காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நக்சல் தீவிரவாதம் வலுவடைகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சூரஜ்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும் நக்சல் தீவிரவாதமும் வலுவடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள சூரஜ்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

“அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இன்று ஒட்டுமொத்த சத்தீஸ்கரும் பாஜகவின் பக்கம் நிற்கிறது. சத்தீஸ்கரில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மக்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் வாக்களித்து வருகிறார்கள்.

“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பழங்குடி மக்களின் நலனில் காங்கிரஸ் கட்சி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. பழங்குடி மக்களின் குழந்தைகளின் கல்வி குறித்த எவ்வித சிந்தனையும் அந்த கட்சிக்கு இருக்கவில்லை.

“ஆனால், பழங்குடி மக்களின் நலனில் பாஜக எப்போதுமே அக்கறையுடன் இருந்து வருகிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக வருவார் என உங்களில் யாராவது கற்பனை செய்து பார்த்தது உண்டா? ஆனால், பாஜக அதனை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக ஆகிவிடக்கூடாது என காங்கிரஸ் முயன்றது. அவர் குடியரசுத் தலைவராவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அது பாடுபட்டது. ஆனால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கட்சி பாஜக.

“பழங்குடி மக்களின் குழந்தைகளின் கல்விக்காகப் பணம் செலவழிப்பது வீண் என்று காங்கிரஸ் கருதியது. ஆனால், பழங்குடி மக்களின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கிய கட்சி பாஜக. காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட ஐந்து மடங்கு அதிக நிதி பழங்குடி மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாஜக ஒதுக்கி இருக்கிறது. அதன் காரணமாகவே, தற்போது பழங்குடி மக்கள் நல்ல கல்வியைப் பெற்று வருகிறார்கள். 500 புதிய ஏகலவ்ய மாதிரி பள்ளிகள் பழங்குடியினர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.

“காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் தீவிரவாதிகளின் துணிச்சல் அதிகரிக்கிறது. நக்சல் தீவிரவாதிகளால் ஏற்படும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. அண்மைக் காலங்களில் நக்சல் தீவிரவாதத்துக்கு பாஜகவைச் சேர்ந்த பலர் இரையாகி இருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்புகூட பாஜக பிரமுகர் ஒருவர் நக்சல் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

“அதேபோல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மனிதர்களைக் கடத்தி பணம் பறிப்பதும் போதைப் பொருள் விற்பதும் அதிகரிக்கின்றன. நம் சகோதரிகளும் மகள்களும் அதற்கு இலக்காகிறார்கள். பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த பல பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் எந்தப் பதிலும் கிடையாது.

“நம்பியவர்களின் முதுகில் குத்தும் கட்சி காங்கிரஸ். சத்தீஸ்கரின் இளைஞர்களின் கனவுகளை நனவாக்காத கட்சி காங்கிரஸ். மகாதேவர் (சிவபெருமான்) பெயரிலும் ஊழல் செய்யும் கட்சி காங்கிரஸ்.

“மகாதேவ் பந்தய ஊழல் குறித்து இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உங்கள் பிள்ளைகளைப் பந்தயம் கட்ட வைத்து தனது கருவூலத்தை நிரப்பிக்கொள்கிறது காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை நீங்கள் மன்னிப்பீர்களா?” எனத் மோடி தமது பிரசார உரையில் பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!