ஆசியாவின் ஆகப் பழமையான சொகுசு படகு மன்றத்தை வழிநடத்தும் பாலகிருஷ்ணன்

சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றத்தின் (ஆர்எஸ்ஒய்சி) தலைவராக இரு முறை பணியாற்றியும் தம்மால் இந்தப் பொழுதுபோக்குத் துறைக்கு மேலும் அதிகம் செய்ய முடியும் என்கிறார் ‘கொமடோர்’ (Commodore) பாலகிருஷ்ணன் பாலராஜூ.

தமது 66வது வயதில் மூன்றாவது முறையாக இவ்வாண்டு மன்றத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தற்போது 1,656 உறுப்பினர்களைக் கொண்ட மன்றம், அதன் வசதிகளை மேம்படுத்தி வருவதுடன் உறுப்பினர் எண்ணிக்கையையும் அதிகமாக்க முயன்று வருகிறது. 

2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதன் இருநூற்றாண்டு நிறைவு விழாவையும் கொண்டாட உள்ளது.

“சூப்பர் சொகுசுப் படகு நிறுத்திவைக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, 2040ஆம் ஆண்டு வரை குத்தகைக் காலத்தை நீட்டிப்பதற்கும் இருநூற்றாண்டு நிறைவுக்குத் தயாராவதற்கும் நிதி திரட்டுவது ஆகியவை உள்ளிட்ட பெருந்திட்டம் ஒன்றை நாங்கள் வைத்திருக்கிறோம்,” என்றார் திரு பாலா.

மன்றத்தின் முதல் இந்தியத் தலைவராக இவர் 2007ல் பொறுப்பேற்றார்.

“நான் பாசிர் பாஞ்சாங்கில் வளர்ந்தேன். பாண்டான் நீர்த்தேக்கத்தில் மன்றம் அமைந்திருந்தபோது அங்கே நான் என் பள்ளி நண்பர்களுடன் விளையாடிய காலம் அது. 

“படகோட்டுவதுடன் இதர கடல்சார் விளையாட்டுகளை நான் 1974ல் சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கைகளின்போது கற்றுக்கொண்டேன். கடல் மீது எனக்கு அலாதி ஆசை அன்றே பிறந்தது. ஆனால், காற்பந்து மீது இருந்த ஈடுபாட்டால் நான் படகோட்டுவதில் அப்போது கவனம் செலுத்தவில்லை.

“1995ல் நான் $20,000 செலுத்தி உறுப்பினர் ஆனேன். மன்றத்தின் நடவடிக்கைகளில் மேலும் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினேன். 2003ஆம் ஆண்டில் நான் பணிக்குழு உறுப்பினர் ஆனேன்,” என்றார் திரு பாலா.

மன்றத்திற்கு 2007 முதல் 2009 வரையிலும் 2017 முதல் 2019 வரையிலும் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், மன்றத்தை நீடித்த நிலைத்தன்மையுடையதாக்க அதை நவீனமயமாக்குவதிலும் வர்த்தக உத்திமுறை ஒன்றை உருவாக்குவதிலும் திரு பாலா கவனம் செலுத்தியதாகக் குறிப்பிட்டார்.

வெஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள மன்றக் கட்டடம், ஆசியாவிலேயே ஆகப் பழமையான சொகுசுப் படகு மன்றமாகும். அத்துடன் அது உலகிலேயே ஆறாவது ஆகப் பழமையானதும்கூட. 

கப்பல்களை நிறுத்தி வைக்கும் இடங்களைப் பணிக்குழு மேம்படுத்தி இருப்பதுடன் 32 ஹோட்டல் அறைகளை 60 அறைகளாக அதிகரித்துள்ளது. 

டென்னிஸ் மைதானம், உணவகம் போன்ற வசதிகளும் கட்டித் தரப்பட்டுள்ளன. சமூக நிகழ்வுகளுக்கும் படகுப் போட்டிகளுக்கும் பணிக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

“வெஸ்ட் கோஸ்ட், தெலுக் பிளாங்கா, ஜூரோங் ஆகிய வட்டாரங்களின் குடியிருப்பாளர்களுக்காக படகோட்டுதல் வழியாகவும் மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வழியாகவும் சமூகத்திற்கு நாங்கள் திரும்பக் கொடுத்துள்ளோம். அவர்களுக்காக நாங்கள் நிதி திரட்டியதுடன் எங்களின் வளாகத்திற்கு வருகைதர அழைப்பும் விடுத்துள்ளோம்,” என்றார் திரு பாலா.

