பித்தளைத் தட்டின் மீதேறி குச்சுப்புடி அரங்கேற்றம்

பித்தளைத் தட்டிலிருந்து (Brass Plate) பிறழாத கால்களுடனும் சுடர்விடும் விளக்கை ஏந்திய கைகளுடனும் குச்சிப்புடி அரங்கேற்ற நடனமாடி பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார் 14 வயதாகும் சுதிக்‌ஷா திவாகரன்.  

‘குச்சிப்புடி ரங்கபிரவேஷம்’ என்றழைக்கப்படும் குச்சிப்புடி நடன அரங்கேற்றத்தின் ஒரு பகுதியாக ‘தரங்கம்’ எனும் 15 நிமிட நடன அங்கத்தில் ஏறத்தாழ 6 நிமிடங்களுக்கும் மேல் பித்தளைத் தட்டில் நின்றபடி கைகளில் விளக்குடன் நடனமாடி பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றார் சுதிக்ஷா.  

தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் உயர்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் சுதிக்ஷா இம்மாதம் 1ஆம் தேதி ஏலியன்ஸ் ஃப்ரான்கைஸ் டி சிங்கப்பூர் (Alliance Francaise de Singapour) உள்ளரங்கில் ஏறத்தாழ 160திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் குச்சிப்புடி அரங்கேற்றம் செய்தார்.

 அரங்கேற்ற நிகழ்வில் அம்ப பராக்கு, கணேஷ ஸ்துதி, ஜதிஸ்வரம், தேவி ஸ்துதி, கிருஷ்ண சப்தம், கருட கமன, பாலகோபால தரங்கம், மங்கலம் (பாரதியாரின் ‘மனதில் உறுதி வேண்டும்’) ஆகிய நடன அங்கங்களை நேரடி இசைக்கச்சேரிக் குழுவுடன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு அரங்கேற்றினார் சுதிக்‌ஷா.

“நான் கருவில் இருக்கும் போதே தன்னுடைய தாயார் எனக்கு நடனம் கற்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். கருவிலேயே விதைக்கப்பட்ட ஆர்வமாதலால் இயல்பாகவே எனக்கு நடன ஈடுபாடு இருந்தது,” என்று புன்னகைக்கிறார் இந்த சிறுமி. 

“தொடக்கநிலைப் பள்ளி காலங்களில் வாரயிறுதிகளில் குச்சுப்புடி நடன வகுப்பிற்கு செல்வதற்கு சோம்பலாக உணர்ந்துள்ளேன். ஆனால் நாள்கள் செல்ல செல்ல இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் தானாகவே பிறந்தது. அதற்கு என் நடன குருவே காரணம் ,” என்றும் பகிர்ந்துகொண்டார் சுதிக்ஷா. 

பொதுவாகவே ஒவ்வொரு நடனத்திற்கும் பின்னால் உள்ள புராணக் கதைகளை பற்றிய புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பேன். இதன் மூலம் நடனத்தில் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை நன்கு உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்க முடியும் என்றும் இவர் கூறினார்.

அரங்கேற்றம் செய்யலாம் என்ற முடிவெடுத்த போது என்னைவிட என் குருவும் பெற்றோருமே அதிக நம்பிக்கையுடன் இருந்தனர். அபிநயங்களையும் நடன நுணுக்கங்களையும் மேம்படுத்த தினமும் பயிற்சி எடுத்துக்கொண்டேன் என்றும் இவர் கூறினார். 

பித்தளை தட்டின் மீதேறி நிலைகுலையாமல் நடனமாடப் பழகுவது ஆரம்பத்தில் மிகுந்த சவாலாக இருந்தது. ஆனால் அந்நடனத்தின் நுணுக்கங்களை ஆழமாக கற்றபின் தொடர் பயிற்சியின் மூலம் அந்த நடன அங்கத்தை சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றேன் என்றும் கூறினார் சுதிக்ஷா. 

சுதிக்ஷாவின் குச்சிப்புடி குருவும் கனக சபா மேடைக் கலை நிலையத்தின் இணை நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் திருவாட்டி சிரி ராமா, 50 (Dr Mrs Siri Rama) கூறுகையில், “சுதிக்‌ஷாவிற்கு ஐந்து வயது இருக்கும் போது அவளின் தாயார் என்னிடம் முதன் முதலில் அழைத்து வந்தார். அச்சமயத்தில் அவ்வயதில் என்னிடம் வேறு மாணவர்கள் பயிலாத காரணத்தால் சுதிக்‌ஷாவை விட சில ஆண்டுகளே மூத்தவளான என் மகளையும் சுதிக்‌ஷாவின் வகுப்பில் இணைத்து கற்றுக்கொடுத்தேன் ,”. 

“அந்த இளம் வயதிலேயே குச்சிப்புடி மீது நாட்டமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் சுதிக்‌ஷாவிடம் இருந்தது. குறிப்பாக இந்த அரங்கேற்றத்திற்காக சுதிக்‌ஷா கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டது நடனத்தின் மீது அவளுக்குள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது ,” என்றும் தெரிவித்தார். 

குச்சிப்புடி நடனத்தில் பித்தளைத் தட்டின் மீதேறி ஆடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு அதிக அளவிலான கவனமும் நுட்பமும் தேவை. சுதிக்‌ஷா அதனை சிறப்பான முறையில் அரங்கேற்றியது பாராட்டுதலுக்குரியது என்றும் கூறினார் திருவாட்டி சிரி. 

“எனக்கு மகள் பிறந்தால் நடனம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சுதிக்ஷாவிற்கு 4 வயதிருக்கும் போது ஒருமுறை குடும்பத்துடன் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தோம். அப்போது தான் முதன்முதலில் குச்சிப்புடி நடனத்தை நேரில் கண்டேன். ஆண் ஒருவர் மெச்சத்தகும் முக பாவங்களுடனும் நளினத்துடனும் பித்தளைத் தட்டின் மீதேறி குச்சிப்புடி நடனமாடினார். என் மகளும் இதைப்போல் ஆட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது அன்று தான் ,” என்று நினைவுகளைப் பகிர்ந்தார் பள்ளி ஆசிரியரான சுதிக்‌ஷாவின் தாயார் திருவாட்டி சிவப்பிரியா திவாகரன், 43. 

தான் கண்ட கனவு நனவான தருணத்தை, அரங்கேற்ற நிகழ்வில் பூரிப்புடன் பார்த்து ரசித்த இந்த தாய் தொடர்ந்து தன் மகள் நடன உலகில் நிலைத்து நின்று பல்வேறு சாதனைகள் படைத்திட வேண்டும் என்று மகளுக்கு ஆசி கூறினார். 

எதிர்காலத்தில் குச்சிப்புடி நடனத்தில் கடினமான அங்கங்களான சிம்ஹநந்தினி, மேம்படுத்தப்பட்ட (advanced) தரங்கம் நடனங்களை கற்றுத் தேர வேண்டும் என்றும் தன்னைப் போன்று இளம் வயதிலிருந்தே பல நடனக் கலைஞர்களை உருவாக்க தன் குருவிற்கு உதவ வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார் சுதிக்‌ஷா. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!