சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரை மேற்கொள்கிறது: அமைச்சர் சண்முகம்

‘போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாகத் தடுக்க மரணதண்டனை உதவுகிறது’

சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு போரிடாவிட்டாலோ அப்போரில் தோல்வியுற்றாலோ ஆயிரக்கணக்கானோர் துன்புற நேரிடும் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்த அமைச்சர்நிலை அறிக்கையை மே 8 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டுப் பேசினார்.

உலகச் சுகாதார நிறுவனம், போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழந்தோர் குறித்த உலகளாவிய போதைப்பொருள் அறிக்கை ஆகியவற்றின் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட அமைச்சர், “இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள் எனப் பல நிலைகளைச் சார்ந்தோரின் உயிர்கள்,” என்றார்.

“அதனால்தான் இதைப் போருடன் ஒப்பிடுகிறேன். பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிவாங்கும் போதைப்பொருள்களை விற்பதன் மூலம் லாபம் ஈட்டுவோருக்கு எதிரான போர் இது,” என்றார் திரு சண்முகம்.

2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான அதன் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்கீழ், போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகப் பிடிபட்டோர் இதர குற்றங்களில் ஈடுபடாவிட்டால், அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்படுவர். அவர்கள் மீது குற்றவியல் பதிவு ஏதும் இருக்காது.

போதைப்பொருள் புழங்குவோருக்கு உதவ முயலும் வேளையில், போதைப்பொருள் கடத்துவோர் தொடர்பான சிங்கப்பூரின் நிலைப்பாடு கடுமையானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“பணத்துக்காக மற்றவர் உயிரை அழிப்போரைச் சிங்கப்பூர் அறவே பொறுத்துக்கொள்ளாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, சுவீடன், பெல்ஜியம் போன்ற நாடுகளில் போதைப்பொருள் விற்பனை, நாட்டின் பாதுகாப்பையும் குடிமக்களின் வாழ்க்கையையும் எவ்வாறு பாதித்தது என்பதைத் திரு சண்முகம் விளக்கினார்.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச்சூடுகளும் வெடிகுண்டுச் சம்பவங்களும் இடம்பெற்றதைக் குறிப்பிட்ட அவர், அவற்றில் பெரும்பாலனவை போதைப்பொருள் விற்பனை தொடர்பான போட்டி, பகையை முன்னிட்டுக் குண்டர் கும்பல்கள் வன்செயலில் ஈடுபட்ட சம்பவங்கள் என்றார்.

போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, ஆரிகன் வட்டாரங்களில் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைச் சுட்டிய அமைச்சர், இத்தகைய கொள்கைகள் அடுத்த தலைமுறையின் மீது நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

ஆகவேதான், போதைப்பொருளைத் தடுப்பதில் மரணதண்டனை வெற்றிகரமாகப் பங்களிக்கிறது என்றார் அவர்.

1990ஆம் ஆண்டு, 1.2 கிலோவுக்கு அதிகமான ஓப்பியம் போதைப்பொருளைக் கடத்தினால் மரணதண்டனை எனும் சட்டம் அமலுக்கு வந்த நான்கு ஆண்டுகளில் கடத்தப்பட்ட ஓப்பியத்தின் அளவு 66 விழுக்காடு குறைந்தது.

கொள்கை வடிவமைப்போர் மரணதண்டனை குறித்து முடிவெடுப்பது எளிதானதன்று என்றார் திரு சண்முகம்.

“ஆனால், கிடைத்துள்ள ஆதாரங்கள், நம் மக்களைக் காக்கவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழியாமல் தடுக்கவும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தடுக்கவும் மரணதண்டனை அவசியம் என்பதைக் காட்டுகின்றன,” என்றார் அவர்.

போதைபொருளுக்கு எதிரான போரைத் தொடரும் விதமாக, இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி இவ்வாண்டு மே 17ஆம் தேதி, நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசாவில் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!