கைக்குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு தொடர்பில் வழிகாட்டிக் குறிப்புகள்

கைக்குழந்தைகள், இளம் பிள்ளைகளுக்கான உணவு தொடர்பில் சிங்கப்பூர் அதன் முதல் வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, பிப்ரவரி 23ஆம் தேதி அவற்றை வெளியிட்டார்.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் சிங்கப்பூர் குழந்தை மருத்துவ, சிறார் ஆரோக்கியக் கல்லூரியும் இணைந்து அக்குறிப்புகளை உருவாக்கியுள்ளன.

குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஏற்படுத்த, பெற்றோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் இக்குறிப்புகள் உதவும் என்று கருதப்படுகிறது.

குழந்தை பிறந்தது முதல் அதற்கு இரண்டு வயது நிறைவடைவதற்குமுன் வரையிலான காலகட்டம், அதன் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை விதைப்பதற்கு பொன்னான வாய்ப்பாகும்.

பின்னாளில் பல்வேறு உணவுவகைகளை மறுக்கும் பழக்கம் குழந்தைகளிடையே தோன்றாமல் தடுக்க, காய்கறிகள் போன்ற ஆரோக்கிய உணவுகளை ஆறு மாதத்திலிருந்தே குழந்தையின் உணவில் அறிமுகப்படுத்தலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

பழச்சாறு, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை இரண்டு வயது நிறைவடையுமுன் குழந்தைகளுக்குத் தரக்கூடாது என்று வழிகாட்டிக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 1,000க்கு மேற்பட்ட பராமரிப்பாளர்களிடம் நடத்திய ஆய்வில், குழந்தைகளின் உணவுப் பழக்கமும் பராமரிப்பாளர்கள் அவர்களுக்கு உணவளிக்கும் நடைமுறையும் ஆரோக்கியமான நிலையில் இல்லை எனத் தெரியவந்ததாக கேகே மருத்துவமனை கூறியது.

பிள்ளைகளுக்குத் தரப்படும் உணவுவகைகள் விதவிதமாக இல்லாததால், சமச்சீரான சத்துகள் கிடைப்பதில்லை.

ஐந்து வயது நிறைவடையுமுன், ஐந்தில் ஒரு குழந்தைக்கு மூன்று அல்லது அதற்குக் குறைவான பிரிவுகளைச் சேர்ந்த உணவுகள் மட்டுமே தரப்படுகின்றன.

மேலும், கைக்குழந்தைகளில் 10 விழுக்காட்டினருக்கு சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் தரப்படுவதும் ஆய்வில் தெரியவந்தது.

மிகச் சிறிய வயதில் சர்க்கரை சேர்ந்த உணவுகளை உண்பதால் பின்னாளில் பருமனான உடல்வாகு கொண்டவர்களாக மாற வாய்ப்புகள் அதிகம் என்பதை வழிகாட்டிக் குறிப்புகளைத் தயாரித்த குழுவின் தலைவரான இணைப் பேராசிரியர் சுவா மெய் சியென் சுட்டினார்.

ஒரு வயதுக்கும் இரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளில் 10 விழுக்காட்டினருக்கு தாங்களாகவே உணவை உண்ணத் தெரியவில்லை என்று ஆய்வு கூறுகிறது. ஆறு மாதம் முதலே தனக்கான உணவைத் தானே எடுத்துண்ணப் பழக்கும்படி பெற்றோரும் பராமரிப்பாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

உணவுண்ணும்போது மின்னிலக்க சாதனங்களால் பிள்ளைகளின் கவனம் திசைதிரும்புவதாக ஆய்வில் கலந்துகொண்ட பராமரிப்பாளர்களில் 100 பேர் தெரிவித்தனர்.

உணவு நேரத்தில் திரைகளைப் பார்ப்பதால் மிகையாக உண்ணவும் ஆரோக்கியமற்ற உணவுவகைகளை அதிகம் உண்ணவும் வாய்ப்புண்டு. இது கவனக்குறைவு போன்ற குறைபாடுகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு பகல் நேரத்தில் உணவு ஊட்டும்படியும் இரவில் தவிர்க்கும்படியும் வழிகாட்டிக் குறிப்பு பரிந்துரைக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!