இலவச பரோட்டா வழங்கிய ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’

2023 மிஷலின் வழிகாட்டிகளில் இடம்பெற்றுள்ள ‘அநேகமாக ஒரே’ பரோட்டா உணவகம் என கூறப்படும் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’, இச்சாதனையைக் கொண்டாட தன் அனைத்துக் கிளைகளிலும் இரு நாள்களுக்கு இலவச பரோட்டாக்களை வழங்கியது.

செப்டம்பர் 25, 26 ஆம் தேதிகளில் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா உணவகங்களில் அமர்ந்து உண்டோருக்கு ஆளுக்கு இரு பரோட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

சிங்கப்பூரில் அனைத்து ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’ கிளைகளிலும் ஆளுக்கு இரு பரோட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டன. படம்: ஸ்பிரிங்லீஃப் பரோட்டா

அதனால், பொதுவாக சனி, ஞாயிறுகளில் காணும் கூட்டத்தை வார நாள்களில் காண முடிந்ததாகக் கூறினார் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’ நிறுவனத் தோற்றுநர் சு.வி.குணாளன், 49.

2019 மே மாதத்திலும் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’, லிவர்பூல் அணிச் சட்டையை அணிந்துவந்தோருக்கு நாள் முழுதும் நான்கு பரோட்டாக்களை இலவசமாக வழங்கியது. சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில், லிவர்பூல் அணி பார்சலோனா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததைக் கொண்டாடும் விதமான அந்நடவடிக்கை இடம்பெற்றது. ரமலான் நோன்புக் காலத்தில் இடம்பெற்றதால் நோன்பு முடித்ததும் பலருக்கும் இனிய விருந்து காத்திருந்தது.

2019 மே மாதத்தில் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’, லிவர்பூல் அணிச் சட்டையை அணிந்துவந்தோருக்கு நாள் முழுதும் நான்கு பரோட்டாக்களை இலவசமாக வழங்கியது. படத்தில்: மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுடன் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’ தோற்றுநர் சு.வி.குணாளன், 49 (வலம்) படம்: ஸ்பிரிங்லீஃப் பரோட்டா

சிங்கப்பூர் மிஷலின் வழிகாட்டியில் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’ இடம்பெற்றுள்ளது இது இரண்டாவது முறை. 2019லும் இச்சாதனையை அது படைத்தது.

“மிகவும் சந்தோஷமாக இருக்கிறது,” என்ற குணாளன், தாங்கள் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து தரம்வாய்ந்த பரோட்டாக்கள் வழங்கிவருவதை இச்சாதனைக்குக் காரணமாகக் கருதுகிறார்.

மேலும், தங்கள் கடைகளில் பரோட்டா உடனுக்குடன் செய்யப்படுவதால், சுவை குறையாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். குளிர்சாதனம், அழகான சுவர்ப்படங்கள் என நல்ல சுற்றுச்சூழலில் அமர்ந்து உணவருந்தலாம் என்பதை அவர் குறிப்பிட்டார்.

விதவிதமான உணவுவகைகளைச் செய்வதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றன ஸ்பிரிங்லீஃப் உணவகங்கள். ஐரோப்பிய, மலேசிய, இத்தாலிய, கொரிய, ஜெர்மானிய என பன்னாட்டுச் சாயல்களையும் உணவுவகைகளில் புகுத்துகின்றன.

ஒவ்வொரு தேசிய தினமும் ஒரு வித்தியாசமான பரோட்டாவை அறிமுகப்படுத்தும் ஸ்பிரிங்லீஃப், இவ்வாண்டு ஜப்பானிய உணவுவகையான ‘ஒக்கொனொமியாக்கி’யை தனது பாணியில் வழங்கியது. அடுத்த ஆண்டு தேசிய தினத்துக்கான சிறப்பு உணவுவகை பற்றி மார்ச் மாதம் கலந்துரையாடல்கள் தொடங்கும்.

இவ்வாண்டு தேசிய தினத்துக்கு ஜப்பானிய உணவுவகையான ‘ஒக்கொனொமியாக்கி’யை (Okonomiyaki) தன் பாணியில் வழங்கியது ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’.

மண்டாயில் உள்ள மத்திய சமையலறையில் மாவு, குழம்புவகைகள் தயாரிக்கப்படுவதால் அனைத்துக் கிளைகளுக்கும் அதே தரம்வாய்ந்த உணவு கிடைப்பது இந்த உணவகத்தின் சிறப்பு.

உணவகத்தின் மற்றொரு தனித்துவம், அதன் மத்திய சமையலறையில் பணியாற்றுபவர்களில் 40% ஆட்டிசம் போன்ற சிறப்புத் தேவை உடையவர்கள். இவர்கள் 80% மாவைத் தயாரிக்கின்றனர்.

ஆட்டிசம் வளநிலையத்தின் உதவியோடு ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’, 2030க்குள் மத்திய சமையலறையில் சிறப்புத் தேவை உடைய ஊழியர் விகிதத்தை 80%ஆக உயர்த்த விரும்புகிறது.

2003, பிப்ரவரி 28ல் தொங் சூன் அவென்யூவில் முதன்முதலில் தொடங்கியது ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’. அதைத் தொடங்குவதற்குமுன் கல்வி அமைச்சில் மேலாளர், கணக்காய்வாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார் குணாளன்.

‘ஸ்ப்ரிங்க்லீஃப் பரோட்டா’ தோற்றுநர் திரு சு.வி.குணாளன், 49. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“தொடக்கத்தில் வாரத்தின் 7 நாள்களும் ஓய்வெடுக்க முடியாமல் நீண்ட நேரம் வேலை செய்தேன். என் மனைவி மகாலட்சுமி தனராஜின் உந்துதலால் பணிகளைப் பிரித்துக் கொடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, வார இறுதி நாள்களை குடும்பத்துடன் செலவிடும் நிலைக்கு முன்னேறினேன்,” என்றார் அவர்.

இத்தம்பதிக்கு லரண்யா, 13, கவின், 16 என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தம் குழுவின் ஒட்டுமொத்த உழைப்பினால் இன்று சிங்கப்பூரில் பத்து கிளைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார் குணாளன்.

ஒவ்வொரு கிளையின் மேலாளரும் தன்னிடம் மூன்று, நான்கு ஆண்டுகளாவது பணியாற்றியவர் என்றும் அவருக்கு சம்பளத்துடன் லாபத்தில் ஒரு பங்கும் தரப்படுவதாக அவர் கூறினார்.

இதன்வழி, புதிய கிளைகளில் தரமும் ஊக்கமும் குறையாதபடி காப்பதாகக் கூறினார். “இங்கு நாங்கள் அனைவரும் உணவையும் சரி, லாபத்தையும் சரி அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்,” என்றார்.

புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின்பு மிஷலின் ‘பிப் கூர்மண்ட்’ (Bib Gourmand) அங்கீகாரத்துக்கும் முயற்சி செய்யப்போவதாக அவர் கூறினார்.

அடுத்த மாதம், பாசிர் ரிஸ் குளோஸ் 1 (#01-340), டௌன்டவுன் ஈஸ்டில் 11வது கிளையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா’. திறப்புநாளில், கடையில் அமர்ந்து உண்போருக்கு ஆளுக்கு இரு பரோட்டாக்கள் இலவசமாக வழங்கப்படும். மேல்விவரங்களுக்கு https://www.facebook.com/realspringleafprataplace என்ற ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம்.

2023 மிஷலின் வழிகாட்டிக்கு இந்த இணைய முகவரியை நாடலாம்: https://guide.michelin.com/sg/en/singapore-region/singapore/restaurant/…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!