தற்போது திரு பாலா தமது நிர்வாகப் பணிக்குழுவுடன் இணைந்து கப்பல்களை நிறுத்திவைக்கும் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

“இதன்படி எங்களின் கப்பல்தொகுதியில் கூடுதலாக இன்னும் ஏழு சூப்பர் சொகுசுப் படகுகளை நிறுத்திவைக்க முடியும். சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து எங்களுக்குக் குத்தகை கிடைத்துள்ளது. அந்த $8 மில்லியன் மதிப்பிலான திட்டம் ஆண்டிறுதிக்குள் முடிவடைந்துவிடும்.

“இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. என் பகல்நேர வேலை மின்னணுத் தொழில்துறை சார்ந்தது. நான் அடிக்கடி தெற்காசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதுண்டு. இதற்கிடையே, அனைத்துத் திட்டங்களையும் அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிப்பது முக்கியம் என்பதால் மன்றத்தின் நடவடிக்கைகளுக்காக நான் நேரத்தையும் ஒதுக்குகிறேன்.

“என் மனைவி, இரு பிள்ளைகள், ஆறு சகோதரர்கள் என என் குடும்பத்தார் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்,” என்றார்.

மன்றத்திடம் திரு பாலா கொண்டுள்ள கடப்பாட்டைப் பலரும் அறிந்துள்ளனர்.

“தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள பாலா பணிக்குழுவில் சேரவில்லை. மன்றத்திற்குச் சேவையாற்றவே சேர்ந்தார். தொலைநோக்குப் பார்வை, அனுபவம், அறிவு ஆகியவற்றை கொண்ட இவரின் நிபுணத்துவம் மன்றத்திற்குப் பலனளித்து வருகிறது,” என்றார் மன்றத்தின் கௌரவச் செயலாளர் நைஜல் ஹோ.

மன்றத்தின் வளர்ச்சிக்காக திரு பாலா 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாடுபடுவது தொண்டூழியப் பணி என்று சுட்டினார் முன்னாள் கௌரவச் செயலாளரான ஜிம்மி கூ.

மன்றத்தின் ஆழ்ந்த மரபுடைமைச் சிறப்பை உணர்த்தும் வகையில் இருநூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பாகப் பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு பாலா, மன்றம் இதுவரை சரியான பாதையில் செல்வதாக நம்புகிறார்.

“நாங்கள் ஒரு மன்றம் மட்டுமல்ல. இதற்கு ஓர் ஆழ்ந்த மரபுடைமையும் உண்டு. உறுப்பினர்கள் இதை அரவணைத்துப் பெருமைப்பட வேண்டும்,” என்றார் திரு பாலா.

ஆர்எஸ்ஒய்சியின் செழிப்பான வரலாறு

‘சூப்பர் யோட்’ நிறுத்திவைக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, 2040ஆம் ஆண்டு வரை குத்தகைக் காலத்தை நீட்டிப்பதற்கும் இருநூற்றாண்டு நிறைவுக்குத் தயாராவதற்கும் நிதி திரட்டுவது ஆகியவை உள்பட பெருந்திட்டம் ஒன்று இருப்பதாக திரு பாலகிருஷ்ணன் கூறினார். படம்: பே.கார்த்திகேயன்

சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம் 1826ஆம் ஆண்டில் கடல்சார் பொழுதுபோக்கு மற்றும் சமூக மன்றமாக நிறுவப்பட்டது. சார் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டபோது அவருடன் இருந்த அதிகாரிகளும் ஆண்களும் இந்த மன்றத்தின் முன்னோடி உறுப்பினர்களாக இருந்தனர்.

தொடக்கத்தில் சிங்கப்பூர் சொகுசுப் படகு மன்றம் என்றிருந்து, பின்னர் 1922ல் ராயல் சிங்கப்பூர் சொகுசுப் படகு மன்றமாகப் பெயர் மாற்றம் கண்டு தற்போதைய பெயரை 1967ல் பெற்றது.

ஆர்எஸ்ஒய்சியின் புரவலர் பட்டியலில் முன்னாள் அதிபர்கள் திரு எஸ்.ஆர்.நாதன், திரு யூசோஃப் இஷாக், திரு ஓங் டெங் சியோங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தஞ்சோங் பெஞ்சுருவில் காணப்பட்ட சதுப்புநிலம் ஒன்றில் மன்றம் அதன் புதிய கட்டடத்தைக் கட்டியது. அப்போதைய அதிபர் யூசோஃப் இஷாக் அதை 1966ல் திறந்துவைத்தார்.

மூன்று முறை ஆர்எஸ்ஒய்சி இடம் மாறி தற்போது 52 வெஸ்ட் கோஸ்ட் ஃபெரி ரோட்டில் அமைந்துள்ளது.          

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!