இளையர் பார்வையில் திருமணம், குழந்தைப்பேறு

திருமணம் செய்துகொள்வதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாக கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வு கண்டறிந்து உள்ளது.

குடும்பம், நல்வாழ்வு, வேலை, இதர வாழ்க்கை அம்சங்கள் ஆகியவை குறித்து சிங்கப்பூரர்களின் மனப்போக்கைத் தெரிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வேலையில் கவனம் செலுத்தி, அதில் பதவி உயர்வு பெற்று வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கே இளம் சிங்கப்பூரர்கள் முன்னுரிமை தருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, குழந்தை வளர்ப்பால் ஏற்படும் செலவுகள், மனவுளைச்சல் ஆகியவை குறித்து அவர்கள் அக்கறை தெரிவித்தனர்.

ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 70 விழுக்காட்டினர் திருமணம் தேவையற்றது என்று தெரிவித்தனர்.

திருமண பந்தத்தில் இணைந்தாலும் குழந்தைகள் பெற்றெடுக்கத் தேவையில்லை என்று ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 72 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

இருப்பினும், திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 68 விழுக்காட்டினர் கூறினர்.

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இளையர்கள் மூவர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

தேவைகளில் மாற்றம்

கெஜ ஷ்ரையா இராஜ்குமார், 21,

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி

திருமணம் செய்து குழந்தை பெறுவதே மனித சமுதாயம் கட்டமைத்துள்ள வாழ்க்கை முறையாகும். ஆனால், நிச்சயமற்ற அண்மைய உலகச் சூழலால் திருமணமும் குழந்தைகளும் அவசியமா என்ற கேள்வி என் மனதில் தோன்றுகிறது.

இளையர்களின் இலக்குகள் வேலையில் முன்னேறுவதைச் சார்ந்து இருப்பதால் திருமணம் செய்து, குடும்பம் அமைப்பது அக்குறிக்கோள்களுடன் ஒத்துப்போவதில்லை.

அதிகரித்து வரும் செலவுகளால் குறைவான பொறுப்புகளைக் கொண்ட மாணவியாக இருந்தாலும் எனது நிதியை நிர்வகிப்பது எனக்குக் கடினமாக உள்ளது. எனவே, இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளைப் பெற்று குடும்பம் நடத்துவதைப்பற்றி யோசிப்பது என் வாழ்வில் முன்னுரிமை பெறவில்லை.

ஒரு தம்பதியாக வீடு வாங்குவது, வீட்டை நிர்வகிப்பது போன்ற பலவற்றுக்கும் பணம் தேவை. அதற்குப் பல ஆண்டு சேமிப்பு அவசியம்.

இத்தடைகளைக் கடந்து திருமணம் செய்துகொண்டாலும் குழந்தைகளை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்பு.

அவர்களை வளர்த்து, ஆதரித்து ஆளாக்குவதற்கு அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பராமரிப்பாளரை மட்டும் நம்பியிருந்தால் நம்மால் சிறந்த பெற்றோராக இருக்க முடியாது என்பதே என்னுடைய கருத்தாகும்.

முதல் தலைமுறை சிங்கப்பூரராக இருப்பதால் என் சகோதரனுக்கும் எனக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு எனது பெற்றோர் பல தியாகங்களைச் செய்து உள்ளனர்.

அவர்களுடைய தியாகம் வீண் போகக்கூடாது என்ற எண்ணத்தால் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டிய அவசியம் ஒருவித மன அழுத்தத்தைத் தருகிறது.

சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலும் எதையும் கைப்பற்ற வேண்டும் என்ற சிங்கப்பூரர்களின் அதீத ஆர்வமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. 

ஒரு குடும்பத்தைத் தொடங்குவதைப்பற்றி நினைப்பதற்கு முன் என் பெற்றோரை முதலில் வசதியாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த நிலையை அடைந்த பிறகு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன் உலகைச் சுற்றிப் பார்க்கவும் எனக்கெனச் சிறிது நேரம் ஒதுக்கவும் விரும்புகிறேன்.

திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. ஆனாலும், இப்போதைக்கு அது எனக்கு ஏற்ற வாழ்க்கைமுறை அல்ல என்றுதான் நம்புகிறேன். 

