இளையர் விழாவில் ‘அழகே! மொழியே!’ பேச்சுப் போட்டி

மாணவர்களிடத்தில் தமிழ்ப் பேச்சாற்றலை ஊக்குவிக்க தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் ‘அழகே! மொழியே!’ பேச்சுப் போட்டி சனிக்கிழமை செப்டம்பர் 9 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

கவிதைகளுக்கான தங்கமுனைப் பரிசை 2015, 2019இல் பெற்ற திருமதி சுபா செந்தில்குமார் இயக்குநராகத் திகழும் ‘இன்போனிடிக்ஸ்’ அமைப்பு, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

‘அழகு - உங்கள் பார்வையில்’ எனும் தலைப்பில் மாணவப் பிரிவு, பொதுப் பிரிவு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

50 பேர் பதிவுசெய்திருந்த போட்டியின் இணையச் சுற்றுக்கு 35 பேர் இரு நிமிடக் காணொளிகளை அனுப்பியிருந்தனர். மாணவப் பிரிவில் பத்து மாணவர்களும் பொதுப் பிரிவில் ஒன்பது போட்டியாளர்களும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தனர்.

இறுதிச் சுற்றுக்கு நடுவர்களாக திரு. ஜோதி.மாணிக்கவாசகம், திரு. ராம்குமார் சந்தானம் மற்றும் திருமதி. மஹஜபீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதிச் சுற்றுக்கான நடுவர்கள். இடமிருந்து: திரு. ராம்குமார் சந்தானம், திருமதி. மஹஜபீன், திரு. ஜோதி.மாணிக்கவாசகம் படம்: ரவி சிங்காரம்

இறுதிச் சுற்றின் முதல் அங்கமான தயாரிக்கப்பட்ட பேச்சில், தமிழ் அறிஞர்களின் அழகுசார்ந்த அருங்கூற்றுகளை ஆராய்ந்து, இன்றைய நடைமுறைக்கு ஏற்புடையவாறு போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

நிரந்தரமற்ற புற அழகை புறக்கணித்து அக அழகைப் பார்ப்பதோடு, இயற்கை, தாய்மை, காதல், உழைப்பு போன்றவற்றில் உள்ள விதவித அழகுகளையும் விவரித்தனர்.

“எது நம் ஐம்புலன்களையும் மகிழ்வித்து நம்மை அறியாமலேயே ஒரு புன்சிரிப்பைத் தோற்றுவிக்கிறதோ அதுவே அழகு,” என்று தம் கருத்தையும் தெரிவித்தார் சிறப்பு விருந்தினர் வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு ஜோதி.மாணிக்கவாசகம்.

போட்டியாளர்களை ஊக்குவிக்க பல பெற்றோரும் பார்வையாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் வந்திருந்தனர். படம்: ரவி சிங்காரம்

இறுதிச் சுற்றின் இரண்டாம் அங்கமான உடனடிப் பேச்சில், ‘இன்றைய இளையர்களும் தமிழும்’ என்ற தலைப்பு மாணவப் பிரிவுக்கும் ‘தமிழ் காட்டும் தலைமைத்துவம்’ என்ற தலைப்பு பொதுப் பிரிவுக்கும் வழங்கப்பட்டன.

30 நிமிடங்களுக்குள் மையக் கருத்துகளை அடையாளங்கண்டு இரு நிமிட பேச்சுகளைத் தயாரித்து வழங்கினர் போட்டியாளர்கள்.

பள்ளியில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழல், தமிழ் பேச கூச்சம், தமிழ்ப் பாடல்களில் ஆங்கிலப் புழக்கம் போன்றவற்றை இளையர்களிடத்தில் தமிழ்ப் புழக்கம் குறைவதற்குக் காரணங்களாக சுட்டினர் மாணவர்கள்.

எனினும், தொழில்நுட்பங்களை எளிதாகக் கையாளும் இளையர்கள் நவீன உலகில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான உத்திகளையும் கொண்டுள்ளனர் என்றனர்.

சீரிய உத்வேகத்தோடு பேசிய மாணவர்கள், தமிழின் புழக்கத்தை இளையர்களிடத்தில் அதிகரிப்பதற்கான ஆற்றலும் தன்னம்பிக்கையும் தம்மிடத்தில் இருப்பதை நிரூபித்தனர்.

பொதுப் பிரிவுப் பேச்சாளர்கள், தமிழ் கூறிய தலைமைத்துவம் நாம் இன்று மதிக்கும் பொருள், பதவி, திருமணம் அல்ல - ஒழுக்கமும் மனிதநேயமுமே என்ற கருத்தை முன்வைத்தனர்.

மாணவப் பிரிவில் ஆறு வெற்றியாளர்களும் பொதுப் பிரிவில் ஐந்து வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

பொதுப் பிரிவில் பங்குபெற்ற போட்டியாளர்களும் நடுவர்களும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியாளர் திருமதி. வானதி பிரகாஷ் முதல் பரிசைப் பெற்றார். படம்: ரவி சிங்காரம்

மாணவப் பிரிவில் சிஎச்ஐஜே தோ பாயோ உயர்நிலைப் பள்ளியின் உயர்நிலை ஒன்று மாணவி சில்வியா ஆரோக்கிய ரஞ்ஜனா முதல் பரிசைப் பெற்றார். பொதுப்பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியாளர் திருமதி. வானதி பிரகாஷ் முதல் பரிசைப் பெற்றார்.

வெற்றி பெற்றோருக்கு பற்றுச்சீட்டுகளும் பங்குபெற்றோர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திரு ஜோதி.மாணிக்கவாசகம், இளையர்களிடத்தில் பொதிந்துள்ள தமிழ்ப் பற்றையும் திறன்களையும் வெளிக்கொணர்வதன் அவசியத்தையும் இதற்காக தமிழ் இளையர் விழா ஆற்றும் பங்கையும் பாராட்டினார்.

“பேச்சுப் போட்டிகளில் பகிர்ந்துகொள்ளும் தகவல்களும் அறிஞர்களின் மேற்கோள்களும் என்றாவது நமக்கும் பயன்படும்,” எனக் கூறி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மேன்மேலும் பங்குபெற பொதுமக்களை ஊக்குவித்தார் நிகழ்ச்சி நெறியாளர் செல்வி விஷ்ணு வர்தினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!