‘கல்வி ஒன்றே வறுமையைப் போக்கும் வழி’ ‌

குழந்தைப் பருவத்தில் எண்ணற்ற நிதி, மருத்துவ, கல்வித் தடைகள் இருந்தபோதும் தொடர்ந்து அவற்றை முறியடித்து இன்று சந்தைப்படுத்துதல் மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இளையர் ஷங்கர்.

“கல்வி ஒன்றுதான் வறுமையைப் போக்கும் வழி. படிக்கும் வயதில் எதற்காகவும் அதனை விட்டுக்கொடுக்காமல் படிக்க வேண்டும்,” என்கிறார் ‘ஜெம்ஸ் இன் த ரஃப்’ (Gems in the Rough) எனும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஷங்கர் பன்னீர்செல்வம், 26.

தந்தை கேஎஃப்சி நிறுவனத்தில் துப்புரவாளராகவும் தாய் தனியார் குடியிருப்புப் பகுதிகளில் துப்புரவாளராகவும் வேலை செய்ததால் இளவயதில் வறுமையை மட்டும் பார்த்து வளர்ந்தவர் இவர்.

பள்ளிப்பருவத்தில் சிண்டா அமைப்பு, சமூக மேம்பாட்டு மன்றம் (CDC), சமூக சேவை அலுவலகம் எனப் பல்வேறு இடங்களில் இருந்து உதவி கிட்டியபோதும், அந்தத் தொகை நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, வீட்டுக் கட்டணம் முதல் உணவு வரை அனைத்தையும் ஈடுகட்ட முடியாததாகவே இருந்தது.

“தாய், தந்தை நாங்கள் உறங்கியபின்னரே வேலை முடிந்து திரும்புவார்கள். காலையில் நாங்கள் எழுவதற்கு முன் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பெரும்பாலும் தனிமையில் இருந்ததால் தொடக்கப்பள்ளிக் காலத்தில் படிக்காமல் விளையாடச் சென்றிருக்கிறேன்,” என்று நினைவுகூரும் ஷங்கர், 12 வயதிலேயே வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.

இருப்பினும் காலப்போக்கில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர், நன்றாகப் படிக்கத் தொடங்கினார். உபகாரச் சம்பளங்களும் இவருக்குக் கைகொடுத்தன.

ஆனால் அந்த நேரத்தில் தாய் தந்தை இருவருக்கும் வேலை போனதால் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் ஷங்கர்.

அத்துடன் தந்தை திரு பன்னீர்செல்வம் திடீரெனக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதால், மனநலக் கழகத்தில் சேர்ந்து சிகிச்சை பெறவும் தொடங்கினார்.

61 வயதுடைய ஒருவர் 10 வயது சிறுவனின் மனவளர்ச்சியைக் கொண்டிருந்ததால் குடும்பத்தில் உள்ள அனைவரும் நொறுங்கிப்போனதாகக் கூறினார் ஷங்கர்.

தனது 16 வயதில் இரண்டு வேலைகளைப் பகலிலும் இரண்டு வேலைகளை இரவிலும் செய்துகொண்டே படிப்பைத் தொடர்ந்தார்.

“இரண்டு தேர்வுகள் மட்டுமே எழுதியதால் சாதாரண நிலைத் தேர்வில் 36 புள்ளிகள் பெற்று கடைசி நிலையில் வந்தேன்,” என்றார் அவர்.

இதனால் கவலையுற்ற ஷங்கர், கல்வியைத் தொடரவேண்டாம் எனக் கருதியதாகவும் தன் சகோதரர் கார்த்திகேயன் கொடுத்த ஊக்கத்தினால் மட்டுமே கல்விப் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் கூறினார்.

சிறந்த மதிப்பெண்கள் இல்லாததால் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் கணினித் துறையில் சேர்ந்து பயின்ற இவர், தனது முழுத் திறனையும் பயன்படுத்தித் தங்கப்பதக்கத்தோடு தேர்ச்சி பெற்றார்.

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற ஷங்கர், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து மின்னியல், மின்னணுவியல் துறையில் சேர்ந்து, அனைத்துப் பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார். முனைப்புடன் தன் தொழிலையும் தொடங்கினார்.

ஈராண்டு தேசிய சேவை முடித்த பின்னர் மீண்டும் தொழிலைக் கவனிக்கத் தொடங்கிய இவர், “ஓர் அமைதியான, நிறைவான குடும்பத்தை எனக்கு அமைத்துக்கொள்வதே என் கனவாக இருந்தது. எனவே இன்று ஏதோ ஒரு வகையில் வருமானத்தை ஏற்படுத்திக்கொண்டு மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்ற எண்ணம் தன்னைத் தொடர்ந்து துரத்தி வருவதாகக் கூறும் ஷங்கர், தனது ஐந்து மாத மகள் துகிரா பள்ளியில் சேர்ந்தவுடன் தானும் மனைவி சுலக்‌ஷா புகழேந்தியும் கல்வியைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி மற்றவர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருவதாகக் கூறிய ஷங்கர், “தொடர்ந்து அனைவருக்கும் என் கதை சொல்லப்படும்போது அது அவர்கள் கதையாகிறது. எனக்குப் புத்துணர்ச்சி தருவதோடு, அவர்களுக்கும் தூண்டுகோளாக அமையும் என நம்புகிறேன்,” என்றார் ஷங்கர்.

இவரது கதை, ‘ஜெம்ஸ் இன் த ரஃப்: சிங்கப்பூர் இளையர்களின் போராட்டங்கள், வெற்றிகள் அடங்கிய 20 கதைகள்’ (Gems in the Rough: 20 stories of struggle and triumph from Singaporean youths) எனும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள தெமாசெக் ஷாப்ஹவுசில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!