எனது தாயார் தமது முழுநேர வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், வீட்டை நிர்வகிப்பதையும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பணிஇயைத் தொடங்கிவிடுவார். பழமைவாத பாலின பாகுபாட்டினால் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்புகளை மனைவியே கூடுதலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காலமாக இந்த நிலை மெல்ல மாறி வருகிறது.  ஆண்களும் குடும்பம் பொறுப்புகளைச் சமமாகப் பிரித்துச் செயல்பட முன்வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், நமது வருங்காலக் கணவர் அவ்வாறு நடந்துகொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

திருமணமும் குழந்தைகளும் இல்லாத வாழ்க்கை நமது சமுதாயத்தில் அதிகம் ஏற்கப்படாத ஒன்று என்றாலும் அதிலும் ஒருவர் மனநிறைவைக் காணலாம் என்று நான் நம்புகிறேன்.

சமுதாய ஆதரவு வேண்டும்

ப. ஸ்ரீசரன், 21

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை மாணவர்

சிங்கப்பூரில் இன்றைய இளையர்கள் வேலை, மேல்படிப்பு, அவற்றால் ஏற்படும் மன உளைச்சல் போன்ற காரணங்களால் துணை தேட நேரமில்லை என்று கருதுகின்றனர். தொழில்நுட்ப யுகத்தில் இருப்பதாலும் பொருளியல் நிச்சமற்ற தன்மையாலும் இளையர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். வாழ்க்கையில் வசதியான நிலையை அடையும் வரையில் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்.

கொள்ளைநோய் பலரது கனவுகளை உடைத்ததுடன், எண்ண ஓட்டத்தையும் மாற்றியது. பெரும்பாலான இளையர்களின் எதிர்காலக் குறிக்கோள்கள் பாதிப்படைந்தன. அதனால், இளையர்கள் கொள்ளைநோய்க்குப் பிந்திய காலத்தில் தங்களது லட்சியத்தை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இளையர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்குத் தயங்குவதாகவும் ஆய்வில் தெரியவந்தது. மேலும், 64% இளையர்கள் தனிமையில்  இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

ஆகவே, திருமணம் செய்துகொள்ள இளையர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதற்கு இணையம் வழியாக மட்டுமல்லாமல் நேரடியாகவும் இளையர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.

இன்றைய இளையர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். சவால்மிக்க வாழ்க்கைச் சூழல்களில் இருந்து மீண்டு வந்தால் மட்டுமே இளையர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவர்.

அதனால், நம் சமுதாயம் நமது இளையர்களுக்குத் தேவையான ஆதரவை அளித்தால் அவர்கள் திருமணம் பற்றியும் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றியும் தீவிரமாக யோசிப்பார்கள் என்று கருதுகிறேன்.

விரிவான புரிதல் வேண்டும்

யாழினி கமலக்கண்ணன், 17,

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, மின்னணு பொறியியல் துறை மாணவி

இளையர்கள் இன்று தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்துக்கும் முன்னுரிமை கொடுப்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. 

திருமணமும் குழந்தைப் பிறப்பும் அக்காலத்தில் அடிப்படைப் பொறுப்புகளாகக் கருதப்பட்டன. ஆனால், அவற்றால் ஏற்படும் செலவுகளும் மன அழுத்தமும் இக்கால இளையர் சிலருக்குச் சுமையாகத் தெரிகின்றன. 

இளைய தலைமுறையினரிடையே நிலவும் கவலைகளில் மனநலம் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. 

தங்களின் பள்ளிகளிலும் வேலையிடங்களிலும் இது தொடர்பான கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று இளையர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

சிங்கப்பூர் முன்னேற்றம் அடைவதற்காக ​​கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிடும்போது இளையர்களின் தேவைகள் மற்றும் கவலைகளைப் பூர்த்தி செய்யும் சூழலை உருவாக்குவதை மனதில் கொள்ள வேண்டும். 

மாறிவரும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு, திருமணம், பிள்ளைகள் தொடர்பான சிங்கப்பூர் இளையர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணங்களைப் பற்றிய விரிவான புரிதல் தொடர்ந்து தேவைப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!