அப்பர் புக்கிட் தீமா வெடிகுண்டுச் செயலிழப்பு நடவடிக்கை: 4,000 குடியிருப்பாளர்கள், 1,000 வீடுகள் பாதிப்பு

அப்பர் புக்கிட் தீமா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) மேற்கொள்ளப்படவிருக்கிறது.

கட்டுமானத் தளம் ஒன்றில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெடிகுண்டு 100 கிலோ எடை கொண்டது. அதை வேறு இடத்திற்கு மாற்றுவது ஆபத்து என்பதால், அது அவ்விடத்திலேயே செயலிழக்கச் செய்யப்படும்.

பாதுகாப்புக் கருதி அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். இதனால் 1,000 வீடுகள் பாதிக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

கிட்டத்தட்ட 4,000க்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை தொடர்பில், இம்முறை ஆக அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுவதாகக் கருதப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அவ்வேளையில், தி லீனியர், ஹேசல் பார்க், புக்கிட் 828, ஹேசல் பார்க் டெர்ரஸ், புளோக் 154 கங்சா ரோட், அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள கடைவீடுகள் ஆகியவற்றில் இருந்து அனைவரும் வெளியேற்றப்படுவர்.

பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களில் 57 வயது சுப்பிரமணியம் நல்லப்பனும் ஒருவர். ஹேசல் பார்க் கூட்டுரிமை வீட்டில் வசிக்கும் இவர், அந்த வட்டாரத்தில் கரு’ஸ் இந்திய வாழையிலை உணவகத்தை நடத்தி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் கடையையும் மூடவேண்டியிருப்பதால் கிட்டத்தட்ட $8,000 வருவாயை இழக்க நேரிடும் என்கிறார் இவர்.

“வேறு வழியின்றி கடையை மூடினாலும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது,” என்று சுப்பிரமணியம் கூறினார்.

வீட்டிலும் தங்க முடியாது என்பதால், மனைவி, குழந்தைகளுடன் விலங்கியல் தோட்டத்தில் பொழுதைக் கழிக்கத் திட்டமிட்டுள்ளார் இவர்.

அந்தப் பகுதியில் ‘ஜல் யோகா’ எனும் நிலையத்தை நடத்துவோர் $11,000 இழப்பு நேரிடும் என்கின்றனர். செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டிய 10 வகுப்புகளை ரத்து செய்வதால் 250 வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வட்டாரத்தில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையம், அதன் நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தொட்டியில் இருந்து எரிபொருளை முழுமையாக அகற்றவிருக்கிறது.

அந்த நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புளோக் 154 கங்சா ரோட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் வெடிகுண்டுச் செயலிழப்புத் திட்டம் குறித்துத் தகவல் அறிந்துகொண்டனர்.

செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றத்தில் அவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் செல்லப் பிராணிகளுக்கு அங்கே அனுமதி இல்லை.

சன்னல் கண்ணாடிகள் சிதறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் குடியிருப்பாளர்கள் வீடுகளின் சன்னல்களைத் திறந்துவைக்கும்படி காவல்துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

வியாழக்கிழமை முதல் தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வு எழுதும் மகளுக்கு சமூக மன்றத்தில் அமர்ந்து படிப்பது சிரமமாக இருக்கும் என்று குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

‘ஹேசல் பார்க்’ கூட்டுரிமை குடியிருப்பில் வசிப்போர் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.

குடியிருப்பாளர்கள் கருத்து

“சிங்கப்பூர் காவல்துறைமீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால் நங்கள் அஞ்சவில்லை. வீட்டில் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் செல்வோம்,” என்றனர் ராபர்ட்-ரீணா தம்பதியினர். தங்கள் அண்டைவீட்டார், ஒரு நாள் ஹோட்டலில் தங்கவிருப்பதாகவும் தாங்கள் நண்பரின் வீட்டிற்குச் செல்லப் போவதாகவும் கூறினர்.

“சேதம் எதுவும் ஆகக்கூடாது,” என்ற பயத்தில் தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடியிருப்பாளர், கடவுச்சீட்டு, மற்றும் முக்கிய பொருள்கள் சிலவற்றை எடுத்துச் செல்லவிருப்பதாகக் கூறினார்.

“வீட்டைவிட்டு அனைவரும் வெளியேறியதும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த ஒரு ‘ஸ்டிக்கர்’ ஒட்டவேண்டும். ஏதும் வெடிக்காமலிருக்க வெளியேறுமுன் ஜன்னல்களைத் திறந்து வைக்கும்படியும் எச்சரித்தனர்,” என்றார் அவர்.

“நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் காலை 7 மணிக்கு அலுவலகத்திற்குப் புறப்படுவோம். பிள்ளையையும் வீட்டில் விட்டுவிடுவோம். வேலை முடிந்ததும் சூழலுக்கேற்ப வீடு திரும்புவோம்.” என்றார் அவினாஷ், 45.

சனிக்கிழமை ‘ஹேசல் பார்க்’ கூட்டுரிமை குடியிருப்பின் மேலாண்மைக் குழு, வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்புக் கூட்டம் பற்றிக் கூறினர்.

சிறப்புக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்ட ‘க்யூஆர்’ குறியீடுவழி காவல்துறை உருவாக்கிய ‘வாட்ஸ்அப்’ குழுவில் குடியிருப்பாளர்கள் சேர்ந்தனர். அனைத்தும் சீராக முடிவடைந்ததும் குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

இதற்கு முன்பும் இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டுகள் சிங்கப்பூரில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. 2016ல் மண்டாய் கட்டுமானத் தளம் ஒன்றில் 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அப்போது பொதுமக்களில் யாரும் வெளியேற்றப்படவில்லை.

2019ஆம் ஆண்டு ‘ஸூக்’ இரவு விடுதிக்கு அருகே 50 கிலோ எடையுள்ள வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அப்போது சுமார் 600 வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டனர்.

2020ல் பீஷானில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டபோது 12 வீடுகள் பாதிக்கப்பட்டன.

கேலாங்கில் கோயில் கட்டுமானத் தளத்தில் 2021ஆம் ஆண்டு இத்தகைய வெடிகுண்டுச் செயலிழப்பு நடவடிக்கை தொடர்பில் 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.

கூடுதல் செய்தி: ரவி சிங்காரம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!