தேசிய உணர்வுக்கு உரமூட்டும் தொண்டு

சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கிடையே மக்களைத் தொண்டூழியத்தில் ஈடுபடுத்த முனைகிறது ‘#கிவ்எஸ்ஒன்’ இயக்கம். 2023ன் தேசிய தின அணிவகுப்பு செயற்குழுவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் கீழ் உணவு விநியோகம், முதியோருக்குக் கைகொடுத்தல், வசதி குறைந்த பிள்ளைகளுக்குத் துணைப்பாடம் கற்றுக்கொடுத்தல் போன்றவற்றைத் தொண்டூழியர்கள் இந்த இயக்கத்தின்பேரில் செய்து வருகின்றனர்.

அதிபர் ஹலிமா யாக்கோப் மே மாதம் தொடங்கிய இந்த இயக்கத்தை அணிவகுப்பு செயற்குழுவும் ‘எஸ்ஜிகேர்ஸ்’ அமைப்பும் இணைந்து வழிநடத்துகின்றன. சிங்கப்பூரில் இருப்பவர்கள் செயல்படுத்த விரும்பும் நல்லெண்ணங்களை ஆதரிக்கவும் வழிகாட்டவும் தொடங்கப்பட்ட ‘எஸ்ஜிகேர்ஸ்’, தீவு முழுவதும் மொத்தம் 24 தொண்டூழிய நிலையங்களை நடத்துகிறது. தொண்டாற்ற விரும்புவோருக்குத் தகுந்த சேவைகளைப் பரிந்துரைப்பது இந்த நிலையங்களின் சிறப்பாகும்.

ஜூன் மாத நிலவரப்படி 64,000க்கும் அதிகமான தொண்டூழியர்கள் ‘எஸ்ஜிகேர்ஸ்’ தொண்டூழிய நிலையங்களில் சேவையாற்றி வருகின்றனர். அத்துடன் ‘#கிவ்எஸ்ஒன்’ இயக்கத்துடன் இணைந்து ‘குட்ஹூட்’ அமைப்பினரும் சேவையாற்றுகின்றனர். இத்தகைய சேவையாளர்கள் சிலரை நேரில் கண்டது தமிழ் முரசு.

நட்புக்கரம் நீட்டித் தனிமைத்துயர் துடைப்பவர்

தொண்டூழியர் வனிதா கார்த்திகேயன், 38. படம்: எஸ்ஜிகேர்ஸ்

பிறர் நிலையைப் புரிந்து தனிமை உணர்வைத் தணிப்பதற்கு ஒரே இனத்தையோ வயதையோ சேர்ந்திருக்க வேண்டியதில்லை. ஒருவர் கூறும் சொற்களைக் காதுகொடுத்து கேட்கவேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்து பேசுபவருக்கு இதமான, இயல்பான சூழலை உருவாக்கித்தர வேண்டும்.

தமிழகத்தின் பெரம்பலூரிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த வனிதா கார்த்திகேயன், 38, இந்த உத்திகளைக் கையாண்டு பிற இன முதியோருடனும் சிறாருடனும் பழகி வருகிறார். 2020ஆம் ஆண்டில் கொவிட் 19 காலகட்டத்தில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதில் தொடங்கியது தகவல் தொழில்நுட்பரான திருாவட்டி வனிதாவின் அறப்பணி. தற்போது ‘எஸ்ஜிகேர்ஸ்’ பூன் லே தொண்டூழிய நிலையத்தின்கீழ் வயதானவரையும் பிள்ளைகளையும் பராமரித்து வருகிறார்.

தொண்டூழிய நடவடிக்கைகளைக் காட்டிலும் உதவி பெறுவோருடன் உளமாரப் பழகுவது சிறந்த அனுபவத்தைத் தருவதாக திருவாட்டி வனிதா கூறினார்.

“பிள்ளைகளோடு விளையாட்டுகளில் ஈடுபட்டு நானும் பிள்ளையாக மாறிவிடுவதால் அவர்கள் என்னைப் புரிந்துகொள்கிறார்கள்,” என்றார் அவர்.

