அனுஷா செல்வமணி
கிட்டத்தட்ட 102 ஆண்டுகள் நீடித்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான எண் 25, சுங்கை காடுட் அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில், தேசிய மரபுடைமைக் கழகத்தின் பசுமையும் எழிலும் மிகுந்த புதிய உண்ட்லண்ட்ஸ் மரபுடைமைப் பாதையில் அங்கம் வகிக்கிறது.
அதனுடன் சேர்த்து ஸ்ரீ சிவகிருஷ்ண ஆலயம் உள்ளிட்ட உட்லண்ட்ஸ் வட்டாரத்தைச் சுற்றிய 15 வரலாற்று இடங்கள் அந்தப் பாதையில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னர் வேறு இடத்திலிருந்து, புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் வரலாற்றையும் பெருமையையும் பொதுமக்கள் ஒரு மணி நேர மிதிவண்டி சவாரியிலோ இரண்டரை மணிநேர நடைப்பயணத்திலோ கண்டு ரசிக்கலாம்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தைப் பற்றி மேலும் அறிய தேசிய மரபுடைமைக் கழகம் அதன் 23வது மரபுடைமைப் பாதையை இம்முறை உட்லண்ட்ஸில் அமைத்துள்ளது.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தின் வரலாற்றை நினைவூட்டும் வண்ணத்தில் ராணுவ வரலாறு, சமூகங்கள், வழிபாட்டுத் தலங்கள், நவீன வட்டாரமாக உருவெடுத்த விதம் ஆகிய பாதைகள் உட்லண்ட்ஸின் பரிமாண மாற்றத்தைக் காட்டும்.
இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற சமயத்தில் இந்த வடக்கு வட்டாரத்திலுள்ள கடலோர, ஆற்றங்கரை குடியேற்றங்களும் அவை நம் நாட்டின் வரலாற்றுக்கு எவ்வாறு பங்கு வகித்தது என்பதையும் இதன்மூலம் அறியலாம்.
உட்லண்ட்ஸ் சமூகங்கள், போரில் இருந்த உட்லண்ட்ஸ், இயற்கை வனப்பு மிகுந்த உட்லண்ட்ஸ் என மூன்று விதங்களில் நம்மை அழைத்துச் செல்லவிருக்கும் இந்தப் பாதைகளில், பொதுமக்கள் மிதிவண்டி ஓட்டி அல்லது நடந்து செல்லலாம்.
'உட்லண்ட்ஸ் எட் வார்' பாதையானது, அட்மிரல்ட்டி பூங்காவாக மறுசீரமைக்கப்பட்டுள்ள கடந்தகால ராணுவத் தளங்களின் பின்னணியை நமக்கு எடுத்துக்காட்ட உள்ளது.
கடைசிப் பாதையான 'கம்யூனிட்டிஸ் ஆஃப் உட்லண்ட்ஸ்' பாதை, வரலாற்றுச் சிறப்புமிக்க பல சமய வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லவிருக்கின்றன.
ஸ்ரீ சிவகிருஷ்ண ஆலயம், கிராஞ்சி போர் கல்லறை, புகழ்பெற்ற மார்சிலிங் உணவங்காடி நிலையம் முதலிய இடங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
நேற்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்தப் பாதைகளின் வரைபடத்தையும் துணை வழிகாட்டிகளையும் பொதுமக்கள், www.roots.gov.sg என்ற இணையத்தளத்தில் காணலாம். துணை வழிகாட்டிகளை, உட்லண்ட்ஸில் இருக்கும் அனைத்து சமூக மன்றங்களிலும், சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், ஆசிய நாகரிக அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகத்தின் தலைமையகம் ஆகியவற்றிலும் காணலாம்.