சுகி.சிவம் கலந்துகொண்ட சிறப்பு கியட் ஹொங் பட்டிமன்றம்

தமிழ்மொழி விழாவை ஒட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, 11வது முறையாகச் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.

கியட் ஹொங் சமூக மன்ற வளாகத்தில் இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியைக் காண பார்வையாளர்கள் திரளாகக் கூடியிருந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சொல்வேந்தர் திரு சுகி. சிவம் சிறப்பு வருகை அளித்து பட்டிமன்ற நடுவராக நிகழ்ச்சிக்குக் கூடுதலான சிறப்பைச் சேர்த்தார்.

பட்டிமன்ற விவாதம் தொடங்கும் முன்னர் சுகி.சிவம் நகைச்சுவைக் கலந்த சிறப்புரையாற்றி பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்தினார். ‘ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை மிக்கவர் ஆண்களே, பெண்களே’ என்ற தலைப்பில் மூன்று பெண்கள் கொண்ட குழுவும், மூன்று ஆண்கள் கொண்ட குழுவும் மேடையில் மோதினர்.

விவாதத்தைக் தொடக்கி வைத்த மாணவி மகிஷா பொதுவாகவே பெண்கள் அதிகம் போட்டித்தன்மை மிக்கவர்கள் என்று குறிப்பிட்டார். ஒரு வேலையிடத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், சக ஊழியருக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அதைப் பற்றி அதிகமாகப் பேசுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்குமே தவிர ஆண்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று சொன்னார்.

இதனால் பெண்கள் எப்படியாவது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு உச்சத்தை அடையவேண்டும் என்ற மனம் படைத்தவர்கள் என்று மகிஷா தன் கருத்தைச் சொன்னார். மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை அதிகம் பயன்படுத்துவதும் பெண்கள்தான் என்ற மகிஷா, பெண்கள்தான் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை மிக்கவர்கள் என்று வலியுறுத்தினார்.

எதிரணியைச் சேர்ந்த பேச்சாளர் ராம்குமார் முயற்சியின் முதல் படி எடுப்பது ஆண்கள்தான் என்று கூறி தனது விவாதத்தைத் தொடங்கினார். பெண்களை விட ஆண்களே ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை மிக்கவர்கள் என்று ஆழமாகத் தன் கருத்தைப் பதித்த ராம்குமார், ஆண்கள் அக்கறை எடுக்காமல் இருந்திருந்தால் உலகில் பல கண்டுபிடிப்புகள் ஏற்பட்டிருக்காது என்றும் சொன்னார்.

ராம்குமார் தெரிவித்த கருத்துகளை மறுக்கும் விதமாக பெண்கள் அணியிலிருந்து வந்த இதர பேச்சாளர் கவிதா, ஆதி காலத்திலிருந்து ஆண்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளைக் காட்டிலும் பெண்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொன்னார்.

இந்தியாவைச் சேர்ந்த பெண் மலையேறியும், விளையாட்டு வீராங்கனையுமான அருணிமா சின்ஹாவை எடுத்துக்காட்டாகத் தனது விவாதத்தில் குறிப்பிட்ட கவிதா, “அருணிமா சின்ஹாவின் கால் விபத்து காரணமாகத் துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண் அதைப் பொருட்படுத்தாமல் எவரெஸ்ட் மலையை ஒரு கால் இல்லாமல் ஏறி விட வேண்டுமென்ற உத்வேகத்தில் உலகில் ஒரு கால் இல்லாமல் மலை ஏறிய முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார்.”

“ஆற்றல் இல்லாத ஒரு பெண் எவ்வாறு இத்தகைய சாதனையைப் படைத்திருக்க முடியும்?,” என்று விவாதத்தில் கேள்வி எழுப்பி பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றார்.

பேச்சாளர்களின் விவாதம் முடிந்த கையோடு நடுவர் சுகி. சிவம் தீர்ப்பு அளிக்கும் நேரம் வந்தது. பெண்கள் குழந்தை பெற்றெடுப்பது மிகப்பெரிய ஆற்றல் என்று பகிர்ந்துகொண்ட அவர் அமரர் லீ குவான் யூ சிங்கப்பூரை உயர்த்துவதற்குச் செய்த அனைத்தையும் பெரிய ஆற்றலாகத் தனது முடிவுரையில் குறிப்பிட்டார்.

அதோடு, பொதுவாக ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பிடிவாத குணம் படைத்தவர்கள் என்று சொன்ன சுகி. சிவம், 10 மாதங்கள் கருவில் குழந்தையைச் சேமிக்க தெரிந்த ஒரு பெண்ணுக்கு, ஆற்றலைச் சேமிக்க தெரியாதா என்ற கேள்வியைப் பார்வையாளர்களிடம் கேட்டார்.

“ஆகவே, ஆற்றல் என்பது பெண்களுக்குத் தனி, ஆண்களுக்குத் தனி என்றில்லாமல் மனிதர்கள் அனைவருக்கும் அது இருக்க வேண்டும். இருக்கும் ஆற்றலை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். இதனால் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை மிக்கவர்கள் ஆண்களும் பெண்களும்,” என்று சொல்லிச் சார்பற்ற தீர்ப்பை சுகி.சிவம் வழங்கினார்.

“இளம் வயதிலிருந்து நான் சுகி.சிவம் உரையாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். அவர் சிந்தையில் ஒரு தெளிவு இருக்கும். நகைச்சுவை கலந்த ஆழமான கருத்துகளைப் பதிவு செய்யும் ஆற்றல் கொண்டவர் அவர். சிங்கப்பூரில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் அவரைக் காண நான் ஆவலுடன் நிகழ்ச்சிக்கு வந்தேன். பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி பார்வையாளர்களை சுகி. சிவம் ஈர்த்தார்,” என்று பார்வையாளர்களில் ஒருவரான இல்லத்தரசி தேவி, 42, சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!