மரினா பே புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலைக் கையாளும் விளக்குகள்

மரினா பே வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) நடைபெற உள்ள புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு காவல்துறை சிறப்பு விளக்குகளைத் தரைப் பகுதியில் பொருத்தவிருக்கிறது.

வழக்கம்போல வண்ண விளக்குகளும் வாணவேடிக்கைகளும் புத்தாண்டு நிகழ்ச்சியின் முக்கிய அங்கங்களாக விளங்கும். இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் காவல்துறை முதல்முறையாக இத்தகைய விளக்குகளைப் பயன்படுத்தவுள்ளது.

கூட்ட நெரிசலை மேம்பட்ட முறையில் கையாள, காவல்துறை மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக இவ்விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தக்கூடிய அந்த எல்இடி விளக்குகள், போர் நினைவிடப் பூங்காவின் தரைப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். கூட்டத்தில் சரியான திசையைக் கண்டுபிடித்துச் செல்ல அங்கு கூடுவோர்க்கு அவ்விளக்குகள் உதவும்.

இதற்கு முன்னர் தேசிய தின அணிவகுப்பு 2023ல் இந்த விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.

நகர்த்தக்கூடிய இவ்விளக்குகளைத் தவறுதலாக யாரேனும் மிதித்துவிட்டாலும் கவலையில்லை. மீண்டும் சரியான இடத்திற்கு இவற்றை நகர்த்தி, தொடர்ந்து பயன்படுத்தலாம். ஒரு வாகனம் மேலேறிச் சென்றாலும் இவை உடையமாட்டா.

மரினா பே வட்டாரத்துக்கு அருகிலுள்ள எம்ஆர்டி நிலையங்கள் பற்றிய குறிப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுமக்கள் அருகிலுள்ள எம்ஆர்டி நிலையங்களைக் கண்டுபிடித்துச் செல்ல உதவும் குறிப்புகள், போக்குவரத்து மாற்றங்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றுடன் மரினா பே வட்டாரத்தில் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டிருக்கும்.

அவை ஒருவேளை இருண்ட பகுதியில் இருந்தால் அப்பலகைகள் மீது காவல்துறையின் எல்இடி விளக்குகள் ஒளி பாய்ச்சும்.

சென்ற ஆண்டு, மரினா பே வட்டாரத்தில் நடைபெற்ற புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏறத்தாழ 500,000 பேர் கலந்துகொண்டனர். இவ்வாண்டு கூட்ட நெரிசலைக் கையாள காவல்துறை அதிகாரிகள் ஏறக்குறைய 600 பேர் பணியில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியின்போது மரினா பே பகுதியில் காவல்துறை அதிகாரிகள் ஏறத்தாழ 600 பேர் பணியில் ஈடுபட்டிருப்பர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை அதிகாரிகள், 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட, உடலில் அணியக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை அணிந்திருப்பர். அந்த கேமராக்களின் நேரலை ஒளிபரப்புத் திறனை அதிகாரிகள் முதல்முறையாகச் சோதிக்கவிருக்கின்றனர்.

மரினா பே வட்டாரத்திற்கு புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் செல்ல விரும்பும் பொதுமக்கள், கூட்ட நெரிசல் குறித்த தகவல்களை ‘கிரௌட்@மரினாபே’ எனும் வரைபடத்தின் மூலம் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ள பகுதிகள், வாணவேடிக்கைகளைக் கண்டுகளிப்பதற்கு ஏற்ற இடங்கள் குறித்த விவரங்களையும் அதன் மூலம் அறிந்துகொள்ள இயலும்.

வரைபடத்தை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணியிலிருந்து https://go.gov.sg/crowd-at-marine-bay என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

கியூஆர் குறியீட்டை வருடி, கூட்ட நெரிசல் குறித்த தகவல்களுக்கான வரைபடத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அல்லது, மரினா பே வட்டாரத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடி அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு, கூட்ட நெரிசலைக் கையாள, காவல்துறை ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தியது. விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் பொருத்தப்பட்ட அத்தகைய ஆளில்லா வானூர்திகள் இவ்வாண்டும் பயன்படுத்தப்படும்.

காஸாவில் போர் நடக்கும் வேளையில் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

எனவே, புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படிக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.

சந்தேகத்துக்குரிய பொருள்கள் அல்லது நபர்கள் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் 1800-2626-473 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அல்லது 999 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!