சிவந்த கண்கள்: காரணங்களும் தீர்வுகளும்

ஐம்புலன்களில் தலையாய புலனான கண் நலம் குறித்த விழிப்புணர்வும், புரிதலும் அவசியம். பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் கூட பெரிதும் கவனிக்காத உறுப்பு கண்.

கண், உடலிலுள்ள பல பிரச்சினைகளை வெளிக்காட்டும் கண்ணாடி. எனினும், கண்ணில் உள்ள சில குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிவதற்கே பல காலம் எடுக்கும். அதனைச் சரிவர கவனித்து உரிய மருத்துவ ஆலோசனை எடுப்பது முக்கியம்.

கண்ணில் ஏற்படும் சில அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றைத் தகுந்தபடி கவனித்து அடுத்த முடிவுகளை எடுக்க வேண்டும். கண்ணில் பரவலாக பலருக்குத் தோன்றும் அறிகுறி கண் சிவந்துபோதல்.

பொதுவாக கண் சிவந்திருந்தால், அடுத்த அறிகுறிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்கிறார் சிங்கப்பூர் தேசியக் கண் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் கண் பரிசோதனை நிபுணர் முகம்மது ஃபாருக். தூக்கமின்மை முதல், ‘கிளோகோமா’ எனும் கண் அழுத்த நோய் வரை அனைத்துக்கும் முதல் அறிகுறி கண் சிவத்தல்தான் என்கிறார் இவர்.

தூக்கமின்மை, வேலைப்பளு

சரியான உறக்கமின்மை, நீண்ட நேரப் பணி உள்ளிட்டவற்றால் கண் சிவந்து காணப்படலாம். இது சோர்வின் அறிகுறி. உரிய அளவு ஓய்வு எடுத்தபின் கண் சரியாகிவிட்டால், அதுகுறித்த கவலை வேண்டாம் என்கிறார் திரு ஃபாருக்.

வறண்ட கண்கள்

சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 14 முதல் 17 முறை வரை கண் சிமிட்டுவது அவசியம். இது விழியில் ‘லாக்ரிமல் சுரப்புகள்’ எனும் விழி நீரைத் தக்கவைப்பதோடு, வெளிப்புற பாதிப்புகளில் இருந்து காக்கிறது.

போதிய அளவு தரமான கண்ணீர் சுரக்காதவர்களுக்கும், ‘கான்டாக்ட் லென்ஸ்’ எனும் தொடுவில்லைகளை அணிபவர்களுக்கும் கண்கள் விரைவில் வறண்டு, சிவந்துபோகும்.

நாள் முழுதும் திரையைப் பார்த்துக்கொண்டே பணியாற்றுபவர்கள், பணியில் மூழ்கி இருப்பதால் கண்ணிமைக்கும் இடைவேளை அதிகரிக்கிறது. இதனால் உரிய அளவு கண்ணீர் இல்லாமல் கண்கள் வறண்டு போகின்றன. இது கண் சிவந்துபோக மற்றொரு பொதுவான காரணம் என்கிறார் திரு ஃபாருக்.

இது தொடர்ந்தால், கண் உறுத்தலும், அரிப்பும் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கிறார் அவர். இதனைச் சரிசெய்ய, 20-20-20 முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.

தொடர்ந்து திரைமுன் பணியாற்றுபவர்கள், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தொலைவிலுள்ள பொருளை 20 நொடிகள் பார்த்துப் பழக வேண்டும். இது கண் அயர்வைக் குறைக்கும்.

பெரிய கணினித் திரையைப் பயன்படுத்தலாம். குறிப்பாக கண்ணைத் திரைக்கு அருகில் கொண்டு செல்லாமல், உரிய தொலைவிலிருந்து பயன்படுத்த வேண்டும். படம் பார்ப்பது, இணையத்தில் விளையாடுவது ஆகியவற்றுக்கும், திறன்பேசி போன்ற சிறு திரைகளில் அல்லாமல் பெரிய திரைகளைப் பயன்படுத்தலாம் என்கிறார் திரு ஃபாருக்.

மிகவும் வறண்ட கண்களோடு, உறுத்தல், எரிச்சல், அரிப்பு ஆகியவை ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரையின் பேரில் வறண்ட கண்களுக்கான சொட்டு மருந்தை உபயோகிக்கலாம்.

‘சப்-கான்ஜங்டிவல்’ ரத்தக்கசிவு

சிலருக்கு அவ்வப்போது கண்களில் ரத்தச் சிவப்பு நிறம் தோன்றும். இது கண்களில் உள்ள மெல்லிய ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்தக் கசிவாக இருக்கலாம் என்று திரு ஃபாருக் கூறுகிறார்.

கண்களின் ரத்த நாளங்கள் மிகவும் மென்மையானவை என்பதால், மிக வேகமாக தும்மினாலோ, தொடர் இருமல், வாந்தி ஆகியவற்றினாலோ அதில் கசிவு ஏற்படலாம். பொதுவாக அவை சில நாள்களுக்குள் சரியாகும் என்கிறார் இவர்.

வயதில் மூத்தோருக்கும், ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் இது அவ்வப்போது தோன்றி மறையும் என்று திரு ஃபாருக் தெரிவித்தார். சில வாரங்கள் தொடர்ந்து நீடித்தாலோ, வலி, அசௌகரியம் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் அவர்.

இவை தவிர, காற்றில் மாசு, குளிரூட்டியினால் வறண்ட காற்றுள்ள அறையில் நீண்ட நேரம் இருப்பது, கண்ணில் நேராகக் காற்றடிக்கும்படி அமர்வது அல்லது உறங்குவது, சில மருந்துகள் உட்கொள்வது, போர்வை, தலையணையில் இருக்கும் தூசு உள்ளிட்டவற்றாலும் கண் சிவந்து போகலாம். காரணத்தைக் கண்டறிந்து களைவது, நீண்ட நாள் பாதிப்பிலிருந்து கண்ணைக் காக்கும் என்று திரு ஃபாருக் கூறினார்.

 ‘கிளோகோமா’

கண் அழுத்தம் என்பது பரவலான நிலை இல்லை என்றாலும், அது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்கிறார் திரு ஃபாருக். கண்களுக்குப் பின்புறமுள்ள பார்வை நரம்புகளில் வழக்கத்துக்கு மாறாக ஏற்படும் அழுத்தத்தால், நரம்புகளில் சேதம் ஏற்படுகிறது. சிலருக்கு இது தலைமுறை தலைமுறையாக ஏற்படலாம். இந்நிலைக்கு உயர் ரத்த அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்கிறார் திரு ஃபாருக்.

தொடர்ந்து கண் சிவந்து இருத்தல், கண்ணில் வீக்கம், கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் இவர்.

ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது போலவே, கண் பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, கண் நோய்களை விரைவில் கண்டறிய உதவும் என்று திரு ஃபாருக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!