வதைபட்டதால் வழிமாறியவர் இளையரை வழிப்படுத்துகிறார்

இரும்புக் கரண்டியை அடுப்பில் சூடாக்கி தொடையில் சூடு வைத்தார் தந்தை. அரவணைக்க வேண்டிய தாயின் கைகள், ஆபத்திலிருந்து இவரைத் தப்பவிடாமல் பற்றின.

பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய [Ϟ]வீடு முகம்மது நரிஷ் முகம்மது நோவுக்கு பயங்கரமான காடாக இருந்தது.

ஓர் அக்கா, இரண்டு தம்பிகளுடன் வளர்ந்த திரு நரிஷ், தாம் மட்டும் பாலர் பள்ளி முதல், வீட்டில் சித்திரவதையை அனுபவித்ததாகக் கூறினார்.

மற்றொரு சமயத்தில் தந்தை அவரைக் கட்டிப்போட்டு கூண்டுக்குள் அடைத்தார். பல்வேறு முறை இப்படிப்பட்ட வதைச்சம்பவங்கள் நிகழும்போது தம் உடன்பிறந்தவர்கள் எதுவும் பேசாமல் நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்ததை 24 வயது திரு நரிஷ் நினைவுகூர்ந்தார்.

“உதவும்படி என் கண்கள் அவர்களை மன்றாடும். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை,” என்றபோது அவரது குரலில் கலக்கம் இருந்தது.

பெற்றோரின் இத்தகைய இரக்கமற்றச் செயல்களால் மருண்ட இவர் மனதை கோபமும் ஆதிக்க வேட்கையும் கவ்விக்கொண்டன. பள்ளிக்காலத்தில் சக மாணவர்களை அடித்துத் துன்புறுத்தினார். தம்மைவிட வயதில் மூத்த குண்டர் கும்பல் உறுப்பினர்களுடன் பழகி அடிதடியில் ஈடுபட்டார்.

“அப்போது, என் மனதில் பொங்கிய பழிவாங்கும் உணர்வை பெற்றோரிடம் காட்ட முடியாததால் தெரியாதவர்களிடம் காட்டினேன்,” என்றார். உயர்நிலை மூன்றில் படிப்பில் ஆர்வத்தை முழுமையாக இழந்தார். பள்ளிக்கு ஒழுங்காகச் செல்வதில்லை. பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியர்களும் கைகழுவினர்.

வழக்கநிலைத் தேர்வில் தோல்வியுற்றார். தெரிந்தவர்கள் சிலர் போலிசாரிடம் பிடிபட்டபோது தாமும் பிடிபடக்கூடும் என்ற அச்சம், அவரை மாற்றியது.

 

 

இளையருக்கு அடைக்கலமாக இருக்கிறார்

பயிலங்குகள் மூலம் பிறருக்கு கோபத்தை அடக்கக் கற்றுக்கொடுக்கிறார் திரு நரிஷ். படம்: பே. கார்த்திகேயன்

அதன்பின்னர் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகம் அவருள் பற்றிக்கொண்டது. 17 வயதில் வழக்கநிலைத் தேர்வை எழுதி வெற்றியடைந்தார்.

தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சமூக ஈடுபாடு, மேம்பாட்டுத் துறையில் சிங்கப்பூர் ஊழியரணி திறன் தகுதிச் சான்றிதழ் படிப்பை மேற்கொண்டிருக்கும் திரு நரிஷ், பகுதி நேரமாக ‘இம்பார்ட்’ அமைப்பில் மனநல விவகாரங்களுக்குக் குரல்கொடுப்பவராக இருக்கிறார்.

பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாதவர்கள், குண்டர் கும்பலில் இருப்பவர்கள், தன்னையே வதைப்பவர்கள் போன்ற முறை[Ϟ]தவறி வாழும் இளையர்களை ஆதரிப்பது இவரது தற்போதைய வேலை. மனம் பேதலிக்கும்போது தங்கள் கரங்களையே கீறும் இளையர்களிடம் அவ்வாறு செய்வதற்குப் பதிலாகப் பனிக்கட்டிகளைப் பயன்படுத்தும்படி கூறுவார்.

