2024ல் வளர்ச்சி: வல்லுநர்கள் நம்பிக்கை

சிங்கப்பூர் பொருளியல் 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட வேக வளர்ச்சி கண்டுள்ளதுடன் உற்பத்தித் துறையும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

இதையடுத்து, பொருளியல் வல்லுநர்கள் 2024ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சியை அதிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் பொருளியல், ஆண்டுக்கு 2.8 விழுக்காடு விரிவடைந்தது. முந்தைய காலாண்டின் 1 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, இது புளூம்பெர்க் வாக்கெடுப்பில் பொருளியல் ஆய்வாளர்கள் முன்னுரைத்த 1.8 விழுக்காட்டு வளர்ச்சியைவிட மிக அதிகம்.

வர்த்தக, தொழில் அமைச்சு ஜனவரி 2ஆம் தேதி வெளியிட்ட முன்னுரைப்பின்படி, 2023 முழுவதும், பொருளியல்1.2 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது 2022ன் 3.6 விழுக்காட்டு வளர்ச்சியிலிருந்து சற்று மிதமான வளர்ச்சியாக அமைந்தது.

டிசம்பர் 13 அன்று சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட நிபுணத்துவ முன்னுரைப்பின் காலாண்டு ஆய்வில் முன்னுரைக்கப்பட்ட 1 விழுக்காட்டு விரிவாக்கத்தைவிட 2023ன் வளர்ச்சி அதிகமாக இருந்தது.

பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட காலாண்டு அடிப்படையில், நான்காம் காலாண்டில் பொருளியல் 1.7 விழுக்காடு விரிவடைந்து, மூன்றாம் காலாண்டில் 1.3 விழுக்காடு விரிவாக்கம் கண்டது.

அரசாங்கத்தின் வளர்ச்சி முன்னுரைப்பு நவம்பர் மாதத்தில் இருந்து மாறாமல் உள்ளது. பிரதமர் லீ சியன் லூங் டிசம்பர் 31 அன்று தனது வருடாந்திரப் புத்தாண்டுச் செய்தியில், 2024ல் பொருளியல் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

“எனினும் பெரும்பாலானது வெளிச் சூழலைச் சார்ந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவான உற்பத்தித் துறை மீட்சியால் உந்தப்பட்டு, சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சியடைந்துள்ளது என்று மேபேங்க்கின் பொருளியல் நிபுணர் சுவா ஹக் பின் கூறினார்.

வர்த்தக தொழில் அமைச்சின் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு முன்னுரைப்பில், 2024ன் வளர்ச்சி 2.2 விழுக்காடாக இருக்கும் என்று அவர் மதிப்பிடுகிறார்.

மின்னியல், துல்லியப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல், பொது உற்பத்தித் தொழில் துறைகளின் நம்பிக்கையான வளர்ச்சிப் பின்னணியில், 2024ன் வளர்ச்சி 3 விழுக்காடாக இருக்கும் என்று ஆர்எச்பி இடைக்கால குழுமத் தலைமைப் பொருளியல் நிபுணர் பர்னபாஸ் கான் குறிப்பிட்டார்.

2024ல் சீனா பொருளியல் மீட்சி காணும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த வட்டாரத்தில் சுற்றுலாத் தேவையும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

2022ன் முதல் மூன்று காலாண்டுகளில் சுருங்கியதுக்குப் பிறகு, 2023ன் நான்காவது காலாண்டில், உற்பத்தித் துறை ஆண்டு அடிப்படையில் 3.2 விழுக்காட்டு வளர்ச்சியை எட்டியது.

துல்லியப் பொறியியல் தொழில்துறையைத் தவிர்த்து, உற்பத்தித் துறையின் அனைத்துப் பிரிவுகளினதும் விரிவாக்கம் இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்தன.

பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட அடிப்படையில், உற்பத்தித் துறை நான்காம் காலாண்டில் 9 விழுக்காடு வளர்ச்சி கண்டது, இது மூன்றாம் காலாண்டின் 0.3% விரிவாக்கத்தின் தொடர் வளர்ச்சியாக அமைந்தது.

கட்டுமானத் துறை ஆண்டு அடிப்படையில் 9.1 விழுக்காடு விரிவடைந்தது. இது முந்தைய காலாண்டின் 6.2 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அதிகம்.

சேவைத் துறையின் அனைத்து பிரிவுகளும் நான்காம் காலாண்டில் விரிவாக்கத்தைப் பதிவு செய்தன.

மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம், போக்குவரத்து, சேமிப்புத் துறைகள் ஆண்டு அடிப்படையில் 1.5 விழுக்காடு வளர்ச்சி கண்டு முன்னைய காலாண்டின் 1.3 விழுக்காடு விரிவாக்கத்தைத் தொடர்ந்தது.

இந்த வளர்ச்சிக்கு மொத்த விற்பனை, சில்லறை வர்த்தக நடவடிக்கைகள், விமானப் போக்குவரத்துப் பிரிவு வழிவகுத்தது.

எனினும், இத்துறைகள் மொத்தமாக காலாண்டு பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட அடிப்படையில் நான்காம் காலாண்டில் 1.4 விழுக்காடு சுருங்கின, இது மூன்றாம் காலாண்டின் 0.6% வளர்ச்சியை விடக் குறைவு.

தகவல், தொடர்பு, நிதித் துறை, காப்புறுதி, நிபுணத்துவ சேவைத் துறைகள் மூன்றாம் காலாண்டின் 2.5 விழுக்காடு வளர்ச்சியின் விரிவாக்கமாக,நான்காம் காலாண்டில் ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டன.

தங்குமிடம், உணவு சேவைகள், சொத்துச் சந்தை, நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள் ஆகியவற்றுடன் பிற சேவைகள் துறை முந்தைய காலாண்டின் 3.9 விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவாக, ஆண்டு அடிப்படையில் 2 விழுக்காட்டு வளர்ச்சியை எட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!