லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றியடைந்துள்ளது லிவர்பூல்.
டியோகோ ஜோட்டா, டார்வின் நுனியெஸ், மோ சாலா ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர். இப்பருவம் இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ள லிவர்பூல் தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
லிவர்பூல் நட்சத்திரம் லூயிஸ் டியாசின் பெற்றோர் கொலம்பியாவில் கடத்தப்பட்ட விவகாரத்தையொட்டி அவர் ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆட்டம் நடைபெற்றபோது கொலம்பியாவைச் சேர்ந்த டியாசின் தந்தை கண்டுபிடிக்கப்படவில்லை.
டியாசின் தாய் முன்னதாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதர பிரிமியர் லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடிவரும் ஏஸ்டன் வில்லா, லியூட்டன் டெளனை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது, ஃபுல்ஹமும் பிரைட்டனும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது எவர்ட்டன், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் விளாசியது.