ஊர் ஊராக உப்பு மாட்டுவண்டி; கலாசாரம் காக்கும் இளைஞர்

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பதைப் போல் பாரம்பரியத்தை, கலாசாரத்தை இழந்தோரின் வாழ்க்கையும் உப்புசப்பு இல்லாமல் போய்விடும் என்கிறார், கீற்று வேயப்பட்ட கூண்டு மாட்டு வண்டியில் உப்பள உப்பு விற்கும் இளைஞர் கோவிந்தராஜ், 26.

சமணர்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உமணர்களைத் தெரியுமா? ஊர் ஊராகச் சென்று உப்பு வியாபாரம் செய்தவர்கள் அந்தக் காலத்தில் உமணர்கள் என்று குறிப்பிடப்பட்டதாக கூறுகிறார் 26 வயது இளைஞர் கோவிந்தராஜ்.

கும்பகோணத்தில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள பெரம்பூர் என்ற ஊரைச் சேர்ந்த இந்த இளைஞர், தன்னுடைய தந்தை திரு கலியமூர்த்தி பார்த்து வந்த உப்பு வியாபாரத்தைப் பாரம்பரிய முறை பிசகாமல் இன்னமும் செய்து வருகிறார்.

“கண்ணபுரம் என்ற என் காளையை உப்பு வண்டியில் பூட்டி அன்றாடம் அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டுவிடுவேன்.பிற்பகல் சுமார் 1 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புவேன்.

“நாள்தோறும் ஊர் ஊராக 20 கி.மீ. சென்று உப்பள உப்பை விற்று வருகிறேன். ஒரு முறை சென்ற ஊருக்கு 15 நாட்கள் கழித்துத்தான் மீண்டும் செல்வேன்.

“நாளுக்கு ஒரு திசையில் கிராமம் கிராமமாகச் செல்வேன். தூத்துக்குடி உப்பளத்தில் இருந்து நேரே வாங்கி கலப்பில்லாத உப்பை விற்கிறேன்.

“அந்தக் கால உப்பு வண்டி பாரம்பரியத்தைக் காக்கிறேன். காளை மாட்டையும் பேணி வளர்க்கிறேன். சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கிறேன். சொந்தமாகத் தொழில் செய்கிறேன்,” என்று பெருமையுடன் கூறினார் திரு கோவிந்தராஜ்.

இளைஞர் கோவிந்தராஜ் கூறியதைக் கேட்ட எனக்கே பெருமையாக, பொறாமையாக இருந்தது.

கோவிந்தராஜ், பள்ளிப்படிப்பை ஒன்பதாம் வகுப்புடன் நிறுத்திவிட்டார்.

இவரின் தந்தை திரு கலியமூர்த்தி மாட்டுச் செக்கில் எண்ணெய் ஆட்டி, அதை மாட்டு வண்டியில் கொண்டு சென்று ஊர் ஊராக விற்று வரும் தொழிலை நடத்தி வந்தார்.

அந்தத் தொழில் நொடித்துப்போகவே அதை விட்டுவிட்டு மாட்டு வண்டியில் உப்பு வியாபாரத்தைத் தொடங்கினார்.

ஓராண்டுக்கு முன் தனது 56 வயதில் திடீரென தந்தை இறந்துவிடவே அந்தத் தொழிலை இப்போது கோவிந்தராஜ் பார்த்து வருகிறார்.

“எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆன பிறகும் என் ஆயுள் முழுவதும் இதே தொழிலைத்தான் செய்வேன்.

“50 கிலோ உப்பு மூட்டையை ரூ.400க்கு வாங்குகிறேன். ஒரு படி உப்பை ரூ.15க்கு விற்கிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை லாபம் கிடைக்கும்.

“மாட்டுக்கு நாள் ஒன்று ரூ.100 செலவு செய்கிறேன். என் வண்டி கூண்டு வண்டி. தென்னை மட்டையால் கூண்டு வேயப்பட்டு இருக்கும். இதனால் மழைக் காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதம் உப்பில் ஏறாது.

