பைடன்: ஆக்கிரமிப்பு பெருந்தவறு; இஸ்‌ரேல்: படைத்தளம் முக்கியம்

காஸா/ஜெருசலம்: போருக்குப் பிறகு ஹமாஸ் போராளிக் குழு மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்க ‘மிகவும் வலுவான படை’யை காஸாவில் நிலைநிறுத்த வேண்டியிருக்கும் என்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறியுள்ளார்.

அதேவேளையில், காஸைவை ஆக்கிரமிப்பது “பெரும் தவறு” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

“இஸ்‌ரேல் படைகளை மீட்டுக்கொண்ட பிறகு, பொறுப்பேற்பது யார்? வெற்றிடத்தை விட்டு செல்ல முடியாது,” என்று திரு ஹெர்ஸோக் வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றில் கூறினார்.

“காஸாவை மீண்டும் பயங்கரவாதத்தின் தளமாக மாற்ற எவரும் விரும்ப மாட்டார்கள்”, என்று அவர் குறிப்பிட்டார்.

போருக்குப் பின்னர் காஸாவின் நிர்வாகம் குறித்து இஸ்ரேல் அரசாங்கம் பல யோசனைகளை விவாதித்து வருவதாக திரு ஹெர்சாக் குறிப்பிட்டார்.

போருக்குப் பிந்திய நிர்மாண செயல்பாடுகளில் அமெரிக்காவும் அண்டை நாடுகளும் பங்களிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலுக்குத் தீர்வு காண இரு நாட்டுத் தீர்வு ஒன்றே பதில் என்றும், காஸாவை ஆக்கிரமிப்பது தவறாகும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை கூறினார்.

காஸாவில் ஹமாஸ் போராளிக் குழுவினர் பிணை பிடித்து வைத்திருப்போரை விடுவிக்க தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்வதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதற்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதாக அர்த்தமில்லை என்பதையும் அவர் சுட்டினார்.

மோதல் மேலும் பரவுவதையும் ஹமாஸின் நீண்ட கால ஆதரவாளரான ஈரான் இச்சண்டையில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் வாஷிங்டன் மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது, இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்கள், துணைக் கப்பல்களை அப்பகுதிக்கு அது அனுப்பியுள்ளது.

காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸுக்குச் சொந்தமான ஒரு தளபத்தியம், ஆயுதங்கள், போர் உபகரணங்களை அதன் படைகள் கண்டுபிடித்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

ஹமாஸ் போராளிகளின் நடவடிக்கைகளின் தலைமையிடமாக மருத்துவமனைக்குக் கீழே உள்ள சுரங்கப்பகுதி உள்ளது என்று இஸ்‌ரேல் குறிப்பிட்டது. இஸ்ரேலியப் படைகளின் முக்கிய இலக்காக இந்த மருத்துவமனை மாறியது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஹமாஸ், இஸ்ரேலிய அறிக்கைகளை ‘பொய்கள், மலிவான கொள்கைப் பிரசாரம்’ என்று புதன்கிழமை நிராகரித்தது.

மருத்துவமனையைச் சுற்றி பல நாட்கள் நடந்த மோதல்களைத் தொடர்ந்து புதனன்று அதிகாலையில் இஸ்ரேலிய ராணுவம் புகுந்தது. படைகள் இன்னும் சோதனைகளை மேற்கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் டேனியல் ஹக்காரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மருத்துவமனையின் மருந்து வைக்கும் அலுமாரியில் ஒரு பையில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதை இஸ்‌ரேலிய ராணுவ வீரர் காட்டுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

மருத்துவமனை ரகசியப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட, தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டு, வெடிமருந்துகள், கவச உடைகள் உள்ளிட்ட பல பொருள்களைக் காட்டும் காணொளியை ராணுவம் வெளியிட்டது.

ஹமாஸ் தலைமையகத்திற்கு மேலே இந்த மருத்துவமனை அமைந்துள்ளது என்று இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்கா உளவுத்துறை அதனை உறுதிப்படுத்தியது.

தனது படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்ததைப் பாராட்டிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு “காஸாவில் நாம் எட்ட முடியாத இடம் இல்லை. மறைவிடம் இல்லை,” என்று கூறினார்.

“ஹமாஸ் அமைப்பை அடியோடு துடைத்தொழிப்போம். பிணையாளிகளை மீட்டோம். இவை இரண்டு புனிதமான பணிகள்,” என்றார் அவர்.

இதுவரை ஏறக்குறைய 11,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும், மேலும் பலர் இடிபாடுகளின் கீழ் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை நம்பகமானதாகக் கருதும் காசா சுகாதார அதிகாரிகள் கூறினார்.

மருத்துவமனைக்குள் நுழைந்த பிறகு சண்டை எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள், நோயாளிகள் அல்லது ஊழியர்களுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இஸ்‌ரேலியப் படைகள் கூறின.

அடிப்படை மருத்துவக் கருவிகளை இயக்குவதற்கு மின்சாரமின்றி உள்ளே சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகள், அங்கு தஞ்சம் புகுந்துள்ள ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் குறித்தும் அனைத்துலகம் கவலை கொண்டுள்ளது.

இஸ்ரேல் மருத்துவமனையைச் சுற்றி வளைத்தபோது புதிதாகப் பிறந்த மூன்று குழந்தைகள் உட்பட பல நோயாளிகள் அண்மைய நாட்களில் உயிரிழந்ததாக காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.

“மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பு இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதலை எதிர்கொண்டன. அந்தச் சண்டையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

“ஐடிஎஃப் பீரங்கிகள் கொண்டு வந்த இன்குபேட்டர்கள், குழந்தை உணவு, மருத்துவப் பொருட்கள் ஆகியவை வெற்றிகரமாக ஷிஃபா மருத்துவமனையைச் சென்றடைந்துள்ளன. தேவையுள்ளோருக்கு இப்பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்ய, இஸ்திரேலிய மருத்துவக் குழுக்களும் அரேபிய மொழி பேசும் வீரர்களும் களத்தில் உள்ளனர்,” என்று அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!