‘கண்ணீர்’ கதை

கண் உடலின் முக்கிய உறுப்பு என்றால் அது மிகையில்லை. உடலில் உள்ள ஆக வலிமையான, ஆக வேகமான தசைகளால் இயக்கப்படும் உறுப்பு இது.

கண், சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 1,500 தகவல்களை மூளைக்குக் கடத்துகிறது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வண்ணங்களைப் பிரித்தறிகிறது. எல்லாவற்றையும்விட, தன்னைத் தானே சரிசெய்து மீளுருவாக்கம் செய்துகொள்ளும் திறன்கொண்டவை கண்கள்.

கண்களில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருந்தால், அவற்றுள் 80 விழுக்காட்டுப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கண்களைப் பாதுகாக்கும் முக்கிய அம்சம், கண்ணீர் என்கிறார் சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மூத்த கண் மருத்துவர் முகம்மது ஃபாரூக். ஒவ்வொருமுறை கண்ணை இமைக்கும்போதும், கண்ணின் மேற்பரப்பில் கண்ணீர் படர்ந்து வெளிப்புறப் பாதிப்புகளிலிருந்து கண்ணைக் காக்கிறது. இது, ‘பேசல் டியர்ஸ்’ எனப்படுகிறது.

தூசு உள்ளிட்ட எரிச்சலூட்டும் ஏதேனும் கண்ணில் விழுந்துவிட்டால் அதனை வெளியேற்றவும், அதனால் தொற்று ஏற்படாமல் காக்கவும் உடனடியாகக் கண்ணீரை உற்பத்தி செய்கின்றன கண்கள். இது ‘ரிஃபிளக்ஸ் டியர்ஸ்’ எனப்படுகிறது. பெரும்பாலும் கண்களுக்குள் நுழையும் எதனையும் தடுத்து வெளியேற்றும் ஆற்றல் கண்களுக்கு உண்டு.

அடுத்து பொதுவாக சோகம், மகிழ்ச்சி போன்ற தீவிர உணர்ச்சிகள் ஏற்படும்போது கண்ணீர் வரும். இது ‘இமோஷனல் டியர்ஸ்’. மூளையின் ‘லிம்பிக் சிஸ்டம்’ எனும் உணர்வுக் கட்டுப்பாட்டு அமைப்பின் கட்டளைக்கேற்ப, தீவிர உணர்வினால் உடலில் ஏற்படும் அழுத்தத்தைக் கண்ணீர் மூலம் வெளியேற்றுகின்றன கண்கள். மற்ற இருவகைக் கண்ணீர்போல அல்லாமல், புரோலேக்டின், பொட்டாசியம், மாங்கனிஸ், மனஅழுத்த ஹார்மோன்கள், புரதங்கள் போன்றவை இந்தக் கண்ணீரின் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

கண்ணீரைப் பாதுகாக்க சில வழிமுறைகள்

கண்களைப் பாதுகாக்கும் முக்கிய அம்சமான கண்ணீரைக் குறைக்கும், தடுக்கும் செய்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஃபாரூக். கண்ணீரைப் பாதுகாக்க சில குறிப்புகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

நீண்ட திரை நேரம், கண் சிமிட்டும் இடைவெளியைப் பாதிக்கும். கண் நலத்தை மனத்தில்கொண்டு, அடிக்கடி வலிந்து கண் சிமிட்ட வேண்டும்.

உடலின் பொதுவான நீரேற்றம் கண்களின் நலனுக்கும் உதவும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதும் பதப்படுத்தப்பட்ட, கலனில் அடைக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை உள்ள உணவு வகைகளைக் குறைவாக உண்பதும் கண்களுக்கு நன்மை தரும்.

சிலர் கணினித் திரை வெளிப்படுத்தும் நீலக் கதிர்கள் கண்களை வறட்சியாக்கும் எனக் கருதுவதால், அதிலிருந்து பாதுகாக்கும் சிறப்புக் கண்ணாடியை அணிகின்றனர். அதனால் பாதிப்பு குறையும் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை என்றாலும், அணிவதால் சிக்கலும் இல்லை என்கிறார் ஃபாரூக்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் பொதுவாக காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படும். அத்தகைய சூழலில் நீண்ட நேரம் இருக்க நேர்ந்தால், ‘ஹியுமிடிஃபையர்’ எனும் ஈரப்பதமூட்டிகளை உபயோகிக்கலாம். கார் உள்ளிட்ட வாகனங்களில் நீண்ட தொலைவு பயணம் செய்யும் சூழலிலும் வறண்ட காற்றினால் கண்களுக்கு எரிச்சல் ஏற்படும். அப்போதும் ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்தலாம்.

வறண்ட கண்களைக் கொண்டவர்கள், சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்க வேண்டிய சூழல் இருந்தால், உரிய பாதுகாப்புக் கண்ணாடிகளை அணியலாம்.

காற்றிலுள்ள மாசு, கண்களை வறட்சியாக்கும் என்பதால், வெளியில் சென்றுவந்த பின்னர், கண்களைச் சுத்தமான நீரில் கழுவி, ஒற்றித் துடைப்பது நல்லது.

திரையைப் பார்க்கும் நேரங்களில் வசதியான சூழ்நிலையையும், உரிய தொலைவையும் அமைத்துக் கொள்வது சிறந்தது.

பொதுவாக அலுவலக, வீட்டுச் சுற்றுப்புறத்தைத் தூசியின்றி சுத்தமாக வைத்துக்கொள்வது கண்களுக்கு மட்டுமன்றி, மொத்த உடல் நலனுக்கும் நல்லது.

கண் மை உள்ளிட்ட கண்களுக்கான அழகுசாதனப் பொருள்களை உபயோகிப்போர், தரமானவற்றைத் தேர்தெடுத்து உபயோகிப்பது அவசியம். அன்றாடம் படுக்கப் போகும்முன் உரிய துடைப்பான்கள் கொண்டு நன்கு சுத்தம் செய்வது கண்ணிமைகளில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொள்ளாமல் பாதுகாக்கும்.

பொதுவாக எண்ணெய்ப் பசை கொண்ட சருமமாக இருந்தால், அவ்வப்போது கண்களைச் சுத்தம் செய்வது, ஈரத் துணியால் ஒற்றி எடுத்துப் பாதுகாப்பது, சருமத் துவார அடைப்பினால் ஏற்படும் கண் கட்டிகள் வராமல் தடுக்கும்.

நீரிழிவு, ‘ஆட்டோ இம்யூன்’ நிலை, தைராய்டு, ‘மெனோபாஸ்’ எனும் மாதவிடாயின் இறுதிக்கட்டம், ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடிய நிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரை அணுகிப் பரிசோதிப்பது நல்லது எனப் பரிந்துரைக்கிறார் ஃபாரூக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!