சாதனைகளைக் கொண்டாடிய சிண்டா இளையர் விருது 2023

இரட்டையர்களான தீபனும் திவ்யனும் இவ்வாண்டின் சிண்டா இளையர் விருதைப் பெற்றுள்ளனர். வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், சிண்டா என்ற ஊன்றுகோல் மட்டும் இல்லையெனில் தங்களின் வாழ்வு மேம்பட்டிருக்காது என்று உணர்ச்சிபொங்க கூறினர்.

தற்போது 26 வயதுடைய இருவருமே விநியோகத் தொடர் துறையில் பட்டயப்படிப்பை முடித்துள்ளனர். தீபன் சில மாதங்களுக்கு முன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். திவ்யன் வேறொரு தனியார் நிறுவனத்தில் அடுத்த மாதம் பணியில் சேர உள்ளார். 

இரண்டு மூத்த சகோதரிகளுக்குப் பின் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு இளம் வயதிலிருந்தே ஆஸ்த்துமா பிரச்சினை இருந்தது. தொழில்நுணுக்கரான தந்தை, குடும்பத்தலைவியான தாய் என ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இக்குடும்பம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. 

“பல நாள்கள் உணவு போதாத நிலையில் சொற்ப உணவைப் பகிர்ந்து உண்டு பசியாறாமல் இரவில் தூங்கினோம். கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு, மாதாந்தரக் குடும்பச் செலவு என ஒவ்வொரு மாதத்தையும் மிகுந்த சிரமங்களுடன் கடந்தனர் எங்கள் பெற்றோர்,” என்று பகிர்ந்துகொண்டார் தீபன் ஸ்ரீதரன். 

நெருக்கடிகளைக் கடந்தோம்

இச்சூழலில் சிண்டாவின் அறிமுகம் இவர்களுக்குக் கிடைத்தது. இரட்டையர்கள் தொடக்கநிலை மூன்றில் படித்தபோது ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்புகளில் சேர்ந்தனர். 

“ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் சிண்டா வழங்கும் உதவித்தொகை உள்பட ஏனைய உதவிகளுடன் மட்டுமே கல்வியைச் சுமுகமாகத் தொடர்ந்தோம்,” என்று நினைவுகூர்ந்தார் திவ்யன் ஸ்ரீதரன். 

2015ஆம் ஆண்டு சிண்டாவின் இளையர் அணியில் இணைந்தனர் இந்த இரட்டையர். தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களில் பங்கேற்பாளராக இணைந்து சில மாதங்களிலேயே ஒருங்கிணைப்பாளராகவும் முன்னேறினர். 

“எங்களின் பொருளாதார நிலையால் இளம் வயதிலிருந்தே ஒருவித தாழ்வு மனப்பான்மை எங்களுக்குள் உருவானது. அதைப் போக்கிப் பிறருடன் துணிந்து பேசுவதற்கும் பழகுவதற்கும் வாழ்க்கையைச் சுயமாகச் சந்திக்கும் துடிப்புமிக்க இளையர்களாக எங்களை ஆளாக்கியதற்கும் சிண்டாவின் இளையர் அணிக்குதான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்,” என்றார் தீபன். 

“தற்போது நல்ல நிலையில் வாழ்வைத் தொடங்கவுள்ள நாங்கள், தொடர்ந்து எங்களின் பங்களிப்பை சிண்டாவின் மூலம் வருங்கால இளையர்களுக்கும் சமூகத்திற்கும் நிச்சயம் அளிப்போம்,” என்று உறுதியுடன் கூறினர் இந்த இரட்டையர். 

இந்த இரட்டையருடன் சிண்டா விருது பெற்ற 150 இளையர்களில் 19 வயது கார்த்திகா குமரனும் ஒருவர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிண்டாவின் பல நடவடிக்கைகளில் தொண்டூழியராக இருக்கும் இவர், இவ்வாண்டின் ‘வேலடிக்டோரியன்’ என்ற பெருமைக்கும் உரியவர்.   

வாழ்வியல் அம்சங்களை அறிந்தோம்

உடலுறுதித் துறை தொடர்பில் மத்திய தொழில்நுடப்க் கல்விக்கழகத்தில் நைட்டெக் படிப்பை முடித்துள்ள இவர், சிண்டாவின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்பாளராக இருந்து இன்று ஒருங்கிணைப்பாளராகவும் பங்காற்றி வருகிறார்.  

“கல்வியைத் தாண்டி ஓர் இளையர் இவ்வுலகிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கான பல்வேறு வாழ்வியல் அம்சங்களை சிண்டா வழங்கிய பல்வேறு அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டேன். என்னைப் போன்ற சக இளையர்களுடன் இணைந்து சமூகம் பற்றிய மாபெரும் புரிதலைப் பெறும் ஒரு சிறந்த தளமாக சிண்டாவின் இளையர் வட்டம் உள்ளது,” என்றார் கார்த்திகா.  

