ஆண்டின் 363 நாள்கள் பணியாற்றும் செய்தித்தாள் விநியோகிப்பாளர்

குமார் என்று அழைக்கப்படும் திரு ரத்னகுமார் சொக்கலிங்கத்திற்கு 64 வயதாகிறது. தனது தந்தையைப் பின்பற்றி கடந்த 42 ஆண்டுகளாக செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார் இவர்.

ஒரு நாளின் வானிலை எப்படி இருந்தபோதும் வாசகர்களின் வீட்டு வாசலில் செய்தித்தாள் கிடைப்பதற்கு இவரைப் போன்ற விநியோகிப்பாளர்களே காரணம்.

பீச் ரோடு வட்டாரப் பேருந்து நிறுத்தத்தில் ஏறக்குறைய அதிகாலை 3 மணிக்கே இவரது அன்றாடப் பணி தொடங்குகிறது.

லாரி ஒன்றிலிருந்து செய்தித்தாள் கட்டுகள் பிரிக்கப்படும்.

த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், லியன்ஹ சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு, த பிசினஸ் டைம்ஸ் என எஸ்பிஎச் நிறுவனம் வெளியிடும் ஐந்து வகையான செய்தித்தாள்கள் அந்தக் கட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.

1990களில் செய்தித்தாள்கள் மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டம். அப்போது பகுதிநேர ஊழியர்கள் நால்வருடன் சேர்ந்து பீச் ரோடு வட்டாரத்தில் தினசரி கிட்டத்தட்ட 1,800 பிரதிகளை விநியோகித்ததை நினைவுகூர்கிறார் திரு குமார்.

இப்போது செய்தித்தாள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் வெகுவாக உயர்ந்ததை அடுத்து வேனிலிருந்து மோட்டார் சைக்கிளுக்கு மாறிக்கொண்டதாகக் கூறினார் திரு குமார். 34 வயதாகும் இவரது மகன் எப்போதாவது மட்டுமே இவருக்குக் கைகொடுக்கிறார். ஆனால் இப்போதும் அன்றாடம் 450 பிரதிகளை விநியோகம் செய்கிறார் திரு குமார்.

அதிகாலை 3.20 மணியளவில் செய்தித்தாள்களைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, முதலில் ஓர் அலுவலகக் கட்டடம், பின்னர் 7-லெவன் கடைகள் இரண்டு, ஃபேர்மோண்ட் ஹோட்டல், ராஃபிள்ஸ் ஹோட்டல், எஸ்பிளனேட் ரயில் நிலையம் எனத் தொடர்கிறது இவரது அன்றாட விநியோகப் பணி.

பின்னர் மீண்டும் பீச் ரோடு வட்டாரப் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு இரண்டாம் சுற்று விநியோகப் பணியைத் தொடர்வார்.

“செய்தித்தாள் விநியோகிப்பாளர் பணி என்பது அவற்றை விநியோகிப்பது மட்டுமன்று. வாடிக்கையாளர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வதும் அதில் அடங்கும்,” என்கிறார் திரு குமார். அத்தகைய பிணைப்பை விரும்பும் இவர், வியாபாரத்திற்கு அது முக்கியம் என்றும் கருதுகிறார்.

ஹோட்டல் நிர்வாகம் ஒன்றுடன் நல்லுறவு ஏற்பட்டதன் காரணமாக, இரண்டாம் சுற்று விநியோகத்திற்குச் செய்தித்தாள்களை எடுக்கச் செல்லும்போது தனது உடைமைகளை அந்த ஹோட்டலில் விட்டுச்செல்வதாக இவர் கூறினார்.

7-லெவன் போன்ற கடைகளிலிருந்து முந்தைய நாளின் விற்பனையாகாத பிரதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதும் இவரது பணியாகும். அத்தகைய பிரதிகளை அலுவலகக் கட்டடம் ஒன்றின் மாடிப்படிகளுக்கு அருகே வைத்துக்கொள்ள இவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர். வார இறுதியில் அவற்றை மறுசுழற்சி செய்து ரொக்கமாக மாற்றிக்கொள்வதாகக் கூறினார் திரு குமார்.

இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்கு, இதில் விரைவாகப் பணம் ஈட்டமுடியும் என்பதே காரணம் என்கிறார் இவர்.

“மற்ற வேலைகளில் மாத இறுதிவரை காத்திருக்கவேண்டும். அப்போதுதான் காசோலை கிடைக்கும். ஆனால் என்னைப் போன்ற செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள், வார அடிப்படையில் விநியோகக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்வோம்,” என்று திரு குமார் கூறினார்.

செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தற்போது சராசரியாக மாதம் $200 முதல் $700 வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

1971ஆம் ஆண்டு 12 வயதுச் சிறுவனாக இருந்த குமார், செய்தித்தாள் விநியோகிப்பாளரான தந்தைக்கு உதவி செய்யத் தொடங்கினார். பீப்பிள்’ஸ் பார்க் வட்டாரத்தில் நடந்து சென்று செய்தித்தாள் விநியோகித்தால் இனிப்புகளும் பானங்களும் அவருக்குக் கிடைக்கும்.

பின்னர் வயது ஏற ஏற, பள்ளி செல்லுமுன் அடிக்கடி அப்பாவிற்கு உதவுவார். தனது சைக்கிளில் சென்று செய்தித்தாள்களை விநியோகிப்பார்.

1981ல் தேசிய சேவையை நிறைவுசெய்த பிறகு உறவினருடன் இணைந்து பீச் ரோடு வட்டாரத்தில் செய்தித்தாள்களை விநியோகித்தார். அந்த உறவினர் ஓய்வுபெற்ற பின்னர் அதே வட்டாரத்தில் தனது பணியைத் தொடர்ந்தார் திரு குமார்.

முதியவர்கள் இன்னும் அச்சிட்ட வடிவிலேயே செய்திகளை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் விநியோகக் கட்டண உயர்வு குறித்து அவர்கள் கவலை தெரிவிப்பதாகவும் திரு குமார் குறிப்பிட்டார்.

அத்தகைய முதியவர்களுக்கு வெளியுலகை இணைக்கும் பாலமாகத் தாம் உணர்வதாகக் கூறுகிறார் இவர்.

“கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் அவர்களில் பலர் வீட்டிலேயே அடைந்து கிடக்க நேரிட்டது. செய்திகளை அறிந்துகொள்ள அவர்கள் என்னை நம்பியிருந்தனர்,” என்றார் திரு குமார்.

கிட்டத்தட்ட காலை 6.45 மணியளவில் இவரது விநியோகப் பணி நிறைவுபெறுகிறது.

தொலைவை அளக்க உதவும் செயலியை மேற்கோள்காட்டி, திரு குமார் அன்றாடம் செய்தித்தாள் விநியோகிப்பதற்காக ஏறக்குறைய 22 கிலோமீட்டர் பயணம் செய்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

“இது எளிதான பணியன்று, மிகவும் களைப்படையச் செய்யும்,” என்று கூறினாலும் உடனே இதை நான் மிக விரும்பிச் செய்கிறேன் என்கிறார் திரு குமார்.

“எங்கள் இரண்டாவது மகன் பிறந்தபோது, என் மனைவிக்குப் பிரசவ வலி எடுத்த நிலையில்கூட அவருக்கு வாடகை கார் ஏற்பாடு செய்துவிட்டு நான் செய்தித்தாள் விநியோகித்தேன்,” என்று புன்னகையுடன் கூறினார் திரு குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!