தொண்டூழியத்தின் மூலம் அறிவு முதிர்ச்சி கூடியதை உணர்ந்த திருவாட்டி வனிதாவுக்கு குடும்பத்திலும் வேலையிடத்திலும் உள்ளவர்களை நன்கு கையாளும் திறன்கள் மேம்பட்டுள்ளன. கிருமிப்பரவல் போன்ற நெருக்கடி காலகட்டங்களில் ஒருவர் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருத்தல், அவரது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாதல் போன்றவற்றுக்கு வலுவான மனித உறவுகள் கைகொடுப்பதாகக் கூறினார்.

“தனிமை உணர்விலிருந்து மீள நினைப்பவர்கள் இயன்றவரை சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும்படி ஊக்குவிக்கிறேன். தொண்டு மூலம் ஏற்படும் மனநிறைவை வர்ணிக்க முடியாது, செய்து பார்த்ததால்தான் உணர முடியும்,” என்றார்.

உயர்த்திய பெரியோருக்கு உறுதுணையாய் நிற்பவர்

தொண்டூழிய நண்பர்களுடன் மோனிக்கா (நடுவில்). படம்: எஸ்ஜிகேர்ஸ்

தாத்தா வாழ்ந்தபோது அவருக்குச் செல்லப் பேத்தியாக இருந்த என்.மோனிக்கா, அவரை நினைவில் சுமந்து முதியோருக்குத் தொண்டு ஆற்றினார்.

“சிங்கப்பூரின் செழிப்புக்கு முதியவர்கள் முற்காலத்தில் தந்த உழைப்புதான் காரணம். எனவே அவர்களை மதிக்கவேண்டும்,” என்கிறார் மோனிக்கா.

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த திருவாட்டி மோனிக்கா இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணி நிமித்தமாகத் தங்கினார். பிற நாடுகளில் தொண்டாற்றியபோதும் அது நிதித்திரட்டுகளோடு நின்றுவிடுவதாகக் கூறினார்.

“ஆனால் சிங்கப்பூரில் நான் செய்யும் தொண்டு என்னை மக்களுடன் நேரடியாக இணைக்கிறது,” என்றார் அவர்.

வழக்கமாக மாதத்தில் இரு முறை தொண்டூழியச் சேவையாற்றும் திருவாட்டி மோனிக்கா, வயதானவர்களுக்காக உடற்பயிற்சி, வண்ணம் தீட்டுதல், பாடல் அங்கங்கள் போன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

முதியோர் அவ்வப்போது அதிருப்தி அடைந்து தம்மைக் கடிந்துகொண்டாலும் பொறுமையுடன் அனுசரிப்பதே சிறந்தது என்றார் அவர்.

“மனதிற்குப் பிடித்த தொண்டைச் செய்யுங்கள், நண்பர்களுடன் செய்யுங்கள்,” என்பதே திருவாட்டி மோனிக்கா தொண்டூழியர் ஆக விரும்புவோருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறார்.

“எல்லோருக்கும் எல்லாவிதத் தொண்டூழியப் பணிகள் பொருந்தாது. எனவே உங்களுக்குப் பிடித்ததை முயன்று பாருங்கள்,” என்றார்.

இல்லாதவருக்குத் தந்து இன்பம் துய்ப்பவர்

மனைவி சண்முகப்பிரியாவுடன் இணைந்து சேவையாற்றும் விஜயகுமார் சிவசாமி, 37. படம்: ‘குட்ஹூட்’ 

தமிழ்நாட்டிலிருந்து 2010ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த விஜயகுமார் சிவசாமி, 37, வசதி குறைந்தோருக்கு அத்தியாவசியப் பொருள்களை அளிக்கும் திட்டம் மூலமாக இந்நாட்டைத் தம் இல்லமாக்கிக்கொண்டார். பல ஆண்டுகள் தொண்டாற்றிய பின், 2019ல் திருமணம் செய்து தம் மனைவியை இந்நாட்டுக்கு அழைத்து வந்தார்.

