50 வயதை எட்டியவருக்கு மேலும் உதவி

மாஜுலா தொகுப்புத் திட்டத்தின் கீழ் 1.4 மி. சிங்கப்பூரர்களுக்கு மசேநிதியில் பணம் 

இந்த ஆண்டு 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரர்கள், ஓய்வூதியச் சேமிப்பை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய மாஜூலா தொகுப்புத் திட்டத்தின்கீழ் விரைவில் கூடுதல் உதவிகளைப் பெறுவார்கள்.

அவர்கள் தொடர்ந்து வேலை பார்க்கும்வரை ஆண்டுக்கு $1,000 வரையிலான மத்திய சேம நிதி (மசேநிதி) போனஸைப் பெறுவார்கள்.

மசேநிதி அடிப்படை ஓய்வூதியத் தொகையை எட்டாதவர்கள் ஒருமுறை மசேநிதி போனஸாக $1,500 வரை பெறுவார்கள்.

மேலும், 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடையவர்கள் $1,000 வரை ஒருமுறை மெடிசேவ் போனஸைப் பெறுவர்.

1973ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்களை இலக்காகக்கொண்டு, குறைந்த வருவாய், குறைந்த செல்வம் உள்ளவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டத்தினால் அரசாங்கத்திற்கு $7 பில்லியன் செலவாகும்.

இதற்குத் தகுதிபெற வருமானம், வசிப்பிடத்தின் ஆண்டு மதிப்பு, சொந்த சொத்துகளின் எண்ணிக்கை, மசேநிதி சேமிப்பு போன்றவற்றை அடிப்படையாகக்கொண்ட தகுதி மதிப்பீடு செய்யப்படும். தகுதிக்கான அளவுகோல் 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்படும்.

முதிய சிங்கப்பூரர்கள் தங்களால் இயன்றவரை தொடர்ந்து வேலை பார்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினருக்கும் இந்தத் தொகுப்புத் திட்டம் பயனளிக்கும்.

மொத்தத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்த 1.4 மில்லியன் முதிய சிங்கப்பூரர்கள், அல்லது பத்தில் எட்டுக்கும் அதிகமான 2023ஆம் ஆண்டில் 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரர்கள் இத்தொகுப்பின் கீழ் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய தினப் பேரணியில் இந்த தொகுப்பை அறிவித்த பிரதமர் லீ சியன் லூங், “இதை 58வது தேசிய தினப் பரிசாக நினைத்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

சிங்கப்பூர் மக்கள்தொகை தொடர்ந்து மூப்படைந்து வருவதால், மாஜுலா தொகுப்பு, திரு லீ “இளம் முதியவர்கள்” என்று குறிப்பிடும் 50களிலும் 60களின் முற்பகுதியிலும் உள்ள சிங்கப்பூரர்களை இலக்காகக்கொண்டது.

இந்தப் பிரிவில் உள்ளோர் 1950க்கும் 1959க்கும் இடையில் பிறந்த மெர்டேக்கா தலைமுறையினரையும், 1949 அல்லது அதற்கு முன்னர் பிறந்த முன்னோடித் தலைமுறையினரையும்விட இளையவர்கள். இதில் ஓய்வுபெற உள்ளவர்கள் அல்லது அண்மையில் ஓய்வுபெற்றவர்கள் அடங்குவர்.

“இளம் முதியவர்கள்” சிங்கப்பூரின் வளர்ச்சியில் அதிக பயனடைந்துள்ளனர் என்றும், முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாக நல்லநிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் இளைய ஊழியர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் தங்கள் வாழ்நாளில் குறைவாகவே சம்பாதித்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

மசேநிதி மேம்பாடுகளினால் பயனடைய அவர்களுக்கு குறைவான காலமே உள்ளது என்பதுடன், குறைந்த ஓய்வூதிய சேமிப்பையுமே கொண்டுள்ளனர் என்றார் அவர்.

இந்தத் தொகுப்பு அவர்களின் ஓய்வூதியம் குறித்த கவலையைப் போக்க முயல்கிறது. ஏனெனில், அவர்கள் இரு தலைமுறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நடுப் பிரிவினர்.

தங்கள் குடும்பங்களில் உள்ள இள வயதினர், வயதானவர்கள் என இரு தரப்பினரையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். பலருக்கு இன்னும் சொந்தக் காலில் நிற்கத் தொடங்காத இளம் வயது பிள்ளைகளும், கூடுதல் கவனிப்பு தேவைப்படும் வயதான பெற்றோரும் உள்ளனர்.

அவர்கள் தங்கள் உடல்நலம் குறித்தும் கவலைப்பட வேண்டும். இவையெல்லாம் வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலையோடு கூடுதல் அழுத்தத்திற்கு வழிவகுப்பவை என்று திரு லீ கூறினார்.

