புதுமை பரோட்டாவைப் புரட்டிப் போடும் கௌதமன்

சிங்கப்பூரர்கள் விரும்பி உண்ணும் பரோட்டா, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விற்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப ‘மொறுமொறு’ என இருக்கும் புதுமையான பரோட்டா வகைகளை வழங்க விரும்பினார் ‘பரோட்டாலா!’ கடை உரிமையாளர் கௌதமன் ரமணன், 30.

ஹவ்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள இவரது கடை, கடந்த டிசம்பர் மாதம் முதல் இயங்கத் தொடங்கியது. இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்க்கும் வகையில் தமது வியாபாரத்தை அமைத்துக்கொள்ள விரும்பினார் கௌதமன்.

வாடிக்கையாளர்கள் புதுமையாக ‘டிஐஒய்’ அதாவது தாங்கள் விருப்பப்படும் வகையில் பரோட்டா தயாரிப்புக்குப் பங்காற்றலாம். இறால், நண்டு, சார்டின் சம்பால், இறைச்சி கீமா, கோழி கொத்திறைச்சி, நெத்திலி போன்ற பல்வேறு மூலப்பொருள்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அவர்களின் பரோட்டாவில் சேர்த்துக்கொள்ளலாம். அமெரிக்கர்கள் காலை உணவுக்கு விரும்பி உண்ணும் ‘எக்ஸ் பெனடிக்ட்’ (eggs benedict) உணவைக் கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டாவும் இங்கு கிடைக்கும்.

உணவுத் தொழில் நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த கௌதமன், தொழில் நடத்தும் நுணுக்கங்களையும் பரோட்டா புரட்டும் கைப் பக்குவத்தையும் சிறுவயதிலேயே கற்றுத்தேர்ந்தார்.

புகழ்பெற்ற ‘கேஷுவரீனா கறி’ உணவக உரிமையாளரின் மகனான கெளதமன், சிறுவயதில் பலமுறை கடைக்குச் சென்று தந்தைக்கு உதவியுள்ளார். அவரின் சிற்றப்பா பரோட்டாவுக்குப் பெயர் போன ‘ஸ்பிரிங்லீஃவ் பரோட்டா பிளேஸ்’ உணவகத்தை நடத்தி வருவதால் கெளதமன் தம் குழந்தைப் பருவத்தை அவ்விரு உணவகங்களிலும் செலவிட்டார்.

தந்தையிடமும் சிற்றப்பாவிடமும் சொந்தத் தொழில் நடத்துவதற்கான ஊக்கத்தைப் பெற்ற கெளதமன், தாமும் எதிர்காலத்தில் உணவுத் தொழிலில் கால்பதிக்க வேண்டுமென்ற கனவைக் கொண்டார். வாடிக்கையாளர்களிடம் பேசும் முறை, கடினமாக உழைத்துத் தொழில் நடத்தும் முறை, ஊழியர்களைக் கையாளும் முறை போன்றவற்றைக் குடும்பத் தொழில் அவருக்குக் கற்பித்தது.

அன்றாடம் காலை ஏழு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இயங்கும் இவரது கடைக்கு வார நாள்களில் கிட்டத்தட்ட 200 வாடிக்கையாளர்களும் வாரயிறுதிகளில் கிட்டத்தட்ட 400 வாடிக்கையாளர்களும் வருகின்றனர்.

“பரோட்டா மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அதில் எந்த மூலப்பொருளைச் சேர்த்தாலும் அதை ஏற்று மிகச் சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிமை. அதனால் என் கனவு நனவானது,” என்கிறார் கெளதமன்.

காலை தொடங்கும் வாடிக்கையாளர்களின் கூட்டம் கௌதமனைப் பிற்பகல் இரண்டு மணி வரை பரபரப்பாக இயங்க வைக்கிறது.

உட்லண்ட்ஸ், ஹாலந்து வில்லேஜ் போன்ற இடங்களிலிருந்து தமது பரோட்டாவை நாடிவரும் வாடிக்கையாளர்கள் சிலர் இருப்பதால் கௌதமன் தமது தொழிலில் மேலும் சிறப்பாகச் செய்ய முனைப்பு கொண்டுள்ளார்.

வாடிக்கையாளர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் கௌதமன் தம்மால் மறக்கமுடியாத ஒருவரை நினைவுகூர்ந்தார். ஒவ்வொரு விடுமுறை நாளிலும் தவறாமல் தம் கடைக்கு வந்துவிடும் சிறுவன் ஒருவன் கெளதமனுக்கு மிக நெருக்கம்.

எப்பொழுதும் முட்டை பரோட்டா மட்டும் வாங்கும் அச்சிறுவன், விரும்பி ஈடுபடும் விளையாட்டு முதலானவற்றை கௌதமன் தெரிந்து வைத்துள்ளார்.

பரோட்டாவில் வழக்கமாகச் சேர்க்கப்படும் நெய், சர்க்கரை போன்றவற்றைத் தவிர்த்து குடும்பத்திற்குரிய முக்கியமான உணவு மூலப்பொருள் ஒன்று சேர்க்கப்பட்ட மாவை பரோட்டா போடப் பயன்படுத்தும் கெளதமன், தோசை, ‘முர்தபாக்’, பிரியாணி, ‘கோரேங்’ உணவு வகைகள் ஆகியவற்றையும் தமது உணவுப் பட்டியலில் சேர்த்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் பரோட்டாவைப்போல தோசை, ‘கோரேங்’ வகைகள் ஆகியவற்றுக்கும் அதே மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

வணிக நிர்வாகத்திலும் விளம்பரத்திலும் இளநிலைப் பட்டம் பெற்றுள்ள கெளதமன், ஈராண்டுகள் விற்பனைத் துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

தொழில் தொடங்கிய புதிதில் அவருக்கு நிதிச் சவால்கள் குறுக்கிட்டபோது தொழில் நடத்தும் உத்திகளை அவரது வேலை அனுபவம் கற்றுத் தந்தது.

ஒரே ஓர் ஊழியரின் உதவியோடு உணவகத்தின் பொறுப்பேற்று நடத்திவரும் கெளதமனுக்கு வீட்டில் செலவிடும் நேரம் மிகக் குறைவு. கூடிய விரைவில் சாங்கி வில்லேஜ் கடைத் தொகுதியில் புதிய உணவு வகைகளைக் கொண்ட கிளை ஒன்றைத் திறக்கவிருக்கும் அவருக்கு மனைவியின் ஆதரவு பக்கபலமாக இருக்கிறது.

இத்தம்பதிக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில் கூடிய விரைவில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கவிருக்கிறது.

உணவு வகைகள் புதிய போக்கிற்கேற்ப மாறிவரும் இக்காலகட்டத்தில் கௌதமன் அதற்குத் தகுந்தாற்போல தமது உணவு வகைகளையும் மாற்றியமைத்து வருங்காலத்தில் வெளிநாடுகளுக்குத் தொழிலை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!