுக்கவேண்டும்.

அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியும் தலைமுறை மாற்றமும் தொழில்துறைகளையும் வேலையிடங்களையும் மாற்றிவருகின்றன. இவ்வாண்டு இறுதியில் நீக்குப்போக்கான வேலை அமைப்புக்கான வரையறைகள் வெளியிடப்படும். ஆண்டுக்காண்டு குறைந்துவரும் பிறப்பு விகிதமும் அதன் விளைவாகக் குறைந்துவரும் ஊழியர் விகிதமும் நம் பொருளியலுக்கு சவாலாக அமையும். எதிர்காலத்தை நோக்கிய இன்றைய பொருளியலின் வெற்றியே சிறு சிவப்புப் புள்ளியானாலும் பெரிய நாடுகளையும் திரும்பிப் பார்த்து மதிக்கச் செய்யும் நாடாக சிங்கப்பூரை விளங்கவைக்கிறது. ஆனால், இப்படியே தொடரும் என்பது உறுதியன்று.

சிங்கப்பூரை பிறப்பிடமாக, இருப்பிடமாக, வேலையிடமாகக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் தொடர்ந்து அவரவருக்கு உகந்த வழிகளில் சீரிய பணியை ஆற்றி, நிலையான நாடாக, தலைசிறந்த பொருளியலாக, புத்தாக்கமிக்க சிந்தனையாளர்களாக, உற்பத்தித் திறன்மிக்க ஊழியரணியாக, வலுவான சமூகமாக, மகிழ்ச்சியான தேசமாக விளங்குவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!