மணிலா: தைவானின் அருகில் தம்நாடு அமைந்துள்ளதால், தைவான் தாக்கப்பட்டால், வேறு வழியின்றி பிலிப்பீன்ஸ் தலையிட நேரிடும் என்று அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் ஜப்பானியச் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (மே 18) தெரிவித்தார்.
“எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் நாட்டுக்கு மிக அருகில் உள்ள தைவானில் ஏறத்தாழ 200,000 பிலிப்பீன்ஸ் குடிமக்கள் அங்கு பணியாற்றியபடி வாழ்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
அவரது கருத்துகள் சீனாவை நிச்சயம் சீற்றமடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காப்பு ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரம் ஜப்பான் செல்வதற்கு முன்பாக அதிபர் மார்கோஸ் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
போரில் ஈடுபட பிலிப்பீன்சுக்கு விருப்பமில்லை என்றாலும் புவியியல் நிலைப்படி தைவானுக்கு மிக அருகில் தம் நாடு அமைந்திருப்பது வேறு வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் அவர் விளக்கினார்.
வட பிலிப்பீன்ஸ் பகுதியும் தைவானும்
நில வரைபடத்தின்படி, வட பிலிப்பீன்ஸ் பகுதி தைவானுக்கு அருகில் உள்ளது. எந்த ராணுவப் பூசல் ஏற்பட்டாலும் அப்பகுதி அதில் சம்பந்தப்பட அல்லது அதன் தாக்கத்தை உணரும் வாய்ப்புள்ளது என்று அதிபர் மார்கோஸ் தெரிவித்தார்.
தைவான் போரில் தம் நாடும் இழுத்துவிடப்படும் என்ற இதேபோன்ற கருத்துகளை அவர் 2025ஆம் ஆண்டிலும் வெளியிட்டு, பெய்ஜிங்கின் கோபத்துக்கு ஆளானார்.

