நமஸ்தே பாரத் 2024 விளம்பரத் தூதர் குஷ்பு: ‘ஒரு பெண்ணால்தான் முடியும்’

சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஜனவரி 25 முதல் 28ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் நான்கு நாள் ‘நமஸ்தே பாரத் 2024’ மாபெரும் பண்பாட்டுக் கண்காட்சியின் திறப்பு விழாவில் புகழ்பெற்ற இந்திய நடிகை குஷ்பு சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்தியாவின் சிறந்த பாரம்பரியத்தைப் பிரதிபலித்து, தொழில்முனைவர்கள் பலரின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் ‘நமஸ்தே பாரத்’ அமைக்கப்பட்டிருப்பதால் இந்நிகழ்ச்சிக்கு விளம்பரத் தூதராகத் தான் ஆதரவு வழங்குவதாகக் கூறினார் குஷ்பு.

நடிகை குஷ்புவுடன், வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) நடந்த திறப்பு விழாவின் தலைமை விருந்தினராகப் பங்குபெற்றார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே. இந்தியாவின் ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ செயல்திட்டத்திற்கேற்ப ‘நமஸ்தே பாரத்’ வெவ்வேறு பகுதிகளின் தனித்துவப் பொருள்களைக் காட்சிப்படுத்துவதை அவர் சுட்டினார்.

11வது முறையாக நடைபெறும் ‘நமஸ்தே பாரத்’ இவ்வாண்டு இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி நிகழ்வது தனிச் சிறப்பு. இதில் 100க்கு மேற்பட்ட கடைகள், இந்திய உணவு, உடை, கைவினைப் பொருள்கள், சிறுவர்களுக்கான நடவடிக்கைகள் என இந்தியாவின் பாரம்பரியத்தை வகைவகையாக வெளிப்படுத்துகின்றன.

“கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்திற்குப் பின்பு முதன்முறையாக இதை நடத்துகிறோம். சிங்கப்பூர் மக்கள் இந்தியாவின் தொன்மையான கலாசாரத்தைப் புரிந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது,” என்றார் ‘நமஸ்தே பாரத்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ‘டி ஐடியாஸ்’ தலைமை நிர்வாகியும் தோற்றுநருமான திருவாட்டி பூர்ணிமா காமத்.

‘ஒரு பெண்ணால்தான் முடியும்’

“பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய ஒரு பெண்ணால்தான் முடியும்,” என மேடையில் கூறிய நடிகை குஷ்பு, அதற்குச் சான்றாக வாழ்ந்தும் காட்டிவருகிறார். திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி, தாயார் எனப் பல பொறுப்புகளை ஏற்று அவற்றைச் செவ்வனே நிறைவேற்றிவருகிறார் அவர்.

தன் பிள்ளைகளை வேறொருவர் பொறுப்பில் விடாமல், தானே அவர்களை வளர்த்ததாகவும் நடிப்புத் துறையில் இருந்தாலும் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளைச் செய்வதாகவும் கூறினார் குஷ்பு.

மனவுறுதியுடன் செயல்படுவதால் அரசியல் வாழ்க்கை, ஊடக ஈடுபாடு, குடும்ப வாழ்க்கை என்று அனைத்தையும் தன்னால் சமாளிக்க முடிவதாகக் கூறினார் அவர்.

சிங்கப்பூர் அளிக்கும் மலரும் நினைவுகள்

சிங்கப்பூருக்குப் பல முறை வந்துள்ளதாகக் கூறினார் குஷ்பு. “சிங்கப்பூருக்கு வரும்பொழுது இந்தியர்கள் பலரைப் பார்க்க முடிவதால் இந்தியாவிற்குள் ஓர் இடத்திற்குச் செல்வதுபோன்றே உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் ரசிகர்கள் மரியாதையாக நடந்துகொள்கிறார்கள். பொது இடங்களில் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படும் தனிமையைக் கொடுக்கிறார்கள்,” எனப் பாராட்டினார் குஷ்பு.

‘வெல்வது முக்கியமன்று’

பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான குஷ்பு, இவ்வாண்டு நடக்கவிருக்கும் தேசிய தேர்தலில் தான் ஆற்றவிருக்கும் பங்கு எத்தகையது என்று இன்னும் தெரியவில்லை என்றார்.

“தனிநபர் வெல்வது முக்கியமன்று. அது குஷ்புவாக இருக்கலாம், வேறு யாராகவும் இருக்கலாம். கட்சி வெல்லவேண்டும்.

“கட்சியின் முடிவுக்கேற்ப எனக்கு எந்தப் பொறுப்பு தரப்பட்டாலும் அதைச் சிறப்பாக நிறைவேற்றுவேன்,”என்றார் குஷ்பு.

‘பல வாய்ப்புகள் உண்டு’

“நான் சிறுவயதிலிருந்து நடித்துவருகிறேன். எனக்கு சினிமா மட்டும்தான் தெரியும். சினிமாவிற்கு அப்பால் வேறு இடத்தில் பணியாற்ற எனக்குத் தெரியாது,” எனத் தனது திரைப்படத் துறைப் பயணம் பற்றிக் கூறிய குஷ்பு, இன்றைய காலகட்டத்தில் திரையுலகில் நுழையத் தயக்கம் தேவை இல்லை என்றார்.

“இப்பொழுது வெவ்வேறு துறைகளிலிருந்து பெண்கள் - மருத்துவர்கள், பொறியாளர்கள், படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்கள்கூட சினிமாத் துறைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது திரையுலகம் அவர்களுக்கு வழங்கும் தளங்கள் பெரிதாக உள்ளன,” என்றார் குஷ்பு.

இன்றைய நடிகைகளுக்கு குஷ்பு அறிவுரையும் வழங்கினார். காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளவேண்டும் என்றும் ஒருவரது உடல்வாகை கேலி செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார். இக்காலத்தில் நடிகையாக வெற்றிபெற சற்று ஒல்லியாக இருப்பது உதவும் என்கிறார் குஷ்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!