சுரங்கவழியில் சிக்கிய 41 பேரை மீட்க இந்திய ராணுவம் அழைப்பு

உத்தரகாசி: சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 ஊழியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் இந்திய ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மீட்புப் பணிக்கு விரைந்த ராணுவம், துளையிடும் பணிக்கு உதவும் எனக் கூறப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆகர் இயந்திரத்தின் வெட்டும் தகடுகள் வெள்ளிக்கிழமையன்று துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது.

கிட்டத்தட்ட 60 மீட்டர் ஆழத்திற்குத் துளையிடப்பட்டுவிட்ட நிலையில், அந்த இயந்திரம் அப்பணியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, கைகளால் இயக்கவல்ல கருவிகளின் துணைகொண்டு 10-15 மீட்டர் ஆழத்திற்குத் துளையிட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஏற்கெனவே தோண்டப்பட்ட மீட்புத்துளைக்குள் ஒருவர் சென்று சிறிது நேரம் அதனைத் தொடர்வார். பின்னர் அவர் வெளியே வந்தபின் இன்னொருவர் சென்று அப்பணியைத் தொடர வேண்டும். இப்பணியை ராணுவத்தினர் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ‘மெட்ராஸ் சேப்பர்ஸ்’ எனும் பொறியாளர் குழுவும் மீட்புப் பணிகளில் உதவ ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றுசேரும் எனக் கூறப்பட்டது.

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டு 15 நாள்களாகிவிட்ட நிலையில், அந்த 41 ஊழியர்களையும் பாதுகாப்பாக மீட்க இன்னும் பல நாள்கள் ஆகலாம் எனச் சொல்லப்படுகிறது. ஒளிவெளிச்சம், உயிர்வாயு, உணவு, நீர், மருந்துப்பொருள்கள் ஆகியவை தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், நிகழ்விடத்திற்குச் சென்ற அனைத்துலகச் சுரங்கப்பாதைக் கட்டுமானம், பாதாள வெளிச் சங்கத்தின் தலைவர் ஆர்னல்ட் டிக்ஸ், கிறிஸ்துமசுக்குள் அந்த ஊழியர்கள் மீட்கப்பட்டுவிடுவர் என்றார். கிறிஸ்துமஸ் திருநாளுக்குக் கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதகாலம் இருக்கிறது.

இந்நிலையில், செங்குத்தாகத் துளையிடும் பணியும் அங்கு தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட வெட்டும் தகடுகளை அகற்றுவதற்காக ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலமாக ‘பிளாஸ்மா கட்டர்’ இயந்திரம் கொண்டுவரப்படுவதாக உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

இதனிடையே, துளையிடும் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ‘பாதுகாப்புக் குடை’ அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள ஊழியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதற்காகக் கம்பிவழி தொலைபேசி இணைப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் 41 அவசர மருத்துவ வாகனங்கள் தயார்நிலையில் உள்ளன. ஒவ்வோர் ஊழியருக்கும் முறையான சிகிச்சை வழங்க ஏதுவாக சின்யாலிசோர் சமூக சுகாதார நிலையத்தில் உயிர்வாயு வசதியுடன் கூடிய 41 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!