“தோலைக் கீறினால் ஏற்படும் எரிச்சல் உணர்வு குளிரான பனிக்கட்டிகளைத் தோலின்மீது வைக்கும்போது ஏற்படுகிறது. ஆனால் பனிக்கட்டிகள் காயத்தை ஏற்படுத்தாது,” என்றார் திரு நரிஷ்.

இத்தகைய இளையர்கள் தங்களது கோபத்தையும் வேதனையையும் சரியான சூழலில் வெளிப்படுத்த முடியாததால் உணர்ச்சிகளைத் தொடர்ந்து அடக்கி பின் எரிமலை போல் குமுறுவதாகக் கூறினார்.

கோபத்தைத் தணிப்பதற்காக குளிர்மிகு நீரினால் குளிப்பது, தியானம் செய்வது போன்ற உத்திகளை திரு நரிஷ் பரிந்துரைத்தார். அத்துடன், பயிலரங்குகளில் இந்த உத்திகளைப் பிற மாணவர்களுக்கும் இவர் கற்பித்து வருகிறார்.

 

அன்பை அறிவதற்காகக் கடந்த பாதை

தென்கிழக்காசிய போட்டிகளில் வெண்கல விருதைப் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது ரித்வானிடம் 2018ல் திரு நரிஷ் குத்துச்சண்டை பயின்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக பணியாளர் ஒருவரின் பரிந்துரையில் குத்துச்சண்டயில் ஈடுபடத் தொடங்கிய திரு நரிஷ், அதன் வழியாக தமக்குள் இருந்த குமுறலை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தினார். இதன் பின்னர் திரு நரிஷ், தேசிய விளையாட்டாளர்களிடமிருந்து குத்துச்சண்டை பயின்றார்.

துன்பத்திலிருந்து இயன்றவரை தன்னைக் காப்பாற்றிய தன் பாட்டி மூலம் அன்பு என்ன என்பதைத் தெரிந்துகொண்டார். 2017ல் சிங்கப்பூர் சிறார் இல்லத்தில் தங்கியிருந்தபோது இம்பார்ட்டின் நிறுவனரும் மனோதத்துவ நிபுணருமான திரு நரசிம்மன் திவாசிகமணியின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.

“திரு நரசிம்மன் மூலம் மன நலம் பற்றிய தெளிவைப் பெற்றேன். மனநலச் சிக்கல்கள் என்பது புத்தி பேதலித்தவர்களுக்கு மட்டும் ஏற்படுவதல்ல எனப் புரிந்துகொண்டேன். மனிதனாக இருக்கும் நாம் மனநலச் சவால்களை எதிர்நோக்குவது இயல்பு,” என்றார்.

இவரது அப்பா தமிழர், அம்மா மலாய்க்காரர். திரு நரிஷ் மலாய் படித்தவர். தமிழ் புரியும்.

வருங்காலத்தில் குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்க்க ஆசைப்படும் நரிஷ், தன் தந்தையின் தீய மனப்போக்குகள் தன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், மிகுந்த கவனத்துடன் தன்னையே நிர்வகிக்கிறார்.

தான் வழிகாட்டும் ஓர் இளையர் கோபப்பட்டு தன்னை அடித்தபோதும் நிதானத்தை இழக்காமல் அவரை அன்பினால் திருத்திய திரு நரிஷ், ஒருவர் காட்டும் மன்னிப்பு பிறரைத் திருத்த உதவும் என்றார்.

வீட்டுச் சூழலை அவ்வப்போது நினைக்க நேர்ந்தால் மனதில் தம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்பதையும் பெற்றோர்கள் தம்மிடம் மன்னிப்பு கேட்பதையும் கற்பனை செய்து தம்முள் இருக்கும் கோபத்தை விட்டுவிடுவதாகக் கூறினார்.

“தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னிக்க சிரமப்படுவோருக்கு நான் பரிந்துரைக்கும் உத்தி இதுவே,” என்றார் திரு நரிஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!