‘குறி வைச்சா இரை விழணும்’ வேட்டையனாக ரஜினிகாந்த்

செவ்வாய்க்கிழமையன்று ரஜினியின் 73வது பிறந்தநாள். அன்றைய தினம் அவர் நடிக்கும் படங்களின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் அவர் நடிக்கும் அவரது 170வது படத்திற்கு ‘வேட்டையன்’ என்ற பெயர் வைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக காணொளி ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அந்தக் காணொளியில் முதலில் கையில் லத்தியுடன் மிரட்டலாக நடந்து வரும் ரஜினி பின்னர் கையில் துப்பாக்கியுடன் வேட்டையனாக மாறி ‘குறி வச்சா இரை விழணும்’ என்ற வசனத்தைப் பேசுகிறார். அந்தக் காணொளி பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து த.செ.ஞானவேல் இயக்கி வரும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப் பச்சன்.

மேலும் இப்படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காணொளியுடன் லால் சலாம் படத்தின் காணொளியும் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் .

கிரிக்கெட்டை தழுவி உருவாகி உள்ள இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.

பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு தந்தைக்கு வாழ்த்து தெரிவிப்பதுபோல் ‘லால் சலாம்’ படத்தின் காணொளி வெளியிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதில் ரஜினி எதிரிகளை அடித்து பறக்க விடுவது, தொழுகை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ என்ற பாட்டும் ஒலிக்கிறது.

ஒரேநாளில் ரஜினியின் இரு படங்களில் முக்கிய காணொளிகள் வெளியானது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரஜினி பற்றிய சில சுவாரசியமான செய்திகள்:

ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ். முதன்முதலாக பத்திரிகையில் வேலை செய்த போது அவரின் ஒரு நாள் சம்பளம் 2 ரூபாய்.

அதன் பின்னர் அவர் 10A என்ற பேருந்தில் நடத்துநராக பணியாற்றினார்.

ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘நான் மகான் அல்ல’. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படம் கடந்த 1984ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்திற்கு முதலில் ‘நான் காந்தி அல்ல’ என்று பெயரிட்டு இருந்தார்களாம். ஆனால் தணிக்கைக் குழு எதிர்ப்பு தெரிவித்ததால் ‘நான் மகான் அல்ல’ என மாற்றினார்களாம்.

இளமைப் பருவத்தில் இவர் விரும்பிய பெண்ணிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்கு அப்பெண் “நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள்,” என்று கூறி அவரின் காதலை நிராகரித்தபோது, “உன்னைவிட அதிக நிறம் உள்ள பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன்,” என்று சவால் விட்டிருக்கிறார்.

அவருடைய மனைவி லதா ஒருமுறை அவருடைய கல்லூரி சார்பாக ரஜினியை நேர்முகப் பேட்டி எடுக்க வந்தபோது முதல் சந்திப்பிலேயே “என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?” என்று வெளிப்படையாகக் கேட்டு, காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரஜினி.

‘சிபிஎஸ்இ’ பாடத் திட்டத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். அதில் பேருந்து நடத்துநர், சூப்பர்ஸ்டார் ஆனது எப்படி என்கிற தலைப்பில் இவரது வாழ்க்கைக் கதை இடம்பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பெங்காலி போன்ற மொழிப் படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய தாய் மொழியான மராத்தியில் ஒரு படம் கூட நடித்ததில்லை.

ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை சூட்டியவர் கலைப்புலி எஸ் தாணு. அவர் தயாரித்த ‘பைரவி’ படத்தில் நடித்தபோது சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியோடு ரஜினியின் பெயரை போட்டு வெளியிட்டிருந்தார். தற்போது அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது.

கருப்பென்ற சொல்லே கலையுலகின் சிறப்பென்று காட்டிய நிரந்தர சூப்பர் ஸ்டார்,
செறுக்கேதுமின்றி நித்தம் பணி செய்து, நீடித்த புகழ் கொடி நாட்டி, நிரந்தர ‘சூப்பர் ஸ்டார்’ ஆன நடிகர் ரஜினிகாந்த்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!