“ஆண்டுக்கு ஒரு தடவை வண்டிக் கூண்டை மாற்றி புதிதாக கீற்று போடுவேன். இதற்கு ரூ.1,000 செலவாகும். வண்டியில் இரண்டு டயர் சக்கரங்கள் உள்ளன. அவற்றில் காற்று போய்விட்டால் ரூ.100 கொடுத்து பஞ்சர் ஒட்டிக்கொள்வேன்,” என்றார் திரு கோவிந்தராஜ்.

“உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். உப்புதான் எந்தப் பொருளையும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும். ஆனால், அந்த உப்பிலே இப்போது கலப்படம் செய்துவிட்டார்கள்.

“ஆனால், நான் நேரே உப்பளத்தில் இருந்து உப்பை வரவழைத்து கல் உப்பை விற்கிறேன். நான் விற்கும் கல் உப்பு கலப்பில்லாதது. உப்பில் பல ரகம் உள்ளது. உப்பள (கடல்) உப்பு, ஏரி உப்பு, சுரங்க உப்பு, கிணற்று உப்பு என்று பல வகை உண்டு. இப்போது பொட்டலங்களில் விற்கப்படும் உப்பு பாடம் பண்ணிய உப்பு.

“உப்பை வேதிப்பொருளைக் கொண்டு சுத்தப்படுத்துவார்கள். வெள்ளைவெளேர் என்று இருக்கும். ஆனால் நான் விற்கும் உப்பு அந்த அளவுக்கு வெள்ளையாக இருக்காது. ஆனால் சுத்தமானது.

“தூத்துக்குடி உப்பளத்தில் இருந்து நேரடியாக வரவழைக்கிறேன். வீட்டில் எப்போதுமே உப்பு இருக்க வேண்டும் என்பது வழிவழியான ஒரு நம்பிக்கை. அன்றாட பயனீட்டுக்கு, ஊறுகாய் போட பலவற்றுக்கும் இந்த உப்பை வாங்குவார்கள். உப்பு கெட்டுப் போகாது.

“என் காளைக்கு கண்ணபுரம் என்று பெயர். பெங்களூர், தஞ்சையில் காளை மாட்டை வாங்கலாம். இதன் விலை ரூ.50,000. கண்ணபுரத்திற்கு வயதாகிவிட்டது. விரைவில் மாட்டை மாற்றிவிடுவேன். வயதாகும் மாடுகளைப் பராமரிக்க தனி இடங்கள் இருக்கின்றன. அங்கு கொண்டுபோய் விட்டுவிடுவேன்.

“இப்போது கிராமப் புறங்களிலும் சாலை, தார் சாலையாக இருப்பதால் மாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று அடிக்கடி லாடம் கட்ட வேண்டிய நிலை இருக்கிறது. ஒன்றுவிட்டு ஒருநாள் மாட்டைக் குளிப்பாட்ட வேண்டும். மருத்துவத்திற்கும் செலவாகும். வீட்டின் பின் பக்கத்தில் உள்ள மாட்டுக் கொட்டைகையை அன்றாடம் சுத்தப்படுத்த வேண்டும்.

“அதிகாலையில் கழனி தண்ணீரில் மாட்டுக்குப் பருத்திக்கொட்டை, தீவனம், புண்ணாக்கை கலந்து தீனி வைக்க வேண்டும் வைக்கோல், புல் போடவேண்டும்.

“இந்தக் காலத்தில் மாட்டை வைத்துப் பராமரிப்பது லேசான காரியம் அல்ல. இருந்தாலும் இந்தத் தொழிலை விடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.

“நான் ஒரே பிள்ளை. எனக்கு என் தாயார் திருவாட்டி முத்துலட்சுமி அவர்கள் உதவியாக இருக்கிறார்கள்,” என்று கோவிந்தராஜ் விளக்கினார்.

கிராமங்களில் உப்பை விற்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டு இருந்த கோவிந்தராஜின் உப்பு வண்டியை பெரம்பூர் கடைத்தெரு அருகே பார்த்தேன். மாடு களைப்பாக மெதுவாக நடந்து வண்டியை இழுத்துவந்துகொண்டு இருந்தது.

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வதைப் போல் பாரம்பரியம், கலாசாரம் இல்லாத வாழ்க்கை, உப்புசப்பு இல்லாத வாழ்க்கையாகத்தான் இருக்கும் என்ற எண்ணமே எனக்குள் ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!