வேலை பார்ப்போருக்கு ‘சம்பாதித்து சேமியுங்கள்’ போனஸ்

இந்தத் தொகுப்புத் திட்டத்தின் முதல் பகுதி, ‘சம்பாதித்து சேமியுங்கள்’ போனஸ் திட்டம்.

இதன்கீழ் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு ஆண்டுக்கு $400 முதல் $1,000 வரையிலான மசேநிதி போனஸ் கிடைக்கும். முழு நேரமோ அல்லது பகுதி நேரமோ வேலை பார்ப்பவர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும். பெறுநரின் மசேநிதி கணக்கில், வழக்கமான முதலாளி, ஊழியர் பங்களிப்புகளுடன் கூடுதலாக வரவு வைக்கப்படும்.

“பெரும்பாலான இளம் முதியவர்கள் இன்னும் வேலை செய்கிறார்கள். மேலும் ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகள் உள்ளன. முடிந்தவரை தொடர்ந்து வேலை பார்க்க ஊக்குவிக்கிறோம்,” என்றார் திரு லீ.

எடுத்துக்காட்டாக, 65 வயதில் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ள 55 வயது, குறைந்த வருமானம் கொண்ட ஒருவர் ‘சம்பாதித்து சேமியுங்கள்’ போனஸ் திட்டத்தினால் 10 ஆண்டுகளில் தனது மசேநிதி கணக்கில் வட்டியுடன் கூடுதலாக $12,000வரை பெறுவார் என்றார் திரு லீ.

ஓய்வுக்காலச் சேமிப்பு போனஸ்

முதிய சிங்கப்பூரர்களை ஓய்வுக் காலத்துக்கு தயார்ப்படுத்த, மசேநிதி கணக்கில் அடிப்படை ஓய்வூதியச் சேமிப்பை எட்டாதவர்களுக்கு இத்தொகுப்பு ஓய்வுக்காலச் சேமிப்பு போனஸை வழங்கும். அவர்கள் $1,000 முதல் $1,500 வரை ஒருமுறை வழங்கப்படும் மசேநிதி போனஸைப் பெறுவார்கள்.

வேலை செய்யாதவர்கள், குறைந்த மசேநிதி இருப்பு வைத்திருக்கும் இல்லத்தரசிகளையும் இத்திட்டம் உள்ளடக்கும்.

அடிப்படை ஓய்வூதியச் சேமிப்பு என்பது, மசேநிதி உறுப்பினர் 55 வயதில் ஓய்வூதியத் தேவைகளுக்காக ஒதுக்க வேண்டிய குறைந்தபட்சத் தொகையாகும்.

தற்போது, ​​இந்த ஆண்டு 55 வயதை எட்டுபவர்களுக்கான மசேநிதி அடிப்படை ஓய்வூதிய சேமிப்புத்தொகை $99,400 ஆகும். இது 2027 வரை ஆண்டுக்கு ஆண்டு 3.5% அதிகரிக்கும். அதாவது 2027இல் 55 வயதை எட்டுபவர்களுக்கு இத்தொகை $114,100 ஆக இருக்கும்.

மெடிசேவ் போனஸ்

மாஜுலா தொகுப்புத் திட்டத்தின் இன்னொரு பகுதி, $500 முதல் $1,000 வரை ஒருமுறை வழங்கப்படும் மெடிசேவ் போனஸ்.

சிங்கப்பூரர்கள் மருத்துவச் செலவுகள், காப்புறுதி சந்தாக்களை செலுத்துவதற்கு இது கூடுதல் உதவியாக இருக்கும் என்றார் பிரதமர்.

முதியோர் ஆதரவு (சில்வர் சப்போர்ட்), வேலைநலன் ஊக்கத்தொகை, வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில், மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கில் தொகை நிரப்பும் திட்டம் போன்ற தற்போதைய திட்டங்களையும் அரசாங்கம் மேம்படுத்தும் என்று திரு லீ கூறினார். மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் 2024ல் அறிவிக்கப்படும்.

நடப்பு ஆட்சிக்காலத்தின் நிதிவளத்தைப் பயன்படுத்தி, மாஜுலா தொகுப்புத் திட்டத்தின் முழு வாழ்நாள் செலவினத்தைச் சமாளிக்க நிதி அமைச்சு ஒரு புதிய நிதியை உருவாக்கும் என்றார் அவர்.

“வருங்கால சந்ததியினருக்கு சுமை ஏற்படுத்தாமல் இந்தக் கடப்பாட்டை ஏற்று நடத்துவோம்,” என்று பிரதமர் உறுதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!