‘வாலண்டியரிங்.எஸ்ஜி’ தளத்தின் மூலம் தொண்டூழிய வாய்ப்புகளை அறிந்துகொண்ட இவர்கள், வேலைப்பளுவால் ஏற்படும் நேர நெருக்கடியைச் சமாளித்து வாரயிறுதிகளில் நிகழும் தொண்டூழிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

பொருள் விரயத்தைத் தவிர்க்கும் வகையில் அவற்றை மீட்டெடுத்து மறுபயனீடு செய்யும் ‘குட்ஹூட்’ என்ற அமைப்பின் திட்டங்களில் அவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர்.

“இப்படி ஆயிரக்கணக்கான பொருள்கள் உள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே போதிய அளவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்,” என்று அவர் கூறினார்.

மாதந்தோறும் இந்த அறப்பணிக்காக உழைப்பையும் பணத்தையும் ஒதுக்கி இவர்கள் சேவையாற்றுகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் பாராமல் பிறரது வாழ்க்கையில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவது மனநிறைவைத் தருவதாக இத்தம்பதியர் தெரிவித்தனர். தொண்டு செய்ய அதிக நேரம் இல்லை என்று சொல்பவர்களும் மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது செய்துபார்க்கும்படி ஊக்குவிக்கிறார் திரு விஜயகுமார்.

“உதவி என்பது எல்லோருக்கும் ஒருநாள் தேவைப்படும். எனவே ஒருவரை ஒருவர் ஆதரிக்கும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு,” என்றார் அவர்.

பிள்ளைகளின் உடலை உறுதிப்படுத்துபவர்

சிறுவர்களுக்குக் காற்பந்துப் பயிற்சி அளிப்பதன் வழி தொண்டூழியம் புரிகிறார் தனிஷ். படம்: கே தனிஷ்

சிறார்களுக்குக் காற்பந்துப் பயிற்சியைத் தொண்டூழியமாக வழங்கும் வங்கியாளர் கே தனிஷ், 35, இதன் வழியாக சிங்கப்பூர் மீதான தமது கடப்பாட்டை வலுப்படுத்தி வருவதாகக் கூறினார்.

பெங்களூரைச் சேர்ந்த இவர், கடந்த ஈராண்டுகளாக ‘எஸ்ஜிகேர்ஸ்’ திட்டத்தின்கீழ் செயலாற்றி வருகிறார். ‘ஸ்பெக்ட்ரா’ திட்டத்தின்கீழ் பொங்கோல் வட்டாரத்தில் பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் காற்பந்து கற்பித்து வருகிறார். கல்லூரி நாள்களில் காற்பந்துக்காகப் பல்வேறு பதக்கங்களைப் பெற்ற திரு தனிஷ், விளையாட்டு மூலம் மாணவர்களின் கட்டொழுங்கை வளர்க்க முனைகிறார்.

காற்பந்து பயிற்றுவிப்பாளராகச் செயலாற்றுவதற்கு முன், அங் மோ கியோவிலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்காக சில வார நாள்களில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். தற்போதைய பொறுப்பிலும் திரு தனிஷ், வசதி குறைந்த பிள்ளைகளுக்குக் காற்பந்து உடைகளையும் காலணிகளையும் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

‘எஸ்ஜிகேர்ஸ்’ வழியாக பிள்ளைகளுக்குக் கற்பித்து அவர்களைச் சரியாக வழிநடத்தக் கற்றுக்கொண்டதாக இரு பிள்ளைகளுக்குத் தந்தையாக இருக்கும் திரு தனிஷ் கூறினார். வழிகாட்டும் திறன்களை மூத்த பயிற்றுவிப்பாளர்களிடம் கற்க முடிவதாகவும் கூறினார். தொண்டாற்றும்போது பிள்ளைகளுடன் ஏற்படும் பிணைப்புணர்வால் தொண்டூழியம் செய்ய அலுத்துக்கொள்வதில்லை என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!