பலதரப்பட்ட வேலை அனுபவங்களுடன் களமிறங்க தயாராகும் இளம் தலைமையாசிரியர்

52 பள்ளிகளுக்குப் புதிய தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தலைமையாசிரியர்களின் பட்டியலைக் கல்வி அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்டது.

புதிய தலைமையாசிரியர்களில் 36 வயது திருவாட்டி ஹேனா சியாவும் ஒருவர். இவர் 2020ஆம் ஆண்டில் நடுப்பகுதியிலிருந்து மெத்தடிஸ்ட் பெண்கள் தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமையாசிரியராகப் பதவி வகித்து வந்தார்.

அடுத்த ஆண்டு இவர் டங்ளின் ஹால்ட்டில் உள்ள நியூ டவுன் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவி ஏற்பார்.

இவ்வாண்டு அறிவிக்கப்பட்டுள்ள புதிய தலைமையாசிரியர்களில் இவர்தான் ஆக இளையவர்.

அதுமட்டுமல்லாது, முதல்முறையாக தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ள 15 பேரில் இவரும் ஒருவர்.

திருவாட்டி சியா, பல்வேறு பணிகளைப் புரிந்தவர். அவை பெரும்பாலும் கல்வித் துறையுடன் தொடர்புடையவை. கல்வி தொடர்பான கொள்கைகளில் அவருக்கு வேலை அனுபவம் உள்ளது. அதுமட்டுமல்லாது பள்ளிகளுடன் இணைந்தும் அவர் செயல்பட்டுள்ளார்.

அரசாங்க ஆய்வுக்கூடமான உத்திபூர்வ எதிர்காலத்துக்கான மையத்தின் உதவி இயக்குநராகவும் அவர் 2017ஆம் ஆண்டில் பணிபுரிந்தார்.

தாம் மாணவியாக இருந்தபோது தமது ஆசிரியர்களின் செயல்பாட்டைப் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு பட்டப் படிப்புக்குப் பிறகு ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.

2010ஆம் ஆண்டு காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளியில் மானுடவியல் பாட ஆசிரியராக அவர் தமது கற்பித்தல் பயணத்தைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் பள்ளிகள் பிரிவுக்கு அவர் இடமாறினார். அங்கு அவர் சிறப்புத் திட்ட அதிகாரியாகக் குழுமியக் கண்காணிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினார்.

அதன் பிறகு, ஹொங் கா உயர்நிலைப்பள்ளியின் மானுடவியல் பாடத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

உத்திபூர்வ எதிர்காலத்துக்கான மையத்தில் பணிபுரிந்த பிறகு கல்விக் கொள்கைகள் தொடர்பில் பங்களிக்க 2019ஆம் ஆண்டில் திருவாட்டி சியா கல்வி அமைச்சின் தலைமையகத்துக்குத் திரும்பினார்.

“பல வேலைச் சூழல்களில் பணியாற்றி உள்ளேன். வெவ்வேறு அலுவலகங்கள், அமைப்புகள் ஆகியவை எவ்வாறு இயங்குகின்றன என்பது எனக்குத் தெரியும். பலதரப்பட்ட மக்களை புரிந்துகொள்ள எனக்கு இது உதவியுள்ளது,” என்று திருவாட்டி சியா கூறினார்.

முதல்முறை தலைமையாசிரியர் என்கிற முறையில், அனுபவமிக்க ஆசிரியர்களின் நுண்ணறிவுக்கு மதிப்பளிப்பதாக அவர் கூறினார். அவர்களில் பலர் தம்மைவிட பல ஆண்டுகள் அதிகம் ஆசிரியர் பணியில் இருப்பதை அவர் சுட்டினார்.

ஆர்த்தமுள்ள பணிகளில் ஈடுபட தமது பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரை ஊக்குவிட்ட இலக்கு கொண்டிருப்பதாக திருவாட்டி சியா தெரிவித்தார்.

கருத்துகளைப் பகிர்ந்து, பரிமாற்றம் செய்து ஆசிரியர்களும் மாணவர்களும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் பள்ளிக் கலாசாரத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

45 வயது திருவாட்டி ரெசியா ரஹமத்துல்லாவும் தலைமையாசிரியராக முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள டெக் கீ தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக அடுத்த ஆண்டு பதவி ஏற்பார்.

2002ஆம் ஆண்டில் டா சியாவ் தொடக்கப்பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராக திருவாட்டி ரெசியா ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.

2019ஆம் ஆண்டில் டா சியாவ் தொடக்கப்பள்ளி, ஜிங் ஷான் தொடக்கப்பள்ளியுடன் இணைந்தபோது அப்பள்ளியின் துணைத் தலைமையாசிரியராக அவர் பதவி உயர்வு பெற்றார்.

இரு பள்ளிகள் ஒன்றிணைந்தபோது மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் முக்கியம் என்பதையும் ஊழியர்கள் அனைவரின் கருத்துகளைச் செவிசாய்ப்பது அவசியம் என்பதையும் தாம் உணர்ந்ததாக திருவாட்டி ரெசியா கூறினார்.

தலைமையாசிரியர் நியமன விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்வாண்டு அந்த விழா டிசம்பர் 28ஆம் தேதியன்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

ஓய்வுபெறும் தலைமையாசிரியர்கள், தலைமையாசிரியர்களாகப் பதவி வகித்து கல்வி அமைச்சின் தலைமையகத்தில் மூத்த கல்வி அதிகாரிகளாகப் பணிபுரிந்து ஓய்வுபெறுபவர்கள் என மொத்தம் 17 பேரின் பங்களிப்புகளுக்குக் கல்வி அமைச்சு விழாவின்போது புகழாரம் சூட்டியது.

விழாவில் பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், பள்ளிகளும் கல்வியாளர்களும் மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களின் ஆகியோரின் செயல்பாட்டை மேலும் சிறப்பானதாக்கவும் கல்வித் துறை இயங்கும் முறையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை அடையாளம் கண்டு தீர்வு காண தலைமையாசிரியர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் நினைவூட்டினார்.

உயர் மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்லாது, மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைத்துத் தர தலைமையாசிரியர்கள் உதவ வேண்டும் என்றார் அவர்.

தற்போதை கல்வி அணுகுமுறையில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டு வரும்போதும் மிக விரைவாக மாறிவரும் உலகச் சூழல் தவிர்க்க முடியாத ஒன்று என்றார் திரு சான்.

பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் பணி தலைமையாசிரியர்களுக்கு உள்ளது என்றார் அவர். பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வெவ்வேறு லட்சியங்களும் தேவைகளும் இருக்கும் என்று அமைச்சர் சான் கூறினார்.

அதே சமயம் இக்கால மாணவர்களுக்குப் பல்வேறு வழிகளிலிருந்து பல தகவல்கள் எளிதாக கிடைக்கின்றன. இத்தகைய மாணவர்களையும் ஒன்றிணைத்து அவர்களுடன் செயல்படும் கடமை தலைமையாசிரியர்களுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!