சிங்கப்பூர் தமிழர்களின் நாடித்துடிப்பு தமிழ்முரசு: அமைச்சர் கா சண்முகம்

தமிழ் முரசின் முதல் திறன்பேசி செயலி அதிகாரபூர்வமாக வெளியீடு கண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29 அக்டோபர்) காலை நடந்த நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தமிழ் முரசு செயலியை அறிமுகப்படுத்தினார். தமிழ் முரசை சிங்கப்பூர்த் தமிழர்களின் நாடித்துடிப்பாகவும், இதய ஒலியாகவும், இன்றியமையா அடையாளச்சின்னமாகவும் குறிப்பிட்டு பேசினார் அமைச்சர்.

தமிழ்ச் சமூகத்துக்கு தமிழ் முரசு நாளிதழ் 88 ஆண்டுகளாக ஆற்றி வரும் சீரிய பங்கினை அமைச்சர் பாராட்டினார். குறிப்பாக, கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட இந்திய மக்களுக்குத் துல்லியமான, நம்பகத்தன்மைவாய்ந்த செய்திகளைக் கொண்டு சேர்த்த ஊடகமாக தமிழ் முரசின் அரும்பணியை பாராட்டினார் அமைச்சர்.

“இன்றுவரை சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்து, நவீனகாலத்துக்கு ஏற்ப தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளது தமிழ் முரசு. சமூக அக்கறை, ஒருங்கிணைப்புக்கான முக்கிய தளமாகவும் அது தொடர்ந்து விளங்குகிறது,” என்று கூறினார் அமைச்சர்.

பல்லின சமுதாயத்தினரிடையே சிங்கப்பூர்த் தமிழச் சமூகம் தனித்துவமான அடையாளத்துடன் திகழ வகைசெய்துள்ள தமிழ் முரசு தொடர்ந்து மீள்திறனுடன் செயல்பட்டு தம்மை மாற்றிக்கொள்ளும் என்றும் கலாசாரக் கூறுகளையும் தமிழர் இலட்சியங்களையும் பறைசாற்றும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இனி, கைவிரல் சொடுக்கில் உடனுக்குடன் செய்திகளை தமிழ் முரசு வாசகர்கள் வாசித்து மகிழலாம். உள்ளூர், உலக நடப்புகள், தமிழ், தமிழர்சார் தகவல்கள், வாழ்வியல் என பல்வேறு விவகாரங்களை ஒன்றிணைத்து மக்களுக்குப் படைக்கிறது தமிழ் முரசு செயலி. அதோடு, தமிழர் பாட்டி வைத்தியம், ராசிபலன், நாணய செலாவணி முதலிய ஏனைய தகவல்களையும் ஒரே தளத்தில் இணைக்கிறது இச்செயலி.

தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ் முரசு நாளிதழின் அடுத்த அத்தியாயம், அதே லிட்டில் இந்தியா பகுதியில் வெளியீடு காண்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார், நிகழ்வில் பேசிய தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மது. நாட்டின் நலனை மனதில் கொண்டு சமூக அக்கறையுடன் செய்திகளை வழங்கும் தமிழ் முரசின் வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், வாசகர்களின் உருமாறும் தேவைகள், விருப்பங்களுக்கேற்ப தமிழ் முரசு தம்மை மறுவடிவமைத்துக்கொள்ளும் என்றார்.

“இளையர்கள் பலரின் கருத்துகளைக் கேட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல அம்சங்களை இந்தச் செயலியில் இணைத்துள்ளோம். இது வெறும் தொடக்கம் மட்டுமே. வரும் மாதங்களில் இன்னும் பல சுவாரசிய அம்சங்களை இணைக்க முனைகிறோம்,” என்று கூறினார் தமிழ் முரசின் மின்னிலக்க ஆசிரியர் எஸ். வெங்கடேஷ்வரன்.

நிகழ்வில் பங்கேற்ற தமிழ் முரசு வாசகர்கள், செயலியின் பல்வேறு அங்கங்களையும் வசதிகளையும் வரவேற்றனர். செய்திகளை வாசிப்பதோடு, காதுபடக் கேட்டு, காணொளி மூலம் தெரிந்து, வலையொளிமூலம் அவற்றை வாசகர்கள் பரிசீலனை செய்யலாம் என்னும் செயலியின் பல்லூடகத் தன்மை மென்பொருள் பொறியாளர் திருமதி கீர்த்தனாவைக் கவர்ந்தது.

“பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் செய்திகள் வாசிப்பதும், உலக நடப்புகளுக்கு ஈடுகொடுத்து இருப்பதும் கடினமாக உள்ளது. பிள்ளைகளுக்கும் ஏற்ற வகையில், படிப்பதற்கு சுலபமாக, ஆர்வமூட்டுவதாக செயலி அமைந்துள்ளது,” என்றார் அவர்.

இளையரைக் கவரும் கூறுகளுடனும் இச்செயலி அமைந்துள்ளது. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர் கீர்த்தனா பார்த்திபன், செயலியின் ஒருங்கிணைப்பைப் பாராட்டினார். செய்திகளை மின்னிலக்க முறையில் மட்டுமே வாசிக்கும் அவர், தமிழில் செய்தி வாசிப்பது எளிமையாகி உள்ளதைப் பாராட்டினார். வாழ்வியல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும் செயலி கைகொடுப்பதால் இச்செயலியை நண்பர்களுடன் இணைந்து பயன்படுத்த இருப்பதாகக் கூறினார் கீர்த்தனா.

தமிழ் முரசின் ஆசிரியர் திரு ராஜேந்திரன் ஜவஹரிலால், இப்புது முயற்சி மக்களைச் சமூகத்துடன் கூடுதலாக இணைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி டியோ லே லிம், தமிழ் முரசின் இப்புது அத்தியாயம் செய்தி வழங்குதலைத் தாண்டி சமூகப் பிணைப்பில் பங்கு வகிப்பதாகக் கூறி, செயலியின் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அவருடன், எஸ்பிஎச் மீடியாவின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் தலைமை ஆசிரியர் திரு வோங் வெய் கோங், தமிழ் முரசு ஆசிரியர் திரு ராஜேந்திரன் ஜவஹரிலால், தலைமை உதவி ஆசிரியர் திரு அண்.சிவ. குணாளன் ஆகியோரும் இணைந்து செயலியை வெளியிட்டனர்.

கூகல் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் மூலம் தமிழ் முரசு செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த கியூஆர் குறியீட்டை வருடியும் பதிவிறக்கம் செய்யலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!