தயக்கத்தைக் கைவிட்டோம்

இவ்வாண்டு இளையர் விருதைப் பெற்ற மற்றொரு துடிப்புமிக்க இளையர், சிங்கப்பூர் ஆயுதப் படையில் முழுநேரச் சேவை வீரராகப் (Regular) பணியாற்றிவரும் சர்வீந்தர்ராஜ் தமிழ்செல்வம், 23. 2014ஆம் ஆண்டு சிண்டாவின் காற்பந்து அணியில் இவர் இணைந்தார். 

தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இவருடைய அணி வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. அங்கு கிடைத்த பயிற்சிகளும் அனுபவங்களுமே இன்று தன்னை சிங்கப்பூர் ஆயுதப் படையில் இணையும் அளவிற்கு வளர்த்ததாகக் கூறினார் சர்வீந்தர்ராஜ். 

“வெளி உலகத்தை அணுகுவதில் இளையர்களுக்கு இருக்கும் தயக்கம், உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்களைக் கையாள்வதில் சந்திக்கும் சிரமம் எனப் பல கோணங்களில் இளையர்களை வலிமையாக்கும் ஒரு தளமே இது,” என்றார் அவர். தன்னைப்போல் பங்குபெற்று பயன்பெறுமாறு மற்ற இளையர்களுக்கு அழைப்பும் விடுக்கிறார் இவர்.  

தன்னம்பிக்கையைப் பெற்றோம்

சிண்டாவின் இளம் பெரியவர்கள் சமூகம் (SINDA’s Young Adults Community) என்ற திட்டத்துக்குத் தலைவரான 29 வயது ஷர்மிஷ்டா சிவராமகிருஷ்ணன், இவ்வாண்டின் இளையர் விருது பெற்ற மற்றொருவர்.  

இப்பிரிவினர் 25 வயது முதல் 35 வயது வரையிலான இளையர்களை மேம்படுத்தும் நோக்கில் 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 

“குடும்பம், பணி, சுயமேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஒரே நேரத்தில் சமாளிக்கத் தடுமாறும்போது, இத்திட்டம் கைகொடுக்கிறது,” என்று கூறினார் ஷர்மிஷ்டா. 

பொறுப்பை உணர்ந்தோம்

“இந்த விருது தொடர்ந்து ஆக்ககரமான பாதையில் பயணிப்பதற்கான ஊக்கத்தையும் பொறுப்புணர்வையும் கூட்டியுள்ளது,” என்று கூறினார் இவ்விருதினைப் பெற்ற மற்றொருவரான தமிழ்முரசு நாளிதழ் செய்தியாளர், 29 வயது ரவி சிங்காரம். 

சிண்டா இளையர் அணியில் 2014ஆம் ஆண்டு இணைந்தது முதல் பல்வேறு தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இவர், தேசிய சேவை முடித்த பின்னர் சமூகத்தை எதிர்கொள்ள தயங்கினார். ஒருவித அச்ச உணர்வுடன் பிறர் தன்னை குறைவாக எடைபோடக்கூடும் என்ற மனப்பான்மையாலும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். 

“என் வாழ்வின் ஆகக் கடுமையான நாள்களிலிருந்து முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பாதை அமைத்தது சிண்டா. பல இளையர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபடும் வாய்ப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. அப்பாதையில் பல அரிய நட்புகளையும் பெற்றேன். அதனால் சிறு ஆர்வமாகத் தொடங்கிய தொண்டூழியம் இன்று எனக்குள் வேரூன்றிவிட்டது,” என்று கூறினார் சிங்காரம். 

வாழ்வில் பிடிமானம் பெற்றோம்

இவ்வாண்டின் விருதினைப் பெற்றவர்களுள் ஒருவரான சுகாதாரத் துறையில் பணியாற்றும் 31 வயதாகும் தாட்சாயினி ஸ்கந்தகுமார், “சிண்டா இளையர் அணியுடன் இணைந்து இந்திய இளையர்களை ஒன்றுதிரட்டி தேசிய அளவில் சிறந்த தலைமைத்துவப் பண்புகள் மிக்க இளையர் பட்டாளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்,” என்று கூறினார்.

‘சிண்டா இளையர் விருது’ விழா 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. இம்மாதம் 3ஆம் தேதி ‘சாஃப்ரா ஈஷூன்’ உள்ளரங்கில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் துணை அமைச்சரான இணைப்பேராசிரியர் டாக்டர் முஹமட் ஃபைஷல் இப்ராஹிம் கலந்துகொண்டார்.

சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “சிண்டாவின் முயற்சிகள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 2,500 இந்திய இளையர்கள் பயனடைகிறார்கள். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலும் சரிசமமான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. அவர்கள் வளர்ந்து தொடர்ந்து சமூகத்திற்குத் தங்கள் பங்களிப்பைப் பொறுப்புணர்வுடன் ஆற்றுவதையும் காண்கிறோம்,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!